முக்கியச் செய்திகள் கட்டுரைகள் தமிழகம் செய்திகள்

ஓபிஎஸ் புகழாரம்…இபிஎஸ் பரிகாசம்…யார் இந்த பண்ருட்டி ராமச்சந்திரன்?


எஸ்.இலட்சுமணன்

கட்டுரையாளர்

அதிமுகவில் அதிகாரப்போட்டி இன்னும் ஓயாத நிலையில் ஓ.பன்னீர் செல்வத்தின் புகழாரத்திற்கும் எடப்பாடி பழனிசாமியின் பரிகாசத்திற்கும் இடையே சிக்கிக்கொண்டுள்ளார் அக்கட்சியின் மூத்த தலைவர் பண்ருட்டி ராமச்சந்திரன். 

ஜூலை 11ந்தேதி நடைபெற்ற அதிமுக பொதுக்குழு செல்லும் என சமீபத்தில் சென்னை உயர்நீதிமன்ற இரு நீதிபதிகள் அமர்வு அளித்த தீர்ப்பு, எடப்பாடி பழனிசாமி அதிமுகவின் இடைக்காலப் பொதுச் செயலாளர் என்பதற்கு சட்டரீதியிலான அங்கீகாரம் கொடுத்தது. உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு உள்ளிட்ட அடுத்தக்கட்ட சட்ட நடவடிக்கைகளில் முன்னாள் முதலமைச்சர் ஓபிஎஸ் தரப்பு இறங்கியிருக்கும் நிலையில், அதில் தீர்ப்பு வரும் வரை அந்த அணியினரின் பயணம் கத்தி மேல் நடப்பது போன்றதுதான்.

நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்

அதிமுக கட்சி அலுவலகம் முதல், அதன் வங்கி கணக்கை கையாள்வது வரை எல்லாம் கைவிட்டுப்போன நிலையில், தனக்குள்ள எஞ்சிய வாய்ப்புகளை பயன்படுத்தி ஓ.பன்னீர் செல்வம் என்ன செய்யப்போகிறார், ஆதரவாளர்களை தக்கவைக்க அவர் எடுக்கப்போகும் அடுத்தக்கட்ட நடவடிக்கைகள் என்ன என்பதை தமிழக அரசியல் உற்றுநோக்கி வருகிறது. இந்த சூழலில்தான் ஓபிஎஸ் நடத்திய சந்திப்பு ஒன்று அவரது ஆதரவாளர்களுக்கு நம்பிக்கையூட்டியுள்ளது.

சென்னை அசோக் நகரில் உள்ள அதிமுக மூத்த தலைவர் பண்ருட்டி ராமச்சந்திரனை சந்தித்த ஓ.பன்னீர்செல்வம், அவருடன் சில மணி நேரம் ஆலோசனை நடத்தினார். பின்னர் செய்தியாளர்களை சந்தித்த ஓபிஎஸ், அடுத்தக்கட்ட நடவடிக்கையை பொறுத்திருந்து பாருங்கள் என சஸ்பென்ஸ் வைத்தார். சமீபத்தில்தான் சசிகலாவும் பண்ருட்டி ராமச்சந்திரனை அவரது இல்லத்தில் சந்தித்து அடுத்தக்கட்ட அரசியல் நகர்வுகள் குறித்து ஆலோசனை நடத்தியிருந்தார். சசிகலாவுடன் இணைந்து மீண்டும் அதிமுகவில் பயணிக்க விருப்பம் தெரிவித்த ஓ.பன்னீர் செல்வம், பண்ருட்டி ராமச்சந்திரனை சந்தித்து ஆலோசனை நடத்தியதில் ஆச்சர்யம் இல்லை என்றாலும், இந்த சந்திப்புக்கு பின் எடப்பாடி பழனிசாமியை விமர்சித்து பண்ருட்டி ராமச்சந்திரன் அளித்த அதிரடி பேட்டி ஓபிஎஸ் தரப்பினருக்கு உற்சாகமூட்டியுள்ளது. இபிஎஸ் தலைமை தொடர்ந்தால் அதிமுகவை அழிவிலிருந்து தடுக்கமுடியாது என பண்ருட்டி ராமச்சந்திரன் கூறிய வார்த்தைகளை கைதட்டி வரவேற்றனர் ஓபிஎஸ் ஆதரவாளர்கள். ஆனால் மறுநாள் பண்ருட்டி ராமச்சந்திரனை விமர்சித்து இபிஎஸ் அடித்த கமெண்டுகளை விசிலடித்துக்கொண்டாடினர் அவரது ஆதரவாளர்கள்.

