மக்கள் பாரம்பரிய உணவு பழக்க வழக்கத்திற்கு மாற வேண்டும் என்று தமிழ்நாடு வணிக வரி மற்றும் பதிவுத் துறை அமைச்சர் மூர்த்தி தெரிவித்தார்.
மதுரை மாவட்ட நிர்வாகம் – தமிழ்நாடு உணவு பாதுகாப்புத் துறை சார்பில் உணவுத் திருவிழா நடைபெறுகிறது. உணவுத் திருவிழாவையோட்டி மதுரை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முதல் 2 கிலோ மீட்டர் வரை வாக்கத்தான் நடைபெற்றது. இதில், 500 கல்லூரி மாணவ – மாணவிகள் பங்கேற்றனர். வாக்கத்தானை வணிகவரி மற்றும் பதிவுத்துறை அமைச்சர் மூர்த்தி கொடியசைத்து தொடங்கி வைத்தார்.
இதில் பங்கேற்ற தர்மபுரி நாடாளுமன்ற உறுப்பினர் செந்தில்குமார், “இந்திய அளவில் மதுரை உணவுக்கு பெயர் பெற்ற ஊராகும். பாரம்பரிய உணவு முறைகளை மீண்டும் கொண்டு வர வேண்டும். பாதுகாப்பான உணவுகளை உட்கொள்ள வேண்டும். குழந்தைகளுக்கு துரித உணவுகளை வழங்குவதை தவிர்க்க வேண்டும். மதுரையில் கலைஞர் நூலகம், பாலம் போன்ற வளர்ச்சி பணிகள் நடைபெறுகிறது. மதுரையில் விரைவில் மெட்ரோ ரயில் சேவை அமைக்கும் பணிகள் தொடங்கப்பட உள்ளது” என்றார்.
வணிக வரி மற்றும் பத்திரப்பதிவு அமைச்சர் மூர்த்தி கூறியதாவது:
“வீடுகளில் சமைக்கும் பழக்கம் வெகுவாக குறைந்துள்ளது. ஆன்லைனில் உணவு ஆர்டர் செய்து உண்ணும் பழக்கம் மேலோங்கி வருகிறது. பாரம்பரியமாக உணவு சமைக்கும் பழக்கம் மாறி உள்ளது. பாரம்பரிய உணவுகளை உட்கொண்டதால் 90 வயது வரை முன்னோர்கள் உயிர் வாழ்ந்தார்கள். உணவு முறைகளின் மாற்றம் ஏற்பட்டதால் புதிய புதிய நோய்களை எதிர்க் கொள்ள சூழலுக்கு தள்ளப்பட்டு உள்ளோம்.
உணவு பழக்கம் வழக்கம் மாற்றம் குறித்து மக்களுக்கு விழிப்புணர்வு செய்யப்பட்டு வருகிறது. இளைஞர்கள் உணவு முறைகளை மாற்ற வேண்டும். இயற்கை விவசாயத்திற்கு மாற வேண்டும். மக்கள் பாரம்பரிய உணவு பழக்க வழக்கத்திற்கு மாற வேண்டும். இயற்கை விவசாயத்தால் நஷ்டம் தான் ஏற்படும், ஆனாலும் இயற்கை விவசாயத்தை செய்ய வேண்டிய கட்டாயத்தில் உள்ளோம்” என்று தெரிவித்தார்.








