அச்சு அசலாக பும்ராவைப் போல பந்து வீசும் பாகிஸ்தான் சிறுவன் – இணையத்தில் வீடியோ வைரல்!

அச்சு அசலாக ஜஸ்பிரித் பும்ராவைப் போலவே பந்து வீசும் பாகிஸ்தான் சிறுவனின் வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது. பார்படாஸில் நடைபெற்ற டி20 உலகக் கோப்பை இறுதிச் சுற்றில் தென்னாப்பிரிக்காவை வீழ்த்தி இந்திய அணி கடந்த…

அச்சு அசலாக ஜஸ்பிரித் பும்ராவைப் போலவே பந்து வீசும் பாகிஸ்தான் சிறுவனின் வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.

பார்படாஸில் நடைபெற்ற டி20 உலகக் கோப்பை இறுதிச் சுற்றில் தென்னாப்பிரிக்காவை வீழ்த்தி இந்திய அணி கடந்த 29.06.2024 அன்று சாம்பியன் பட்டம் வென்றது. இரண்டாவது முறையாக டி20 உலகக் கோப்பையை இந்திய அணி வென்றதால் நாடே கொண்டாட்டத்தில் ஆழ்ந்தது.
உலகக் கோப்பை ஆட்டத்தில் மொத்த தொடர் மற்றும் இறுதிப் போட்டி என இந்திய பந்துவீச்சாளர் ஜஸ்பிரித் பும்ரா சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி வெற்றிக்கு வழிவகுத்தார். டி20 உலகக் கோப்பை போட்டிகளில் 8போட்டிகளில் விளையாடிய அவர் 15விக்கெட்களை வீழ்த்தி அசத்தினார்.

உலகக் கோப்பை இறுதிப் போட்டியில் அணியின் வெற்றி தென் ஆப்ரிக்காவிற்கு சாதகமாக இருந்தது. ஆனால் கடைசி 5ஓவரில் ஒரு மேஜிக் நிகழ்ந்தது. அந்த மேஜிக்கை துவக்கி வைத்தவர் பும்ராதான் என வான்கடே மைதானத்தில் இந்திய அணி வீரர்களுக்கு நடைபெற்ற பாராட்டு விழாவில் அணியின் மூத்த வீரரான விராட் கோலி பும்ராவுக்கு புகழாரம் சூட்டினார்.

இதனால் டி20 தொடர் முழுவதும் சிறப்பாக செயல்பட்ட ஜஸ்பிரித் பும்ராவுக்கு தொடர் நாயகன் விருது வழங்கப்பட்டது. இதேபோல ஐசிசியின் ஜூன் மாதத்துக்கான சிறந்த வீரருக்கான விருதினை இந்திய அணியின் வேகப் பந்துவீச்சாளர் ஜஸ்பிரித் பும்ரா வென்றுள்ளார்.

இந்த நிலையில் பாகிஸ்தானில் கிரிக்கெட் விளையாடும் சிறுவன் ஒருவன் ஜஸ்பிரித் பும்ராவைப் போலவே அச்சு அசலாக பந்துவீசுவது போன்ற வீடியோ ஒன்று சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. மேலும் இதனை பாகிஸ்தான் கிரிக்கெட் ஜாம்பவானான வாசிம் அக்ரம் தனது சமூக வலைதள பக்கத்தில் பகிர்ந்து உலகின் சிறந்த வேகப்பந்து வீச்சாளர்களில் ஒருவரான பும்ராவினை போன்றே அந்த சிறுவன் பந்து வீசுகிறான். கிரிக்கெட்டிற்கு எல்லையே இல்லை என பதிவிட்டுள்ளார்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.