”தயவு செய்து அதிமுகவுக்கு அறிவுரை கூறாதீங்க. ஜெயலலிதாவை விமர்சித்து கட்சியைவிட்டு வெளியேறிய உங்களுக்கு அதிமுகவிற்கு அறிவுரை கூறும் தகுதி இல்லை. ஒரு கிளைச் செயலாளராக இருக்கும் தகுதிகூட உங்களுக்கு இல்லை” என்று  மின் கட்டண உயர்வுக்கு எதிராக செங்கல்பட்டில் நடைபெற்ற அதிமுக ஆர்ப்பாட்டத்தில் காட்டமாக பேசி பண்ருட்டி ராமச்சந்திரன் மீதான ஆதங்கத்தை கொட்டித் தீர்த்தார் எடப்பாடி பழனிசாமி. மறுநாள் இது குறித்து ஓ.பன்னீர்செல்வத்திடம் செய்தியாளர்கள் கருத்துக்கேட்டபோது, அதிமுகவின் வளர்ச்சிக்காக பாடுபட்ட தியாகி என்றும், ஐ.நா.சபையில் உரையாற்ற எம்.ஜி.ஆரால் அனுப்பி வைக்கப்பட்ட அறிவுஜீவி என்றும் பண்ருட்டி ராமச்சந்திரனுக்கு புகழாரம் சூட்டினார். இப்படி ஓபிஎஸ் மற்றும் இபிஎஸ் இடையிலான மோதலில் தியாகியாகவும் துரோகியாகவும் சித்தரிக்கப்படும் பண்ருட்டி ராமச்சந்திரன் யார், அவர் அரசியலில் கடந்து வந்த பாதை என்ன?

அதிமுகவில் தற்போதும் ஆக்டிவாக இருக்கும் அண்ணா காலத்து அரசியல்வாதியான பண்ருட்டி ராமச்சந்திரன், எஸ்.டி.சோமசுந்தரத்தை போல் அக்கட்சியில் ஏற்பட்ட பிரச்சனைகளை பழுதுபார்த்த மற்றொரு என்ஜினியர். ஒரு கிளைச் செயலாளராக இருப்பதற்குகூட தகுதி இல்லாதவர் என்று எடப்பாடி பழனிசாமியால் விமர்சிக்கப்பட்ட பண்ருட்டி ராமச்சந்திரனைதான் அன்று இலங்கை பிரச்சனை குறித்து எடுத்துரைக்க ஐ.நா.சபை வரை அனுப்பி வைத்தார் எம்.ஜி.ஆர். திமுகவிலும் அதன் பின் அதிமுகவிலும், அரசியல் ராஜதந்திரியாக, மாஸ்டர் மைண்டாக நீண்டகாலம் வலம் வந்த பண்ருட்டி ராமச்சந்திரனின் அரசியல் வாழ்க்கை அவரது மாணவர் பருவத்திலேயே தொடங்கிவிட்டது.

