அதானி பற்றி நான் எழுப்பும் கேள்விகளை கண்டு பிரதமர் மோடிக்கு அச்சம் என ராகுல் காந்தி பரபரப்பு குற்றச்சாட்டை முன்வைத்துள்ளார்.
காங்கிரஸ் கட்சியின் ராகுல் காந்தி செய்தியாளர்களை சந்தித்தார். அவர் தெரிவித்ததாவது..
”நாட்டில் ஜனநாயகம் தாக்கபடுவதற்கான உதாரணங்களை தினம் தினம் பார்த்து வருகிறோம். நான் மக்களவையில் பேச அனுமதி கேட்டேன். ஆனால் அனுமதி அளிக்கப்படவில்லை. பிரதமர் மோடிக்கும் அதானிக்கும் இடையேயான உறவு குறித்து நான் நாடாளுமன்றத்தில் கேள்விகள் கேட்டேன்.
நான் பிரதமரிடம் அதானி குழுமம் குறித்து அடுக்கடுக்கான கேள்விகளை எழுப்பிய போது தான் பிரச்சனை தொடங்கியது. சிறை தண்டனை குறித்தோ, தகுதி நீக்கம் குறித்தோ நான் ஒருபோதும் அஞ்சமாட்டேன். தொடர்ந்து நான் என் கேள்விகளை எழுப்புவேன். அதானி குழும முறைகேடு தொடர்பான கேள்விகளை தொடர்ந்து எழுப்பிக் கொண்டேதான் இருப்பேன்.
இந்திய ஜனநாயகத்தை பாதுகாப்பதற்காக நான் தொடர்ந்து குரல் கொடுத்து வருகிறேன், அதை தொடர்ந்து செய்வேன். எந்த அச்சுறுத்தலுக்கும் நான் பயப்பட மாட்டேன். அதானி குழும நிறுவனங்களுக்கு கொடுக்கப்பட்ட 20ஆயிரம் கோடி ரூபாய் யாருடையது ?. நான் கேட்கும் கேள்வி பிரதமருக்கு அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது எனவே தான் இந்த தகுதி நீக்கம். ஆனால் நான் தொடர்ந்து அதானி விவகாரம் குறித்த கேள்விகளை எழுப்புவேன்.
நான் வெளிநாட்டு சக்திகளிடம் உதவி நாடினேன் என அமைச்சர் நாடாளுமன்றத்தில் பொய் கூறியது தொடர்பாக சபாநாயகருக்கு விளக்க கடிதம் எழுதினேன். நான் எந்த வெளிநாட்டு சக்திகளிடமும் உதவியை கேட்கவில்லை, அதற்கு எனக்கு எந்த அவசியமும் இல்லை. என் தகுதி நீக்கம் ரத்து செய்யப்பட்டாலோ அல்லது ரத்து ஆகவில்லை என்றாலோ எனக்கு கவலை இல்லை. நான் நாடாளுமன்றத்துக்கு உள்ளே இருந்தாலும், வெளியே இருந்தாலும் என் பணியை செய்வேன். நிரந்தரமாக தகுதி நீக்கம் செய்தாலும், சிறையில் அடைத்தாலும் நான் ஓயப்போவதில்லை.
என் கேள்வி அதானி குழுமத்தின் துணை நிறுவனங்களுக்கு (Shell companies) 20 ஆயிரம் கோடி ரூபாய் எப்படி வந்தது ? யார் கொடுத்தது ? என்பது பற்றித்தான். அவமதிப்பு வழக்கு தொடர்பாக இங்கு நான் பேச விரும்பவில்லை. பிரதமருடன் உள்ள நட்பு, நல்லுறவை வைத்து அதானி போன்ற நபர்கள் எவ்வாறு ஆதாயம் பெறுகின்றனர் என்பதை நாட்டு மக்களுக்கு தெரியப்படுத்த வேண்டும்.
அதானி குழுமம் பாதுகாப்பு துறையிலும் முதலீடு செய்துள்ளது. அதனைப் பற்றி ஏன் பிரதமர் வாய் திறக்கவில்லை. தகுதி நீக்கம் , தேச விரோதி குற்றச்சாட்டு போன்றவை முக்கிய விவகாரங்களை திசை திருப்புவதற்கானது. மேலும் பிரதமர் மீதான கேள்விகளை திசை திருப்புவதற்கானது. மன்னிப்பு கேட்பதற்கு நான் சாவர்க்கர் அல்ல . நான் காந்தி.
இந்த நாட்டின் ஜனநாயகம், ஏழை மக்களின் குரல்களை காப்பது, அதானி போன்றவர்கள் பிரதமரின் நட்பை வைத்து சுரண்டல் நடத்துவதை வெளிக்கொண்டு வருவதே எனது கடமை. எனக்கு பிரதமரை கண்டு எந்த அச்சமும் இல்லை. அதானி குறித்து நான் எழுப்பும் கேள்விகளை கண்டு தான் பிரதமர் அச்சப்படுகிறார். தற்போது மக்களிடம் செல்வதைத் தவிர வேறு எந்த வழியும் எதிர்க்கட்சிகளுக்கு இல்லை.” என ராகுல் காந்தி தெரிவித்துள்ளார்.







