பாகிஸ்தானில் பெட்ரோல் விலை ரூ.180 ஆக உயர்வு

பாகிஸ்தானில் பெட்ரோல் விலை ஒரே நாளில் ரூ.30 உயர்த்தப்பட்டு ஒரு லிட்டர் பெட்ரோல் ரூ.180க்கு விற்கப்படுகிறது. பெட்ரோல், டீசல் உள்ளிட்ட எரிபொருட்களுக்கு பாகிஸ்தான் மானியம் வழங்க சர்வதேச நாணய நிதியம் எதிர்ப்பு தெரிவித்திருந்தது. இது…

பாகிஸ்தானில் பெட்ரோல் விலை ஒரே நாளில் ரூ.30 உயர்த்தப்பட்டு ஒரு லிட்டர் பெட்ரோல் ரூ.180க்கு விற்கப்படுகிறது.

பெட்ரோல், டீசல் உள்ளிட்ட எரிபொருட்களுக்கு பாகிஸ்தான் மானியம் வழங்க சர்வதேச நாணய நிதியம் எதிர்ப்பு தெரிவித்திருந்தது. இது ஏற்கனவே மேற்கொள்ளப்பட்ட ஒப்பந்தத்திற்கு எதிரானது என்றும் எனவே, மானியத்தை அரசு திரும்பப் பெற வேண்டும் என்றும் வலியுறுத்தி இருந்தது. அப்போதுதான், புதிய நிதி உதவியை அளிக்க முடியும் என்றும் தெரிவித்திருந்தது.

இதையடுத்து, பெட்ரோல் உள்பட அனைத்து விதமான எரிபொருட்களின் விலையை பாகிஸ்தான் அரசு நேற்று திடீரென உயர்த்தியது. அனைத்து பொருட்கள் மீதும் லிட்டருக்கு ரூ.30 உயர்த்தப்படுவதாக நிதி அமைச்சர் மிஃப்தா இஸ்மாயில் நேற்று அறிவித்தார்.

இதன் காரணமாக பெட்ரோல் விலை ரூ.179.86-க்கும், டீசல் ரூ.174.15க்கும், மண்ணெண்ணெய் விலை ரூ.155.56க்கும் விற்கப்படுகிறது.

பணவீக்கம் காரணமாகவே இந்த விலை உயர்வு அறிவிக்கப்பட்டுள்ளது என தெரிவித்துள்ள இஸ்மாயில், தற்போதைய நிலையில் அரசுக்கு வேறு வாய்ப்பு இல்லை என கூறியுள்ளார். விலை உயர்வு குறித்த இந்த முடிவு எளிதாக எடுக்கப்பட்டதல்லை என தெரிவித்துள்ள அவர், நாட்டின் பொருளாதாரத்தை காப்பாற்றவே இத்தகைய கடினமான முடிவுக்கு பிரதமர் ஷெபாஸ் ஷெரீப் ஒப்புதல் அளித்துள்ளதாகக் கூறினார்.

அரசின் இந்த முடிவுக்கு எதிர்க்கட்சித் தலைவரான இம்ரான் கான் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள ட்விட்டர் பதிவில், ஒரே நாளில் இவ்வளவு பெரிய தொகை இதற்கு முன் உயர்த்தப்பட்டதே இல்லை என குறிப்பிட்டுள்ளார். ரஷ்யாவிடம் இருந்து 30 சதவீத விலை குறைப்பில் கச்சா எண்ணெய் வாங்குவதற்கான ஒப்பந்தத்தை பாகிஸ்தான் அரசு செயல்படுத்த மறுப்பது ஏன் என்றும் அவர் கேள்வி எழுப்பி உள்ளார்.

அதேநேரத்தில், அமெரிக்காவுடன் நட்புறவை பேணிக்கொண்டே ரஷ்யாவிடம் இருந்து சலுகை விலையில் இந்தியா கச்சா எண்ணெய் வாங்கி, உள்நாட்டில் பெட்ரோலியப் பொருட்களின் விலையை குறைத்திருப்பதை சுட்டிக்காட்டி இம்ரான் கான் பாராட்டு தெரிவித்துள்ளார்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.