கடலூர் மாவட்டம் பண்ருட்டி தாலுகாவில் உள்ள புலியூரில் 1937ம் ஆண்டு பிறந்த பண்ருட்டி ராமச்சந்திரன், அம்மாவட்டத்தில் உள்ள சிதம்பரம் அண்ணாமலை பல்கலை கழகத்தில் பொறியியல் பட்டம் பெற்றார். அண்ணாவில் பேச்சுக்களால் ஈர்க்கப்பட்டு திமுகவில் இணைந்த அவர், சிதம்பரம் அண்ணாமலை பல்கலைகழகத்தில் படிக்கும்போது, திமுக மாணவர் பேரவை செயலாளராக இருந்துள்ளார். தமிழ்நாடு மின்சார வாரியத்தில் 8 ஆண்டுகள் பொறியாளராக பணியாற்றிய பண்ருட்டி ராமச்சந்திரன், பின்னர் அந்த வேலையை ராஜினாமா செய்துவிட்டு முழு நேர அரசியல்வாதியானார். 1967ம் ஆண்டு அண்ணா தலைமையில் திமுக ஆட்சியை கொண்டுவந்த தேர்தலில் அக்கட்சி சார்பாக வெற்றி பெற்ற எம்.எல்.ஏக்களில் பண்ருட்டி ராமச்சந்திரனும் ஒருவர்.  தனது பெயரோடு ஒட்டிய பண்ருட்டி தொகுதியிலிருந்து 6 முறை சட்டப்பேரவைக்கு தேர்ந்தெடுக்கப்பட்ட ராமச்சந்திரன், கருணாநிதி ஆட்சி காலத்தில் 1971ம் ஆண்டு முதல் 1976 வரை போக்குவரத்துத்துறை அமைச்சராக  பணியாற்றினார். பின்னர் எம்.ஜி.ஆர் ஆட்சி காலத்தில் 10 ஆண்டுகள் மின்சாரம், பொதுப்பணி உள்ளிட்ட துறைகளின் அமைச்சராக வலம் வந்தார்.

எம்.ஜி.ஆர். 1972ம் ஆண்டு அதிமுகவை தொடங்கிய பின்னர் திமுகவிலிருந்து விலகி அவருடன் கோர்த்தார் பண்ருட்டிராமச்சந்திரன். சட்டச்சிக்கல்களை எதிர்கொள்வதில் தொடங்கி, அடுத்து நடக்கப்போவதை முன்கூட்டியே அறிந்து சாதுர்யமாக அரசியல் நகர்வுகளை நகர்த்துவது வரை எம்.ஜி.ஆருக்கு பக்கபலமாக இருந்ததால் அவரை அரசியல் ராஜதந்திரி என அதிமுகவினர்  கொண்டாடினர்.  ஆயிரம் காலத்து பயிராக இன்று அதிமுக அக்கட்சியினரால் கொண்டாடப்படுகிறது. ஆனால் தொடங்கிய 7 ஆண்டுகளில் அதன் ஆயுள் முடியக்கூடிய சூழலும் அன்று ஒரு சமயம் ஏற்பட்டது. அப்போது பண்ருட்டி ராமச்சந்திரன் மேற்கொண்ட ஒரு கார் பயணம் அதனை தடுத்து நிறுத்தியது.

