லதா மங்கேஷ்கர் தகனம் செய்யப்பட்ட இடத்தில் பொதுமக்கள் காலை முதல் அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.
லதா மங்கேஷ்கருக்கு கடந்த மாதம் 8-ம் தேதி கொரோனா தொற்று உறுதியானது. இதனைத் தொடர்ந்து மும்பையில் உள்ள தனியார் மருத்துவமனையில் லதா மங்கேஷ்கர்
அனுமதிக்கப்பட்டார். அவருக்கு நிமோனியா காய்ச்சல் ஏற்பட்டதால், தீவிர சிகிச்சைப் பிரிவில் சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. கடந்த 29 நாட்களாக சிகிச்சை பெற்று வந்த லதா
மங்கேஷ்கரின் உடல்நிலை தொடர்ந்து மோசமடைந்த நிலையில் வெண்டிலேட்டர் உதவியுடன் சுவாசித்து வந்தார்.
இந்த நிலையில், நேற்று காலை 8.12 மணியளவில் லதா மங்கேஷ்கர் சிகிச்சை பலனின்றி காலமானார். தொடர் தீவிர சிகிச்சையில் இருந்த லதா மங்கேஷ்கருக்கு, பல்வேறு
உறுப்புகள் செயலிழந்ததன் காரணமாக அவர் உயிரிழந்ததாக மருத்துவர்கள் தெரிவித்திருந்தனர். இதனையடுத்து அவரது உடல் சிவாஜி மண்டபத்திற்கு கொண்டுசெல்லப்பட்டது. பல்வேறு முக்கிய பிரமுகர்களின் அஞ்சலிக்குப் பின்னர், லதா மங்கேஷ்கரின் உடல் தகன மேடைக்கு எடுத்துச் செல்லப்பட்டது.
இதனைத் தொடர்ந்து இரவு 7 மணி அளவில் முப்படை வீரர்களின் மரியாதையுடன், துப்பாக்கிக் குண்டுகள் முழங்க முழு அரசு மரியாதை அளிக்கப்பட்டது. இதனைத் தொடர்ந்து லதா மங்கேஷ்கர் உடலின் மேல் போர்த்தப்பட்டிருந்த தேசிய கொடி அகற்றப்பட்டு, லதா மங்கேஷ்கரின் குடும்பத்தினரிடம் ஒப்படைக்கப்பட்டது. தொடர்ந்து, குடும்ப வழக்கப்படி இறுதிச் சடங்குகள் நடத்தப்பட்டு லதா மங்கேஷ்கரின் உடல் தகனம் செய்யப்பட்டது.
இதற்கிடையே, மகாராஷ்டிராவில் லதா மங்கேஷ்கருக்கு அஞ்சலி செலுத்தும் வகையில் இன்று பொது விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் லதா மங்கேஷ்கர் தகனம் செய்யப்பட்ட இடத்தில் பொதுமக்கள் காலை முதல் சாரை சாரையாக வந்து தங்களது அஞ்சலியை செலுத்தி வருகின்றனர்.









