29.7 C
Chennai
May 20, 2024
முக்கியச் செய்திகள் உலகம் கட்டுரைகள்

இளவரசர் சார்லஸ் – அரசர் மூன்றாம் சார்லஸ் ஆன கதை!


பி.ஜேம்ஸ் லிசா

கட்டுரையாளர்

மறைந்த ராணி எலிசபெத் பிரிட்டனின் ராணியாக பொறுப்பு ஏற்பதற்கு முன்பே அவருக்கும் மன்னர் பிலிப்புக்கும் 1947 ஆம் ஆண்டு நவம்பர் 20 ஆம் தேதி திருமணம் நடைபெற்றது. இவர்களின் திருமணம் இரண்டாம் உலகப்போரால் பொலிவிழந்திருந்த லண்டன் மாநகருக்கு விழாக்கோலம் கூட்டிதோடு, இனி நம் நாட்டில் மிகப்பெரிய மாற்றம் நிகழ போகிறது என்ற நம்பிக்கையையும் மக்களிடத்தில் ஏற்படுத்தியது.

இந்த சூழலில் தான் திருமணம் முடிந்த அடுத்த ஆண்டு இத்தம்பதியினருக்கு 1948 ஆம் ஆண்டு நவம்பர் 14 ஆம் தேதி முதல் குழந்தையாக பிறந்தார் இளவரசர் சார்லஸ். அவர் பிறந்த போது இனி பிரிட்டனில் மன்னராட்சியை வழிநடத்த போகும் அடுத்த மன்னர் இவர் தான் என மக்களால் போற்றப்பட்டார். பின்னர் இளவரசர் சார்லசுக்கு பிறகு ஆணி, எட்வர்ட், ஆண்ட்ரூ என மொத்தம் நான்கு குழந்தைகளுக்கு தாயானார் ராணி எலிசபெத், இதற்கிடையில் அப்போது மன்னராக இருந்த எலிசபெத்தின் தந்தை எட்வர்ட் நுரையீரல் புற்றுநோய் காரணமாக உயிரிழக்க, நாட்டில் அடுத்து யார் மன்னர் ஆவார், இனி எப்படி நாட்டில் ஆட்சி நடக்கும் என்ற அச்சம் மக்களிடையே ஏற்பட்டது.

நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்

காரணம், அதுவரை பிரிட்டன் அரச குடும்பத்தை ஏற்று நடத்துவதற்கான பொறுப்புகளையும் மற்றும் இங்கிலாந்து தேசத்தை முன்னின்று நடத்துவதற்கான எந்த அனுபவமும் எலிசபெத் ராணி பெற்றிருக்கவில்லை என்பதால்தான். இப்படிப்பட்ட சூழ்நிலையில் தான் 1953ல் பிரிட்டனின் ராணியாக இரண்டாம் எலிசபெத் பொறுப்பேற்றுக் கொண்டார். அப்போது ஐந்து வயது நிரம்பிய சிறுவனாக இருந்த சார்லஸ் தன்
தாயின் முடிசூட்டு விழாவின்போது உடன் இருந்தார்.

ஆனால் அதன் பிறகு தான் சார்லஸுக்கும், அவரின் தாய்க்குமான இடைவெளி அதிகரிக்க தொடங்கியது. இரண்டாம் உலகப் போரின் தாக்கத்தால் மீண்டெழுந்து கொண்டிருந்த பிரிட்டனை வலுவாக காலூன்றி நிற்கச் செய்ய ராணி இரண்டாம் எலிசபத்தின் இருப்பு நாட்டிற்கு அதிக அளவில் தேவைப்பட்டதால், தனது பாட்டி எலிசபெத் போஸ் அரவணைப்பிலும் ஏராளமான குழந்தை வளர்ப்பு தாதிகள் மத்தியிலும்`வளர தொடங்கினார் சார்லஸ். இப்படி தாயுடன் ஆன பிரிவும் பாட்டியின் அதிகப்படியான
அன்பும் சார்லஸை ஒரு பிடிவாதமான குழந்தையாக வளர்த்தெடுத்தது.

