“நாடாளுமன்ற தேர்தலுக்குப் பின் மோடி பிரதமராக இருப்பாரா என கூறமுடியாது” – பாஜக மூத்த தலைவர் சுப்பிரமணியன் சுவாமி!

வரும் நாடாளுமன்ற தேர்தலுக்குப் பின் மோடி மீண்டும் பிரதமராக இருப்பாரா என இப்போது கூறமுடியாது என பாஜக மூத்த தலைவர் சுப்பிரமணியன் சுவாமி கூறியுள்ளார்.  சென்னை மீனம்பாக்கம் விமான நிலையத்தில் பா.ஜ.க. மூத்த தலைவர்…

வரும் நாடாளுமன்ற தேர்தலுக்குப் பின் மோடி மீண்டும் பிரதமராக இருப்பாரா என இப்போது கூறமுடியாது என பாஜக மூத்த தலைவர் சுப்பிரமணியன் சுவாமி கூறியுள்ளார். 

சென்னை மீனம்பாக்கம் விமான நிலையத்தில் பா.ஜ.க. மூத்த தலைவர் சுப்பிரமணியன் சுவாமி செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் பேசியதாவது:

பொது சிவில் சட்டம் கொண்டு வருவதில் காங்கிரஸ் கட்சி எதிர்ப்பதில் என்ன அர்த்தம் இருக்கிறது. சர்தார் பட்டேல் கொண்டு வர சொன்ன போது நேரு மறுத்தார். எந்த மதத்தில் இருந்தாலும் திருமணம் ஒரு முறையாக இருக்க வேண்டும். ஜனநாயகத்தில் ஒரு ஆணுக்கு ஒரு மனைவி தான் இருக்க வேண்டும். 4 மனைவிகள் இருக்க முடியாது. பொது சிவில் சட்டத்தை கொண்டு வந்தே ஆக வேண்டும். காங்கிரஸ் என்ன சொன்னாலும் பிரச்சனை இல்லை.

பிரதமர் மோடியின் மவுசு குறைந்து உள்ளது. அதை செய்ய வேண்டும், இது செய்ய வேண்டும் என பேசிக் கொண்டே இருப்பார். ஜனநாயகத்தில் குறைகளை எடுத்து சொல்லி பேசலாம். என்னுடைய கருத்தை சொல்லுகிறேன். மோடி சொன்ன  வாக்குறுதிகளில் எதையும் நிறைவேற்றவில்லை.

மணிப்பூர் கலவரத்தை கட்டுபடுத்துவதில் பிரதமர் தோல்வி அடைந்து விட்டார். வெளிநாட்டு சுற்றுவதில் தான் அக்கறை இருக்கிறது. மணிப்பூர் மாநிலத்திற்கு தான் முதலில் போய் இருக்க வேண்டும். அமெரிக்கா செல்வதற்கு என்ன அவசரம். அமெரிக்கா சென்று இந்தியாவிற்கு என்ன கொண்டு வந்தார்.

2024ம் ஆண்டு தேர்தலில் பா.ஜ.க. கண்டிப்பாக வெற்றி பெறும். பிரதமராக மோடி இருப்பாரா என்பதை இப்போது சொல்ல முடியாது.அதிமுகவிற்கு தற்போது கொள்கையே கிடையாது. எப்படி வேண்டுமானாலும் பல்டி அடிப்பார்கள்.

திமுகவை பொறுத்த வரை சினிமாவை தவிர வேறு எதுவும் இல்லை. வரக்கூடிய நாடாளுமன்ற தேர்தலில் திமுக தோல்வி அடையும். அண்ணாமலை யார் என்றே எனக்கு தெரியாது. தமிழகத்தில் பா.ஜ.க. இருக்கா நான் எங்கும் பார்க்கவில்லை. இவ்வாறு சுப்பிரமணியன் சுவாமி கூறினார்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.