மக்களின் வாழ்வியலை உலகம் முழுவதும் சொல்வதுதான் பான் இந்தியா படம் – இயக்குனர் தங்கர் பச்சான்.!

மக்களின் வாழ்வியலை உலகம் முழுவதும் சொல்வதுதான் பான் இந்தியா படம் என  இயக்குனர் தங்கர் பச்சான் தெரிவித்துள்ளார். இயக்குநர் தங்கர் பச்சான் இயக்கத்தில் உருவாகியுள்ள புதிய படம் ‘கருமேகங்கள் கலைகின்றன’. இப்படத்தில் பாரதிராஜா, யோகிபாபு,…

மக்களின் வாழ்வியலை உலகம் முழுவதும் சொல்வதுதான் பான் இந்தியா படம் என  இயக்குனர் தங்கர் பச்சான் தெரிவித்துள்ளார்.

இயக்குநர் தங்கர் பச்சான் இயக்கத்தில் உருவாகியுள்ள புதிய படம் ‘கருமேகங்கள் கலைகின்றன’. இப்படத்தில் பாரதிராஜா, யோகிபாபு, கவுதம் வாசுதேவ் மேனன், அதிதி பாலன் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். இந்த படத்திற்கு ஜி.வி.பிரகாஷ் இசையமைத்துள்ளார்.

சிறுகதை ஒன்றை தழுவி இந்த படம் உருவாக்கப்பட்டுள்ளதாக சொல்லப்படுகிறது. இப்படத்தை வாவ் மீடியா என்டர்டெயின்மென்ட் நிறுவனம் மூலம் வீரசக்தி தயாரிக்கிறார். இப்படத்தின் படப்பிடிப்பு கடந்தாண்டு ஜூலை மாதம் தொடங்கி ஜனவரி 14ம் தேதி நிறைவடைந்தது.

இந்த படத்தின் ஃபர்ஸ்ட்லுக் போஸ்டரை நடிகரும் மக்கள் நீதி மய்யத்தின் தலைவருமான கமல்ஹாசன் , இயக்குனர் பாரதிராஜா மற்றும் இப்படத்தை இயக்கிய தங்கர் பச்சான் ஆகியோர் கடந்த மார்ச் மாதம் வெளியிட்டனர். இதனைத் தொடர்ந்து  இப்படத்தில் இடம்பெற்ற  ’செவ்வந்திப் பூவே’ என்ற முதல் சிங்கிள் பாடலை கடந்த மே 5  படக்குழு வெளியிட்டது.

இந்த நிலையில் கருமேகங்கள் கலைகின்றன படத்தின்  இசை வெளியீட்டு விழா நேற்று  சென்னையில் நடைபெற்றது. இவ்விழாவில் தங்கர் பச்சான், இயக்குனர் லோகேஷ் கனகராஜ், பேரரசு , எஸ்.ஏ.சந்திரசேகர், கவிஞர் வைரமுத்து, இசையமைப்பாளர் ஜிவி.பிரகாஷ் குமார், யோகி பாபு உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

இசை வெளியீட்டு நிகழ்ச்சியில் மேடையில் பேசிய தங்கர் பச்சான் தெரிவித்ததாவது..

” 2003நான் எழுதிய ஒரு சிறுகதை, நான் காரில் உட்கார்ந்து கொண்டிருக்கும் போது இரண்டு பேர் வெளியே உட்கார்ந்து கொண்டிருந்தார்கள். அவர்களைப் பற்றி அப்பொழுது எழுத ஆரம்பித்தது தான் கருமேகங்கள் கலைகின்றன. எல்லாரும் அன்பை தேடி அலைகின்றனர். இதுதான் இந்த படம். இன்று அனைவரிடமும் செல்போன் உள்ளது ஆனால் அன்பு இல்லை.மக்களின் வாழ்வியலை உலகம் முழுவதும் சொல்வதுதான் முக்கியம். அதுதான் பான் இந்தியா படம்.

நல்ல படைப்புகளை தயாரிக்க யாரும் முன் வருவதில்லை. அன்று தயாரிப்பாளர்கள் இல்லாத காரணத்தால் இந்த படம் எடுக்க முடியாமல் போய்விட்டது. ஒன்பது ரூபாய் நோட்டு மக்கள் கொண்டாட வேண்டிய படம். நல்ல படங்களை வீட்டில் இருந்து பார்க்கின்றனர். ஒரு படம் சரியில்லை என்று கூறுவதற்காகவே சிலர் திரையரங்கம் செல்கின்றனர் டிக்கெட் ஆயிரம் என்றாலும் அதனை வாங்கி படம் பார்த்துவிட்டு படம் சரியில்லை என்று கூறுகிறார்கள். சிறந்த கதைகள் என்னிடம் நிறைய உள்ளது. இந்த படத்தை பார்த்த பிறகு அனைவரும் தந்தையை தேடி செல்வீர்கள், அந்த அளவிற்கு இந்த படம் இருக்கும்.

இந்த படத்தில் அனைவரும் அதிகமாக என்னை திட்டி இருப்பார்கள். யோகி பாபு கூட என்னை திட்டி இருப்பார். ஒரு நல்ல படைப்பிற்காக அனைவரும் அதிகமாக கஷ்டப்படுத்தியுள்ளேன். என்னுடைய உதவியாளர்களிடம் அதிகமாக கோவத்தை காட்டி உள்ளேன். யோகி பாபுக்காக ஒரு ஆடியோ பதிவு செய்ய மூன்று மணி நேரம் காத்துக் கொண்டிருந்தேன். ஏனென்றால் அவருக்கு அவ்வளவு படம் இருந்தது. பாரதிராஜா  இல்லை என்றால் நான் இல்லை. அவர் இங்கு இருந்திருந்தால் அவர் காலிலே விழுந்திருப்பேன்.” என இயக்குனர் தங்கர் பச்சான் தெரிவித்தார்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.