இதற்கிடையில் தன்னுடைய எட்டு வயதில் மேற்கு லண்டனில் உள்ள ஹில் ஹவுஸில் தனது பள்ளி படிப்பை தொடங்கினார் சார்லஸ். ஆனால் சார்லஸின் குறும்புத்தனம் காரணமாக அவரின் தந்தை பிலிப் ஸ்காட்லாண்டில் தான் படித்த கார்டன் ஸ்டோன் பள்ளியில் அவரை
சேர்த்தார். மிகவும் கடுமையான கட்டுப்பாடுகளைக் கொண்ட கார்டன் ஸ்டோன் பள்ளியில் மாணவர்கள் குளிர்காலத்தில் தங்களை தகவமைத்துக் கொள்வதற்காக குளிர்ந்த நீரில் தான் குளிக்க வேண்டுமாம். மேலும் இரவு நேரங்களில் ஜன்னல்களை திறந்து வைத்துக்கொண்டு தான் தூங்க வேண்டுமாம். இப்படி பல கடுமையான கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டிருந்ததால் இந்த கொடுமைகளை எல்லாம் தாங்கிக் கொள்ள முடியாமல் அழுது கொண்டு சார்லஸ் அரண்மனைக்கு வந்தாலும் தந்தை பிலிப்ஸ் தன்னுடைய முடிவில் எந்த ஒரு மாற்றமும் இல்லாமல் உறுதியாகவே இருந்துள்ளார்.

இதனால் படிப்பு விளையாட்டு என எந்த ஒரு விஷயத்திலும் பின்தங்கிய மாணவராகவே இளவரசர் சார்லஸ் இருந்து வந்ததோடு, பள்ளியில் இருந்த நாட்களை விட நான் வீட்டில் இருப்பதையே அதிகம் விரும்பினேன் என பின்னாளில் இளவரசர் சார்லஸ் பல இடங்களில்
கூறியிருக்கிறார். இதன் பின் கேம்பிரிட்ஜில் உள்ள டிநிடி கல்லூரியில் தொல்லியல், மாந்தவியல் மற்றும் வரலாறு ஆகிய துறைகளில் நிபுணத்துவம் பெற்றார் சார்லஸ். பின்னர் வேல்ஸ் பல்கலைக்கழகத்தில் சேர்ந்த சார்லஸ் வரலாறு மற்றும் இலக்கியத்தில் இளங்கலை பட்டம் பெற்றார். முன்னதாக கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழகத்தில் படித்துக் கொண்டிருந்தபோதே 1969இல் தன் தாயான ராணி இரண்டாம் எலிசபெத் முன்னிலையில் பிரிட்டன் ஆளுமைக்கு உட்பட்ட வேல்ஸ் பிரதேசத்தின் இளவரசராக அறிவிக்கப்பட்டார்.

அப்போது ராணி இரண்டாம் எலிசபெத்தின் கைகளை பற்றி கொண்டு உங்கள் நம்பிக்கையையும் உண்மையும் காப்பேன், மக்களுக்காக வாழவும், சாகவும் செய்வேன் என உறுதிமொழி எடுத்துக் கொண்டார். தான் எடுத்துக் கொண்ட உறுதிமொழிக்கு ஏற்றார் போலவே வேல்ஸ் பிரதேசத்திற்கு 53 ஆண்டுகாலம் இளவரசராக இருந்துள்ளார் சார்லஸ். அவரின் ஆட்சியில் வேல்ஸ் பிரதேசம் இங்கிலாந்து நாட்டின் முக்கிய பகுதிகளில் ஒன்றாக மாற்றம் கண்டது.

இதன்பின் 1971 இல் பிரிட்டிஷ் ராணுவத்தில் இணைந்த இளவரசர் சார்லஸ் ராயல் விமானப்படையின் விமானியாக தகுதி பெற்றார். ராணுவத்தில் இருந்தபோது பல வித்தியாசமான சாகசங்களை செய்து பார்க்கும் சார்லஸ்க்கு அதிரடி நாயகன் எனும் பட்டப்பெயரும் அப்போது உண்டு. பின்னர் நீர்மூழ்கிக் கப்பல்களில் பயிற்சி பெற்ற சார்லஸ் முக்குளிப்பவராகவும், கமாண்டோவாகவும் பிரிட்டிஷ் கப்பல் படையில்
உயர்ந்தார். இதையடுத்து வெவ்வேறு வகையான கப்பல்களில் பணியாற்றிய பிறகு ராயல் கடற்படையில் இருந்த “மேன் ஹன்டர் எச்.எம்.எஸ் ப்ரோனிங்டன்” என்ற கப்பலின் கேப்டனாகவும் உயர்வு பெற்றார்.