அவசரநிலையை பிரகடனப்படுத்தியதால் உருவாகிய அதிருப்தியால் 1977ம் ஆண்டு நாடாளுமன்ற தேர்தலில் தோல்வி அடைந்த இந்திராகாந்தி, குறுகிய காலத்திலேயே மீண்டும் எழுச்சி பெற்றார். அப்போது இந்திரா காங்கிரசுக்கு எதிராக தேசிய அளவில் வலுவான அணியை அமைக்கும் முயற்சியில் ஈடுபட்டார் ஜனதா கட்சி தலைவர்களில் ஒருவரான பிஜூ பட்நாயக். அதில் ஒரு கட்டமாக தமிழ்நாட்டில் திமுகவையும், அதிமுகவையும் ஒரே கட்சியாக இணைக்கும் முயற்சியிலும் தீவிரமாக ஈடுபட்டார் பட்நாயக். 1979ம் ஆண்டு செப்டம்பர் மாதம் சென்னை வந்த பிஜூபட்நாயக் செப்டம்பர் 12ந்தேதி திமுக தலைவர் கருணாநிதியை அவரது இல்லத்தில் சந்தித்து பேசி இணைப்புக்கு அவரது சம்மதத்தை பெற்றார். மறுநாள் சென்னை சேப்பாக்கம்,  விருந்தினர் மாளிகையில் எம்.ஜி.ஆர், கருணாநிதி இடையேயான சந்திப்பு நடைபெற்றது. கருணாநிதியுடன் அப்போது திமுகவின் பொதுச் செயலாளராக இருந்த க.அன்பழகன் வந்திருந்தார். முதலமைச்சர் எம்.ஜி.ஆருடன் அமைச்சர்கள் நெடுஞ்செழியனும், பண்ருட்டி ராமச்சந்திரனும் வந்திருந்தனர். எம்.ஜி.ஆரும், கருணாநிதியும் தனியாக சந்தித்து 40 நிமிடங்கள் பேசியதாகவும், திமுக என்கிற பெயருடன், அதிமுக கொடியுடன் புதிய கட்சியை ஏற்படுத்த முடிவு எடுக்கப்பட்டதாகவும் செய்திகள் வெளியாகின. மறுநாள் எம்.ஜி.ஆர் வேலூர் பொதுக்கூட்டத்தில் பேசும்போதும் திமுக, அதிமுக இணைப்பு குறித்த அறிவிப்பை வெளியிடுவார் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் அது குறித்து அவர் ஒரு வார்த்தையும் பேசவில்லை. கருணாநிதியையும், திமுகவையும் கடுமையாக விமர்சித்து பேசினர். திமுக, அதிமுக இணைப்பு இனி ஒருபோதும் சாத்தியமில்லை என்பதை வேலூர் பொதுக்கூட்டம் உணர்த்தியது. எம்.ஜி.ஆர், கருணாநிதி சந்திப்புக்கும் வேலூர் பொதுக்கூட்டத்திற்கும் இடைப்பட்ட ஒரே நாளில் தமிழக அரசியல் வரலாறு தலைகீழாக திரும்பியது எப்படி நிகழ்ந்தது?. அந்த இடத்தில்தான் பண்ருட்டி ராமச்சந்திரனின் அரசியல் சாதுர்யத்தையும், ராஜதந்திரத்தையும் சுட்டிக்காட்டி அவரை கொண்டாடினர் திமுகவுடன் அதிமுக இணைவதை விரும்பாதவர்கள். அதே நேரம் திமுக அதிமுக இணைப்பை விரும்பியவர்கள் பண்ருட்டி ராமச்சந்திரனை பரமஎதிரியாக விமர்சித்தனர்.

சென்னை விருந்தினர் மாளிகையில் கருணாநிதியை சந்தித்து திமுக, அதிமுக இணைப்பு குறித்து பேச்சுவார்த்தை நடத்திய எம்.ஜி.ஆர். பின்னர் காரில் வேலூருக்கு பயணித்தார். அப்போது அவருடன் காரில் பயணித்தவர் பண்ருட்டி ராமச்சந்திரன். அவர்தான் எம்.ஜி.ஆரிடம் சாதுர்யமாக பேசி அவரது மனதை மாற்றியதாக கூறப்படுவதுண்டு. பின்னர் 2009ம் ஆண்டு நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் கருணாநிதி இது குறித்து குறிப்பிட்டு பேசும்போது, வேலூர் பொதுக்கூட்டத்திற்கு காரில் எம்.ஜி.ஆருடன் பயணித்த பண்ருட்டி ராமச்சந்திரன் திமுகவுடன் அதிமுக இணைவதை தடுத்துவிட்டதாக தனது ஆதங்கத்தை வெளிப்படுத்தினார்.

இலங்கையில் தமிழர்களுக்கு எதிராக சிங்கள அரசு பல்வேறு கொடுமைகளை நிகழ்த்தியபோது இது குறித்து, சர்வதேச நாடுகளின் கவனத்திற்கு கொண்டு செல்ல எம்.ஜி.ஆர் தீவிர முயற்சி மேற்கொண்டார். இலங்கை தமிழர்கள் படும் இன்னல்கள் குறித்து ஐ.நா.சபையில் எடுத்துரைப்பதற்காக பண்ருட்டி ராமச்சந்திரனைத்தான் அனுப்பிவைத்தார் எம்.ஜி.ஆர். அப்போது ஐ.நா.மன்றத்தில் இலங்கை அரசின் பிரதிநிதிகளின் விளக்கங்களுக்கு தகுந்த பதிலடி கொடுக்கும் வகையில் பேசிய அவர், இலங்கையில் தமிழர்களுக்கு எதிராக நிகழ்வது இனப்படுகொலை என்பதை அழுத்தம் திருத்தமாக எடுத்துரைத்தார். அவரது உரை பிரெஞ்ச், ரஷியா, சீனா உள்ளிட்ட மொழிகளில் உடனடியாக மொழிபெயர்க்கப்பட்டு சர்வதேச நாடுகளின் பிரதிநிதிகளின் கவனத்திற்கு கொண்டு செல்லப்பட்டது. இதனால் இலங்கை பிரதிநிதிகள் அதிர்ச்சி அடைந்தனர். ஐ.நா.பயணத்தை வெற்றிகரமாக முடித்து விட்டு அமெரிக்காவிலிருந்து திரும்பிய பண்ருட்டி ராமச்சந்திரனை விமான நிலையத்திற்கு தானே நேரடியாக சென்று வரவேற்றார் எம்.ஜி.ஆர். அவரை விமான நிலையத்திலிருந்து ஊர்வலமாக அழைத்துவந்து மகிழ்ச்சியில் திக்குமுக்காட வைத்தார் எம்.ஜி.ஆர்.

