நடிகர் மன்சூர் அலிகானுக்கு போலீசார் சம்மன்! நாளை காலை ஆஜராக உத்தரவு!

நடிகர் மன்சூர் அலிகான் காவல் நிலையத்தில் நேரில் ஆஜராக வேண்டும் என அனைத்து மகளிர் காவல் நிலைய சார்பில் சம்மன் வழங்கப்பட்டுள்ளது. லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய் நடித்த லியோ படம் கடந்த மாதம்…

நடிகர் மன்சூர் அலிகான் காவல் நிலையத்தில் நேரில் ஆஜராக வேண்டும் என அனைத்து மகளிர் காவல் நிலைய சார்பில் சம்மன் வழங்கப்பட்டுள்ளது.

லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய் நடித்த லியோ படம் கடந்த மாதம் 19-ம் தேதி வெளியானது.  இதில், த்ரிஷா,  கௌதம் மேனன்,  அர்ஜூன்,  சஞ்சய் தத் உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்த இந்த படத்தில்,  மன்சூர் அலி கான் விஜய்யின் நெருங்கிய நண்பராக நடித்திருந்தார்.

இதனிடையே சமீபத்தில் பேட்டி ஒன்றில் நடிகர் மன்சூர் அலிகான்,  த்ரிஷா குறித்து தகாத வார்த்தைகளை பயன்படுத்தி பேசியிருந்தார்.  மன்சூர் அலிகானின் இந்த பேச்சு இணையத்தில் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்திய நிலையில்,  நடிகை த்ரிஷா, லோகேஷ் கனகராஜ் உள்ளிட்டோர் கண்டனம் தெரிவித்திருந்தனர்.

இதனைத்தொடர்ந்து, மன்சூர் அலிகான் மீது நடவடிக்கை எடுக்குமாறு தமிழக டிஜிபிக்கு தேசிய மகளிர் ஆணையம் பரிந்துரை செய்திருந்தது.  இதனைத் தொடர்ந்து நடிகர் மன்சூர் அலி கான் மீது சென்னை பெருநகர காவல் W-1 ஆயிரம் விளக்கு அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் 354 (A), 509 இதச ஆகிய 2 சட்டப்பிரிவுகளில் வழக்கு பதிவு செய்யப்பட்டது.

இந்த நிலையில் ஆயிரம் விளக்கு அனைத்து மகளிர் காவல் நிலைய ஆய்வாளர் தனலட்சுமி, சென்னையில் நுங்கம்பாக்கத்தில் வசிக்கும் நடிகர் மன்சூர் அலிகான் வீட்டிற்கு நேரில்  சென்று  சம்மன் வழங்கி உள்ளார்.  மன்சூர் அலிகான் வீட்டில் இல்லாததால் அவரது மனைவியிடம் மன்சூர் அலிகான் (23 ம்தேதி) நாளை காலை 10 மணிக்கு நேரில் ஆஜராக வேண்டும் என சம்மன் வழங்கப்பட்டிருக்கிறது.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.