இலங்கையில் புதிய அரசாங்கம் அமைப்பது தொடர்பாக நடைபெற்ற பேச்சுவார்த்தை வெற்றியடைந்ததாக முன்னாள் அதிபரான மைத்ரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.
இலங்கையில் அந்நிய செலாவணி கையிருப்பு குறைவு உள்ளிட்ட காரணங்களால் கடும் பொருளாதார நெருக்கடி ஏற்பட்டுள்ளது. இதையடுத்து அத்தியாவசிய பொருட்கள், மருந்து பொருட்கள், பெட்ரோல், டீசல், சமையல் எரிவாயு சிலிண்டர்கள் உள்ளிட்டவை விலை உயர்த்தப்பட்டுள்ளன. இதனால் பாதிக்கப்பட்ட மக்கள் இலங்கை அரசுக்கு எதிராக போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இலங்கை அதிபர் கோத்தபய ராஜபக்சே, பிரதமர் மகிந்த ராஜபக்சே இருவரும் பதவியில் இருந்து விலக வேண்டும் என்று பொதுமக்கள், தொழிற்சங்கங்கள், எதிர்கட்சிகள் உள்ளிட்டோர் போராட்டத்தின் மூலம் வலியுறுத்தி வந்தனர்.
இதையடுத்து மகிந்த ராஜபக்ச அமைச்சரவையில் இருந்த அனைத்து அமைச்சர்களும் தங்கள் பதவிகளை ராஜினாமா செய்தனர். எனினும் பிரதமர் மகிந்த ராஜபக்சே பதவியிலிருந்து விலக மறுத்தார்.
இந்நிலையில் அரசாங்கத்தில் இருந்து விலகி சுயாதீனமாக செயற்படும் ஸ்ரீலங்கா சுதந்திர கட்சி உள்பட 11 கட்சிகள், புதிய அரசாங்கம் மற்றும் புதிய அமைச்சரவை அமைப்பது தொடர்பாக இன்று காலை அதிபர் கோத்தபய ராஜபக்சேவுடன் கலந்துரையாடினர்.
பின்னர், இதுகுறித்து பேசிய ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சியின் தலைவர் மைத்திரிபால சிறிசேன, அதிபர் கோத்தபய ராஜபக்சேவுடன் இன்று நடைபெற்ற பேச்சுவார்த்தை வெற்றியடைந்துள்ளது என தெரிவித்தார்.
மேலும், நாட்டை நிர்வகிப்பதற்கு அதிபர் மற்றும் புதிய அமைச்சரவைக்கு உதவுவதற்காக தேசிய சபையொன்றை நியமிப்பதற்கும் அதிபர் இணக்கம் தெரிவித்துள்ளதாகவும், அனைத்துகட்சி அரசின் புதிய பிரதமர் மற்றும் புதிய அமைச்சரவையின் நியமனம் அனைத்துக் கட்சிகளின் தலைவர்கள் அடங்கிய தேசிய சபையிடம் ஒப்படைக்கப்படும் எனவும் தெரிவித்தார்.








