இலங்கையில் மீண்டும் அதிபர் தேர்தல்

இலங்கை அதிபர் கோத்தபய ராஜபக்சே பதவி விலகியதாக அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், வருகிற 20-ம் தேதி இலங்கைக்கு புதிய அதிபர் தேர்வு செய்யப்படுவதாக தகவல் வெளியாகியுள்ளது.   இலங்கையில் வரலாறு காணாத பொருளாதார நெருக்கடி ஏற்பட்டுள்ளதால்…

இலங்கை அதிபர் கோத்தபய ராஜபக்சே பதவி விலகியதாக அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், வருகிற 20-ம் தேதி இலங்கைக்கு புதிய அதிபர் தேர்வு செய்யப்படுவதாக தகவல் வெளியாகியுள்ளது.

 

இலங்கையில் வரலாறு காணாத பொருளாதார நெருக்கடி ஏற்பட்டுள்ளதால் அங்குள்ள மக்கள் புரட்சியாளர்களாக மாறியுள்ளனர். அத்தியாவசிய பொருட்களுக்கு தட்டுபாடு நிலவுவதால், மக்கள் தொடர்ந்து போராட்டம் நடத்தி வருகின்றனர். இதனால் இலங்கையே போராட்ட களமாக காட்சியளிக்கிறது.

 

இந்நிலையில், நேற்று முன்தினம் போராட்டத்தில் ஈடுபட்ட மக்கள், அதிபர் மாளிகையை கைப்பற்றினர். இலங்கை அதிபர் மாளிகையை தங்கள் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்துள்ள போராட்டக்காரர்கள் பலர் தற்போது அங்கேயே தங்கியுள்ளனர்.

 

இதனால் அதிர்ந்து போன இலங்கை அரசு, அனைத்துக் கட்சிகள் இணைந்து ஆட்சி அமைக்கும் வகையில் இலங்கை அமைச்சரவை ஒட்டுமொத்தமாக ராஜினாமா செய்துள்ளனர். மேலும் மக்கள் போராட்டத்திற்கு நடுவே கொழும்பு ரத்மலானை விமானப்படை தளத்தில் இலங்கை அதிபர் கோத்தபய ராஜபக்சே தஞ்சமடைந்துள்ளதாகவும் கூறப்படுகிறது.

இந்நிலையில், இலங்கைக்கு புதிய அதிபரை தேர்வு செய்ய அனைத்து கட்சித் தலைவர்கள் கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. கோத்தபய ராஜபக்சே ஜூலை 13ம் தேதி பதவி விலகினால், அதிபர் பதவிக்கான வேட்புமனுக்கள் ஜூலை 19ம் தேதி ஏற்றுக்கொள்ளப்படும் என்றும் 20-ம் தேதி புதிய அதிபர் தேர்வு செய்யப்படும் என்று கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.

 

– இரா.நம்பிராஜன்

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.