இப்படி பண்ருட்டி ராமசந்திரனின் அரசியல் வாழ்க்கை ஓபிஎஸ் கூறுவது போல் ஒருபுறம் பெருமைக்குரியதாக இருந்தாலும், மறுபுறம் இபிஎஸ் கூறுவதுபோல் பல்வேறு விமர்சனங்களையும் சந்தித்துள்ளது. எம்.ஜி.ஆர் மறைவுக்கு பிந்தைய அதிமுக சகாப்தத்தில் ஜெயலலிதா மீதான விஸ்வாசத்தின் அடிப்படையிலேயே அக்கட்சியில் ஒருவரின் முக்கியத்தும் தீர்மானிக்கப்பட்டுவருகிறது. இந்த சூழலில் ஜெயலலிதாவை ஒரு காலத்தில் மிகக் கடுமையாக பண்ருட்டி ராமச்சந்திரன் விமர்சித்ததையும், எம்.ஜி.ஆர் மறைவுக்கு பின்னர் அதிமுக பிளவு பட்டபோது ஜெயலலிதாவின் தீவிர எதிர்ப்பாளராக அவர் திகழ்ந்தையும் எடப்பாடி பழனிசாமி ஆதரவாளர்கள் சுட்டிக்காட்டுகின்றனர். எம்.ஜி.ஆர். மறைவுக்கு பின்னர் பிளவுபட்ட அதிமுக,  மீண்டும்  1989ம் ஆண்டு பிப்ரவரி மாதம் ஒன்றிணைந்து ஜெயலலிதா தலைமையில் புதிய சகாப்தம் தொடங்கியது. அன்றிலிருந்து கடந்த 2016ம் ஆண்டு டிசம்பர் மாதம் அவர் மறையும் வரை உள்ள சுமார் 27 ஆண்டுகளில் 3 ஆண்டுகள் மட்டுமே ஜெயலலிதாவுடன் இணைந்து அதிமுகவில் பயணித்துள்ளார் பண்ருட்டி ராமச்சந்திரன். ஜெயலலிதா அதிமுகவிற்கு தலைமையேற்றிருந்த காலக்கட்டத்தில் பெரும்பாலான வருடங்கள்,  பாமக, தேமுதிக, என மாற்றுக்கட்சிகளிலேயே வலம் வந்து ஜெயலலிதாவுக்கும், அதிமுகவிற்கும் எதிராக கடுமையான விமர்சனங்களை பண்ருட்டி ராமச்சந்திரன் முன்வைத்தையும் எடப்பாடி பழனிசாமி தரப்பினர் சுட்டிக்காட்டுகின்றனர். திமுக, அதிமுக, பாமக, மக்கள் உரிமைக்கழகம், தேமுக, மீண்டும் அதிமுக என பண்ருட்டிராமச்சந்திரன் கட்சி மாறியதே அரசியலில் அவர் எதிர்கொள்ளும் பிரதான விமர்சனம்.

