அனைத்து சாதியினரும் அர்ச்சகர் ஆகலாம் என்ற தமிழ்நாடு அரசின் அரசாணைக்கு தடை விதிக்க உச்ச நீதிமன்றம் மறுப்பு தெரிவித்துள்ளது.
ஆகம விதிகளுக்கு முரணாக கோயில்களில் அர்ச்சகர்கள் மற்றும் பிற ஆகம சம்பந்தப்பட்ட பணியாளர்களை நியமிக்கவோ அல்லது தேர்வு செய்வதையோ சம்மந்தப்பட்ட அதிகாரிகளுக்குத் தடை விதிக்க வேண்டும் எனக்கோரி ஆதி சைவ சிவாச்சாரியார்கள் நலச்சங்கம் சார்பில் உயர் நீதிமன்றத்தில் பொதுநல மனு தாக்கல் செய்யப்பட்டது.
குறிப்பாக தமிழ்நாடு இந்து சமய நிறுவன ஊழியர்களுக்கான (சேவை நிபந்தனைகள்) விதிகள், 2020ன்கீழ் கடந்த செப்டம்பர் 3, 2020ம் தேதி வெளியிட்ட அரசாணைக்கு தடை விதிக்க வேண்டும் எனவும் மனுவில் கோரப்பட்டது
அந்த மனுக்களை விசாரித்த சென்னை உயர்நீதிமன்றம், தமிழ்நாடு அரசின் அரசாணைக்கு தடை விதிக்க மறுத்ததோடு மனுக்களை தள்ளுபடி செய்து உத்தரவிட்டது.
இதனையடுத்து ஆதி சைவ சிவாச்சாரியார்கள் நலச்சங்கம் சார்பில் உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீட்டு மனு தாக்கல் செய்யப்பட்டது. இந்த மனு நீதிபதிகள் எம்.எம்.சுந்தரேஷ், ஜெ.பி.பர்திவாலா அடங்கிய அமர்வில் விசாரணைக்கு வந்தது
அப்போது மனுதாரர்கள் தரப்பில் சென்னை உயர்நீதிமன்ற உத்தரவுக்கு இடைக்கால தடை விதிக்க வேண்டும் என கோரிக்கை வைக்கப்பட்டது. ஆனால் அதற்கு மறுப்பு தெரிவித்த நீதிபதிகள், இந்த மனு தொடர்பாக தமிழ்நாடு அரசு (இந்து சமய அறநிலையத்துறை) பதிலளிக்க நோட்டீஸ் அனுப்ப உத்தரவிட்டு விசாரணையை ஒத்திவைத்தனர்.