இதே காலகட்டத்தில் தான் இளவரசர் சார்லஸ், பல பெண்களுடன் ஏற்பட்ட நெருக்கத்தின் காரணமாக ஒரு ப்ளேபாளையாகவும் மாறிப்போனார். அதிலும் குறிப்பாக 1970 காலகட்டங்களில் சார்லஸ் தனது பெண் தோழிகளுடன் இருக்கும் புகைப்படங்கள் தான் அன்றைய பிரிட்டன் பத்திரிக்கைகளின் செய்திகளாக மாறிப்போனது. தில் இளவரசர் சார்லஸின் ஆசை நாயகிகளின் பட்டியலில் டேவினா ஷெஃபீல்ட், கரோலின் லாங்மேன், ரோஸ் ஹான்பரி, அமண்டா நாட்ச்புல், சப்ரினா கின்னஸ், லேடி ஜேன் வெல்லஸ்லி, அன்னா வாலஸ் போன்றவர்கள் மிக முக்கிய நபர்களாக அறியப்பட்டார்கள்.

இவர்களில் லேடி ஜேன் வெல்லஸ்லி மற்றும் அன்னா வாலஸ் ஆகியோரை திருமணம் செய்துக்கொள்ள இளவரசர் சார்லஸ் நினைத்தாலும், அவர்கள் அதனை நிராகரித்தார்கள். இதற்கு காரணம் பல பெண்களுடன் சார்லஸ் நட்புறவில் இருந்தாலும், அதையெல்லாம் பெரிதாக எடுத்துக்கொள்ளாத அவர்கள் கமில்லா பார்க்கர்வுடன் மட்டும் சார்லஸ் ஆழமான நெருக்கத்தை கொண்டிருந்ததால்தான். ஏனெனில் கமிலாவுக்கு பிரிட்டன் அரச குடும்பத்தின் படைப்பிரிவில் உயர் பொறுப்பில் இருந்த ஆண்ட்ரூ பார்க்கர் பவுல்ஸ்வுடன் திருமணமாகி இருந்ததும் இவர்களது உறவு நீடித்தது ஆர்க்ளுக்கு பிடிக்கவில்லை. இந்த தருணத்தில்தான் டயானாவின் சகோதரி சாராவுடன் தொடர்பில் இருந்த சார்லஸ்க்கு 16 வயது நிரிம்பியிருந்த டயானாவுடன் அறிமுகம் ஏற்பட்டது.

இதன்பின்னர் வழக்கம்போல் சார்லஸின் காதல் வலையில் விழுந்த டயானா இந்த முறை இவர்களின் உறவு திருமணம் வரை சென்றது. இதனால் தனது 20தாவது வயதிலேயே, 32 வயதான சார்லஸை 1981 ஆம் ஆண்டு திருமணம் செய்துக்கொண்டார். இந்த திருமண விழா மிகப்பிரபலமாக பேசப்பட்டாலும், அவர்களது காதல் வாழ்க்கை சில வருடங்களிலேயே முடிவுக்கு வந்தது. காரணம் கமிலாவுடன் சார்லஸ்க்கு இருந்த தொடர்பு டயானாவுக்கு தெரியவந்ததால்தான். அப்போது தன்னுடைய திருமண வாழ்க்கை தொடர்பாக பேசிய டயானா, “இளவரசர் சார்லஸ் தன்னுடைய அரச பொறுப்புகளை தன்னிடம் ஒப்படைத்துவிட்டு, மற்ற பெண்களுடன் சுதந்திரமாக இருக்க நினைத்தார்.