”அய்ய்யோ அதிமுகவுக்கு உங்க அறிவுரையே வேண்டாங்க….நீங்க  அறிவுரை கூறிய கட்சிகளெல்லாம் என்ன ஆனது என்பது எங்களுக்கு தெரியும்” என்று பண்ருட்டி ராமச்சந்திரன் குறித்து எடப்பாடி பழனிசாமி கூறியதை ரசிக்கும் அவரது ஆதரவாளர்கள், மாற்றுக்கட்சிகளில் பயணித்த காலத்திலும், சொந்த கட்சி நடத்தியும் பண்ருட்டி ராமச்சந்திரன் என்ன சாதித்தார் எனக் கேள்வி எழுப்புகின்றனர்.  அதிமுகவிலிருந்து விலகி பாமகவில் இணைந்த அவர் 1991ம் ஆண்டு தேர்தலில் அக்கட்சி சார்பில் பண்ருட்டி தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்றார். சட்டமன்றத்திற்குள் நுழைந்த பாமகவின் முதல் எம்.எல்.ஏ என்கிற பெருமை இருந்தும் அக்கட்சியில் தொடர்ந்து நீடிக்காமல் பாமகவிலிருந்து சிறிது காலத்திலேயே வெளியேறினார்.

தொடர்ந்து மக்கள் நல உரிமைக்கழகம் என்கிற அமைப்பை தொடங்கி நடத்தி வந்த பண்ருட்டி ராமச்சந்திரன், பின்னர் அதனையும் கைவிட்டு தேமுதிகவில் ஐக்கியமானார். அண்ணா காலத்து அரசியல்வாதி தங்கள் கட்சியில் இணைந்ததால் விஜயகாந்த் உற்சாகம் அடைந்தார். தேமுதிகவின் அவைத் தலைவராக இருந்து விஜயகாந்தோடு அரசியலில் பயணித்த பண்ருட்டி ராமச்சந்திரன் 2011ம் ஆண்டு தேர்தலில் ஆலந்தூர் தொகுதியில் வெற்றி வெற்று 7வது முறையாக சட்டமன்றம் சென்றார். ஒரே நபர் தனது அரசியல் பயணத்தில் திமுக, அதிமுக, பாமக, தேமுதிக என நான்கு கட்சிகள் சார்பில் சட்டமன்றத்திற்கு சென்றது அநேகமாக அவராகத்தான் இருக்கும்.

தேமுதிகவிலும் பண்ருட்டி ராமச்சந்திரனால் தொடர்ந்து நீடிக்க முடியவில்லை. அவருக்கும் விஜயகாந்துக்கு கருத்து வேறுபாடு ஏற்பட்டுள்ளதாக தகவல் வெளியான நிலையில் கடந்த 2013ம் ஆண்டு டிசம்பர் மாதம் உடல் நிலையை காரணம் காட்டி அரசியலுக்கே முழுக்கு போட்டார். எம்.எல்.ஏ பதவியையும் ராஜினாமா செய்தார். அவரது அரசியல் பயணம் அஸ்தமனமாகிவிட்டது என கருதிக்கொண்டிருந்த நேரத்தில் 2014ம் ஆண்டு பிப்ரவரி மாதம் ஜெயலலிதாவை குடும்பத்தினருடன் சந்தித்து அதிமுகவில் ஐக்கியமானார் பண்ருட்டி ராமச்சந்திரன். 25 ஆண்டுகள் இடைவெளிக்கு பின் அதிமுகாவில் பண்ருட்டி ராமச்சந்திரனின் பயணம் தொடர்ந்தது. அவரது 60 ஆண்டு கால அரசியல் பயணத்தின்  நிறைகளை தூக்கிபிடித்து ஓபிஎஸ் தரப்பினரும், குறைகளை தூக்கிபிடித்து இபிஎஸ் தரப்பினரும் நடத்தும் வார்த்தை மோதல்கள் அதிமுகவில் சூழ்ந்துள்ள மற்றொரு சர்ச்சையாக உருவெடுத்துள்ளது.

 

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.
Advertisement:
SHARE

Related posts

முன்னாள் அமைச்சர் ஜெயக்குமாருக்கு மார்ச் 9ஆம் தேதி வரை நீதிமன்ற காவல்

Arivazhagan Chinnasamy

“நெற்றிக்கண்” – திரைப்பட விமர்சனம்

G SaravanaKumar

கள்ளச் சந்தையில் உரங்களை விற்றால் நடவடிக்கை: மத்திய அமைச்சர் எச்சரிக்கை

EZHILARASAN D