நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலையொட்டி, தேர்தல் விதிகள் அமலுக்கு வந்துள்ள நிலையில் ,தமிழ்நாடு முழுவதுமுள்ள 22,000 உரிமம் பெற்ற துப்பாக்கிகளை ஒப்படைக்கக் காவல் துறை உத்தரவிட்டுள்ளது.
தொழிலதிபர்கள் முக்கிய வி.ஐ.பிக்கள், நடிகர்கள் முன்னாள் ராணுவ அதிகாரிகள் முன்னாள் காவல்துறை அதிகாரிகள் உள்ளிட்டவர்கள் அவர்களின் சொந்த பாதுகாப்பிற்காக உரிமம் பெற்று துப்பாக்கி வைத்திருப்பார்கள். தேர்தல் சமயங்களில் சட்டம்-ஒழுங்கு பிரச்சினை ஏற்பட்டு விடாமல் இருப்பதற்காக உரிமம் பெற்று துப்பாக்கி வைத்திருப்பவர்கள், தங்கள் துப்பாக்கிகளைத் தற்காலிகமாகக் காவல் நிலையங்களில் ஒப்படைப்பது வழக்கம்.
காவல்துறை அனுமதியோடு உரிய உரிமம் பெற்று வாங்கப்படும் இந்த துப்பாக்கிகள் காவல்துறை கேட்கும்போது கொண்டுவந்து ஒப்படைக்க வேண்டும் என்ற நிபந்தனையோடு வைத்திருக்க அனுமதிக்கப்படுகிறது.
இந்த நிலையில் தமிழ்நாட்டில் நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டுள்ளதை அடுத்துத் தேர்தல் நடத்தை விதிகள் அமலுக்கு வந்துள்ளது. இதன்படி மாநிலம் முழுவதும் உரிமம் பெற்று தங்கள் வசம் வைத்துள்ள 22 ஆயிரம் துப்பாக்கிகளை உடனடியாக ஒப்படைக்க வேண்டும் என காவல்துறை உத்தரவிட்டுள்ளது.
இதன்படி, சென்னையைப் பொருத்தவரை 2,700க்கும் மேற்பட்ட துப்பாக்கிகளை ஒப்படைக்கவும் சென்னை பெருநகர காவல் ஆணையர் உத்தரவிட்டுள்ளார். இதேபோன்று தாம்பரம் ஆவடி ஆகிய காவல் ஆணையரக எல்லைக்குட்பட்ட பகுதியில் உள்ள உரிமம் பெற்ற துப்பாக்கிகளை ஒப்படைக்கக் காவல் ஆணையர்கள் உத்தரவிட்டுள்ளனர்