அதில் முக்கியமானவர் காமிலாதான் என சார்லஸ் – கமிலா இடையேயான ரகசிய உறவை டயானா ஊடகங்களின் முன் போட்டு உடைத்தார். இதற்கிடையில் டயானா – சார்லஸ் தம்பதிகளுக்கு வில்லியம் மற்றும் ஹாரி என இரண்டு மகன்கள் பிறந்திருந்த சமயத்தில், பல்வேறு மனப்போராட்டங்களுடன் வாழ்ந்து வந்த டயானாவுக்கு 1996ம் வருடம் சார்லஸிடம் இருந்து விவாகரத்து கிடைத்தது. அதேபோல் சார்லஸ் டயானா விவாகரத்து பெறுவதற்கு ஓராண்டுக்கு முன்புதான் கமிலா தன்னுடைய கணவர் ஆண்ட்ரூவிடம் இருந்து விவாகரத்து பெற்றிருந்தார்.

 

இப்படியோரு குழப்பமான சூழல் நிலவி வந்த நேரத்தில்தான், 1997-ஆம் ஆண்டு டயானா யாரும் எதிர்பார்க்காத நேரத்தில் ஒரு சாலை விபத்தில் உயிரிழந்தார். உலகையே பேர் அதிர்ச்சிக்கு உள்ளாக்கிய டயானாவின் இந்த மரணம் குறித்து பல்வேறு சர்ச்சையான கருத்துகள் அப்போது நிலவி வந்த நேரத்தில் தான், 1999ம் ஆண்டு கமிலாவும் சார்லஸம் ஒன்றாக பொது நிகழ்ச்சிகளில் தோன்ற ஆரம்பித்தனர். பின் கடும் போராட்டத்துக்கு பின்னர் ராணி 2ம் எலிசபெத்தின் அனுமதிக்கு பிறகு, கடந்த 2005 ஆம் ஆண்டு தங்களுடைய 35 ஆண்டுகால சர்ச்சைக்குரிய காதல் வாழ்க்கையை திருமணத்தில் முடித்தனர்.

இதன்பின்னர் இளவரசர் சார்லஸின் தனிப்பட்ட வாழ்க்கை தலைப்பு செய்திகளில் இடம் பெற்ற நிலை மாறி, பிரிட்டன் நாடாளுமன்றத்தில் அவரது அரசியல் செயல்பாடுகள் முக்கிய செய்திகளாக மாறிப்போனது. குறிப்பாக பிரிட்டன் அரச குடும்பத்தைச் சேர்ந்தவர்கள் நேரடியாக அரசியல் தலையீடுகளில் ஈடுபடக்கூடாது என்பது விதியாக இருந்த போதும், அந்த விதிகளை மீறி 2004 மற்றும் 2005களில் இளவரசர் சார்லஸ் தன் கைகப்பட “BLACK SPIDER MEMOS” என்ற பெயரில் பிரிட்டன் நாடாளுமன்றத்துக்கு அனுப்பிய கடிதங்கள் ஆட்சியாளர்களிடம் அதிருப்தியை ஏற்படுத்தியது.

குறிப்பாக அந்த கடிதங்களில் ஈராக் போரில் ஈடுபட்ட இங்கிலாந்து வீரர்களுக்கு அதிநவீன ஆயுதங்கள் வழங்க வேண்டும். மாற்று மருத்துவம், பருவநிலை மாற்றம் குறித்த சில விஷயங்கள் என அடுத்தடுத்த பல கருத்துகளை சார்லஸ் புகுத்தியதால், பிரிட்டன் நாடாளுமன்றத்தில் குழப்பம் நீடித்தது. மேலும் சார்லஸ் தேவையில்லாமல் அரசியல் விஷயங்களில் மூக்கை நுழைப்பதாகவும் விமர்சிக்கப்பட்டார். இதன்காரணமாக தற்போது மன்னராக பொறுப்பேற்ற சார்லஸின் அரசியல் தலையீடுகள் அதிகரிக்கலாம் என்ற அச்சம் ஆட்சியாளர்கள் மத்தியில் எழுந்துள்ளது.

