குடியரசு தலைவர் ரப்பர் ஸ்டாம்பாக இருக்க கூடாது என புதுச்சேரி முன்னாள் முதலமைச்சர் நாராயணசாமி தெரிவித்தார்.
புதுச்சேரி முன்னாள் முதலமைச்சர் நாராயணசாமி செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது பேசிய அவர், நேற்று புதுச்சேரி வந்த திரௌபதி முர்முவுக்கு முதலமைச்சர் ரங்கசாமி ஆதரவு அளிப்பதாக தெரிவித்துள்ளார்.
குடியரசுத் தலைவர் என்பவர் தன்னிச்சையாக செயல்பட வேண்டும். யாருக்கும் ரப்பர் ஸ்டாம்ப்பாக இருக்க கூடாது. தற்போதை குடியரசு தலைவர் ராம்நாத் கோவிந்து நரேந்திர மோடி அனுப்பும் அனைத்து கோப்புகளுக்கும் ஒப்புதல் அளிக்கிறார். பல எதிர்ப்புகளை மீறி சட்டங்களை நிறைவேற்ற ஒப்புதல் அளிக்கிறார். பிறகு திருப்பபெற நரேந்திர மோடி கேட்ட போது அதற்கும் குடியரசு தலைவர் ஒப்புதல் அளித்தார்.
தொடர்ந்து பேசிய அவர், தற்போது குடியரசு தலைவராக போட்டியிட வுள்ள இரண்டு பேரும் சிறந்த வேட்பாளர்கள். சட்டமன்ற உறுப்பினர்கள், பாராளுமன்ற உறுப்பினர்கள் சிந்தித்து வாக்களிக்க வேண்டும். திறமை, தகுதி அடிப்படையில் வாக்களிக்க வேண்டும். யார் தன்னிச்சையாக செயல்படுவார்களோ அவர்களை வெற்றி பெற செய்ய வேண்டும். எனவே அப்படி இருக்க கூடிய யஷ்வந்த் சின்ஹாவுக்கு வாக்களிக்க வேண்டும். புதுச்சேரியில் உள்ள மதச்சார்பற்ற அணி குடியரசு தலைவர் வேட்பாளர் யஷ்வந்த் சின்ஹாவுக்கு ஆதரவளிக்கும் என்றார்.
மேலும், காரைக்கால் பகுதியில் மிகப்பெரிய அளவில் மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். குடிநீரில் கழிவு நீர் கலந்ததால் காலரா நோய் அறிகுறி ஏற்பட்டுள்ளது. இதுகுறித்து கடந்த ஒரு மாதத்திற்கு முன் புகார் வந்தபோது நடவடிக்கை எடுத்து இருக்க வேண்டும். காரைக்கால் புதுச்சேரியில் இருக்கிறது என்பதை முதலமைச்சர் ரங்கசாமி மறந்து விட்டார். காரைக்காலில் இவ்வளவு பெரிய பிரச்சினை நடந்து வரும் நிலையில் இதுவரை முதலமைச்சர் ரங்கசாமி அங்கு சென்று அங்குள்ள நிலைமை குறித்து பார்வையிடவில்லை.காரைக்கால் மாவட்டம் குறித்து முதல்வர் ரங்கசாமிக்கு அக்கறை இல்லை என்று தெரிவித்தார்.








