“பாமக ஜனநாயக கட்சி… விவாதம் நடைபெறுவது சகஜம்தான்..” – #AnbumaniRamadoss பேட்டி

பாமக ஒரு ஜனநாயக கட்சி, பொதுக்குழு கூட்டத்தில் காரசார விவாதம் நடைபெறுவது சகஜம்தான் என அக்கட்சியின் தலைவர் அன்புமணி ராமதாஸ் தெரிவித்துள்ளார். பாமகவின் பொதுக் குழு கூட்டம் புதுச்சேரியில் நேற்று (டிச. 28) நடைபெற்றது.…

“PMK Democratic Party... It is normal for debate to take place..” – #AnbumaniRamadoss Interview

பாமக ஒரு ஜனநாயக கட்சி, பொதுக்குழு கூட்டத்தில் காரசார விவாதம் நடைபெறுவது சகஜம்தான் என அக்கட்சியின் தலைவர் அன்புமணி ராமதாஸ் தெரிவித்துள்ளார்.

பாமகவின் பொதுக் குழு கூட்டம் புதுச்சேரியில் நேற்று (டிச. 28) நடைபெற்றது. இந்த கூட்டத்தில் கட்சியின் நிறுவனர் ராமதாஸ், கட்சியின் தலைவர் அன்புமணி, கௌரவ தலைவர் மணி உட்பட கட்சியின் முக்கிய நிர்வாகிகள் பலரும் கலந்து கொண்டனர். அப்போது புதுச்சேரி இளைஞரணி தலைவராக முகுந்தன் என்பவரை நியமிப்பதாக நிறுவனர் ராமதாஸ் தெரிவித்தார். அவர் பேசிக் கொண்டிருக்கும் போதே குறுக்கிட்ட அன்புமணி இதற்கு எதிர்ப்பு தெரிவித்தார்.

இதுகுறித்து அன்புமணி பேசுகையில், கட்சியில் சேர்ந்து 4 மாதங்கள்கூட ஆகாத ஒருவர் எப்படி இளைஞரணி தலைவராக முடியும்? கட்சியில் உழைக்கக்கூடியவர்கள் பலரும் உள்ளனர் என்று தெரிவித்தார். ஆனால் அதனை பொருட்படுத்தாத ராமதாஸ் கட்சியை உருவாக்கியது நான், கட்சியில் உள்ள பொறுப்பாளர்களை நான் தான் நியமிப்பேன். இதில் உடன்படாதவர்கள் யாராக இருந்தாலும் கட்சியில் இருந்து வெளியேறலாம் என்று தெரிவித்தார்.

இதில், ஆத்திரம் அடைந்த அன்புமணி, எனக்கு சென்னை பனையூரில் அலுவலகம் உள்ளது. என்னை சந்திக்க விரும்புபவர்கள் யாராக இருந்தாலும், அங்கு வந்து உங்கள் கருத்துகளை தெரிவிக்கலாம் என்று கூறி செல்போன் எண்ணையும் அறிவித்துவிட்டு கூட்டத்தை விட்டு வெளியேறினார். ராமதாசும், அன்புமணியும் ஒரே மேடையில் வார்த்தையால் மோதிக்கொண்ட சம்பவம் பாமக நிர்வாகிகள் மற்றும் தொண்டர்களிடையே பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

கருத்து முரண்பாடு ஏற்பட்ட நிலையில், விழுப்புரம் மாவட்டம் தைலாபுரம் தோட்டத்தில் பாமக நிறுவனர் ராமதாசை, பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் சந்தித்து பேசினார். இருவருக்கும் இடையே சுமார் ஒரு மணி நேரம் பேச்சுவார்த்தை நடைபெற்றது. அதன் பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அன்புமணி ராமதாஸ் பேசியதாவது,

“பாமக ஒரு ஜனநாயக கட்சி. கட்சி பொதுக்குழு கூட்டத்தில் காரசார விவாதம் நடைபெறுவது சகஜம்தான். ஐயா எப்போதும் எங்களுக்கு ஐயாதான். பாமக-வின் உட்கட்சி பிரச்னையை நாங்கள் பார்த்துக்கொள்கிறோம். பாமகவின் உட்கட்சி பிரச்னைகள் குறித்து மற்றவர்கள் பேசக்கூடாது. இந்த சந்திப்பில் கட்சியின் வளர்ச்சி, சட்டமன்றத் தேர்தல், சாதிவாரி கணக்கெடுப்பு உள்ளிட்டவை குறித்து பேசினோம்”

இவ்வாறு பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் தெரிவித்தார்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.