உலக முழுவதுதிலும் 800க்கும் மேற்கட்ட தொண்டு நிறுவனங்களில் தலைவராக உள்ள மன்னர் 3ஆம் சார்லஸ், ஒருபக்கம் வெற்றிகாரமாக தொண்டு நிறுவனம் நடத்திவந்தாலும் தன்னுடைய குடும்ப விஷயத்தில் தோல்வி கண்டவராகவே உள்ளார். குறிப்பாக பாலியல் குற்றச்சாட்டு எழுந்துள்ள சகோதரர் ஆண்ட்ரூ விஷயத்தில் மௌனம் காப்பது, மற்றொன்று 2019ல் பிரிட்டனின் அரச பதவிகளில் இருந்து விலகிய தனது இரண்டாவது மகன் ஹாரி, மருமகள் மேகன் ஆகியோரின் விஷயத்தில் சார்லஸின் செயல்பாடு உலகளவில் கவனிக்கப்பட்டது. தற்போது இங்கிலாந்து மன்னராகியுள்ள 73 வயதான மன்னர் மூன்றாம் சார்லஸிற்கு இன்று முடிசூட்டு விழா நடைபெறுகிறது.

15ம் நூற்றாண்டிலேயே ராணி 2ம் எலிசபெத்தின் மரணத்தை, பிரெஞ்சு ஜோதிடர் மைக்கேல் டி நாஸ்ட்ரேடேம் என்பவர் கணித்து எழுதியுள்ளார். அதில் ராணியின் மறைவுக்கு பிறகு வரும் மன்னர் குறுகிய காலம் மட்டுமே ஆட்சி செய்வார் என்றும், மன்னர் பொறுப்புக்கே வரமாட்டார் என கருதப்படும் ஒருவர் பிரிட்டன் மன்னர் ஆவார் எனவும் 400 ஆண்டுகளுக்கு முன்பே கணித்து கூறியுள்ளார். தற்போது அவரின் அந்த கூற்று விவாத பொருளாக மாறியுள்ளது. அவரின் அந்த கூற்றுப்படி, தற்போது அரச நடவடிக்கையில் இருந்து விலகியுள்ள ஹாரி பிரிட்டன் மன்னராவாரா என்ற எதிர்பார்ப்பும் எழுந்துள்ளது.

பொதுவாக பிரிட்டன் அரச குடும்பத்தில் மன்னர் அல்லது ராணி எனும் உயர் பொறுப்புகளை வகிபவர்களுக்கு தனி சட்டத்திட்டங்கள் உள்ளது. இது தொடர்பாக 1865ல் வால்டர் பாகேஹாட் என்பவரால் எழுதப்பட்ட”தி இங்கிலீஷ் கான்ஸ்டிடியூஷன்” என்ற புத்தகத்தில் கூறப்பட்டுள்ள இரண்டு முக்கியமான விஷயங்களை இங்கிலாந்து மன்னர்கள் பின்பற்றுவது கட்டாயமாக உள்ளது.

ஒன்று தன்னுடைய குடும்பத்தின் ஒற்றுமையை பாதுகாப்பது. மற்றொன்று நவீன காலத்திற்கு ஏற்றார்போல் மன்னராட்சியின் கண்ணியத்தை கிறிஸ்துவ மதத்தின் வலிமையால் பலப்படுத்துவது. இவ்விரண்டையுமே ராணி எலிசபெத் மிகச்சிறப்பாக செய்திருந்த போதிலும், அவரது மறைவிற்கு இவ்விரண்டும் முறையாக பின்பற்றப்படுமா? என்ற கேள்விகள் எழுந்துள்ளது. இந்த சூழலில் தான் மன்னராட்சிக்கு எதிரான குரல்களும் பிரிட்டனில் ஒலிக்கத் தொடங்கியுள்ள, இந்த நேரத்தில் தற்போது மன்னராக மூன்றாம் சார்லஸ் பொறுப்பேற்கிறார். ஏற்கனவே இவரின் கோபதாபங்கள் சாமீபகாலமாக ஊடகங்களில் பேசப்பட்டு வரும் நிலையில் மீண்டும் பிரிட்டன் நாடாளுமன்றத்தில் இவரின் தலையீடு எப்படி இருக்கும் என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும் .

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.

Share to KooShare to WhatsappShare to PinterestShare to Telegram

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More

Privacy & Cookies Policy

Discover more from News7 Tamil

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading