டெல்லி அவசர சட்டத்தை மாநிலங்களவையில் எதிர்கட்சிகள் தோற்கடிக்க வேண்டும் – அரவிந்த் கெஜ்ரிவால்

டெல்லி அதிகாரம் தொடர்பான மத்திய அரசின்  அவசர சட்டத்தை மாநிலங்களவையில் எதிர்கட்சிகள் தோற்கடிக்க வேண்டும் என அரவிந்த் கெஜ்ரிவால் கோரிக்கை விடுத்துள்ளார். டெல்லியில் அதிகாரிகளை நியமிக்கும் அதிகாரம் தங்களுக்கே உள்ளதாக கூறி மத்திய அரசு…

டெல்லி அதிகாரம் தொடர்பான மத்திய அரசின்  அவசர சட்டத்தை மாநிலங்களவையில் எதிர்கட்சிகள் தோற்கடிக்க வேண்டும் என அரவிந்த் கெஜ்ரிவால் கோரிக்கை விடுத்துள்ளார்.

டெல்லியில் அதிகாரிகளை நியமிக்கும் அதிகாரம் தங்களுக்கே உள்ளதாக கூறி மத்திய அரசு அவசர சட்டம் பிறப்பித்தது. இந்த அவசர சட்டத்திற்கு எதிராக டெல்லி முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால், பாஜக ஆட்சி செய்யாத  மாநிலங்களின் முதலமைச்சர்கள் மற்றும் எதிர்க்கட்சி தலைவர்களை சந்தித்து ஆதரவு கோரி வருகிறார்.

முன்னதாக மேற்கு வங்க முதலமைச்சர் மம்தா பானர்ஜி, மகாராஷ்டிரா முன்னாள் முதலமைச்சர் உத்தவ் தாக்கரே, பீகார் முதலமைச்சர் நிதிஷ்குமார், பீகார் துணை முதலமைச்சர் தேஜஸ்வி யாதவ், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி பொதுச்செயலாளர் சீதாராம் யெச்சூரி உள்ளிட்டோரை அரவிந்த் கெஜ்ரிவால் சந்தித்துள்ளார்.

இந்நிலையில், தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை இன்று மாலை 5 மணிக்கு சென்னை ஆழ்வார்ப்பேட்டையில் சந்தித்து அரவிந்த் கெஜ்ரிவால் ஆதரவு திரட்ட உள்ளதாக தெரிவிக்கப்பட்ட நிலையில் இன்று மாலை சென்னை ஆழ்வார்பேட்டையில் உள்ள முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இல்லத்தில் டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் சந்தித்தார்.

இந்த சந்திப்பின் போது டெல்லி முதல்வரோடு பஞ்சாப் முதலமைச்சர் பகவந்த் மான் , ஆம் ஆத்மி எம்பிக்களான சஞ்சய் சிங் மற்றும் ராகவ் சத்தா ஆகியோர் உடன் இருந்தனர். மேலும் தமிழ்நாட்டு அமைச்சர்கள் பொன்முடி, அன்பில் மகேஸ், கனிமொழி எம்பி, டிஆர்.பாலு எம்பி ஆகியோர் இச்சந்திப்பில் கலந்து கொண்டனர்.

தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் டெல்லி முதல்வர் கெஜ்ரிவால் மற்றும் பஞ்சாப் முதல்வர் பகவந்த் மானுக்கு  ”The Glorious State of Tamilnadu ” என்ற தொகுப்பை வழங்கினார்.

இதன் பின்னர் மூன்று மாநில முதலமைச்சர்களும் கூட்டாக செய்தியாளர்களை சந்தித்தனர். இந்த செய்தியாளர் சந்திப்பில் பேசிய டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் தெரிவித்ததாவது..

” நல்ல முறையில் எங்களை வரவேற்றதற்கு முதலில் நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்.  டெல்லி மாநில மக்களின் நலனுக்காக திமுக அரசு ஆதரவு  தந்துள்ளது. உச்ச நீதிமன்ற தீர்ப்பை மீறி மாநில அரசின் உரிமையை பறிக்கும் வகையில் மத்திய அரசு செயல்படுகிறது. மத்திய அரசின் நடவடிக்கை அரசியல் சாசனத்திற்கு எதிரானது, ஜனநாயகத்திற்கு விரோதமானது.

ஒரு அரசுக்கு முழுமையான  சுதந்திரம் இல்லை எனில்  அந்த அரசை சரியாக  நடத்த முடியாது என உச்சநீதிமன்றமே தெரிவித்துள்ளது. மாநிலங்களவையில் மத்திய அரசுக்கு பெரும்பான்மை இல்லை, எனவே எதிர்க்கட்சிகள்  டெல்லி அரசுக்கு ஆதரவு தர வேண்டும்.

மாநிலங்களவையில்  இந்த அவசர சட்டத்தை எதிர்த்து வெற்றி பெற்றால்  2024 தேர்தலுக்கு முன்னோட்டமாக பாஜகவை  வென்றது போல் இருக்கும். 2024-ம் ஆண்டு நாடாளுமன்ற தேர்தலுக்கு முன் பாஜகவை வீழ்த்த இது ஒரு நல்ல வாய்ப்பு.” என டெல்லி முதல்வர் கெஜ்ரிவால் தெரிவித்தார்.

 

இதனைத் தொடர்ந்து பஞ்சாப் முதல்வர் பகவந்த் மன் தெரிவித்ததாவது..

டெல்லி மாநில அதிகாரம் தொடர்பான அவசர சட்டத்தை எதிர்க்க ஆதரவு கோரி தமிழ்நாடு  முதலமைச்சரை சந்தித்துள்ளோம். இது வெறுமனே டெல்லி பாதுகாக்க மட்டுமல்ல ஜனநாயகத்தை பாதுகாப்பதற்கான சந்திப்பு.

பாஜக ஆட்சி செய்யாத  மாநிலங்களை ஆளுநர்கள் மூலமும் அவசர சட்டங்கள் மூலமும் மத்திய அரசு நெருக்கடி கொடுக்கிறது. பஞ்சாப் மாநில சட்டப்பேரவையில் பட்ஜெட் கூட்டத்தொடரை கூட்டுவதற்குகூட உச்ச நீதிமன்றத்திற்கு செல்ல  வேண்டிய நிலை உள்ளது. அரசியலமைப்பு சட்டத்தையும், ஜனநாயகத்தையும் பாதுகாக்க நாம் அனைவரும் ஒன்றிணைய வேண்டும்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.