வார இறுதி நாட்கள் மற்றும் விநாயகர் சதுர்த்தி விடுறையை தொடர்ந்து நாளை, நாளை மறுநாள் என 2 நாட்களுக்கு தமிழ்நாடு முழுவதும் 1,250 சிறப்பு பஸ்கள் இயக்கப்படும் என போக்குவரத்து துறை தெரிவித்துள்ளது.
இது குறித்து அரசு விரைவுப் போக்குவரத்துக் கழக மேலாண் இயக்குநர் வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது:
“தமிழ்நாட்டில் 16-ம் தேதி சனிக்கிழமை, 17-ம் தேதி ஞாயிற்றுக் கிழமை மற்றும் சுபமுகூர்த்த நாட்களை தொடர்ந்து, 18-ம் தேதி விநாயகர் சதுர்த்தி தினத்தை முன்னிட்டு திங்கட்கிழமை அரசு விடுமுறை தினம் என 3 நாட்கள் தொடர் விடுமுறை காரணமாக பொதுமக்கள் தங்கள் சொந்த ஊர்களுக்கும் மற்றும் சுபநிகழ்ச்சிகளுக்கும் சென்று வருவார்கள். இதனால் வெளி ஊர்களுக்கு செல்லும் பயணிகள், சுபநிகழ்ச்சிகளுக்கு செல்ல திட்டமிடும் பயணிகள் தங்களுடைய தேவைகளுக்கு ஏற்ப முன்பதிவு செய்து பயணிக்கலாம்.
எனவே, வெள்ளி, சனி, ஞாயிறு மற்றும் செவ்வாய் கிழமை வரை பயணிகள் அதிகளவில் முன்பதிவு செய்துள்ளனர். இதனை கருத்தில் கொண்டு தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகங்கள் தினசரி இயக்கப்படும் பேருந்துகளுடன், கூடுதலாக சிறப்பு பேருந்துகளை இயக்க திட்டமிடப்பட்டுள்ளது. மேலும், இந்நாள் வரை சென்னை மற்றும் பல்வேறு இடங்களிலிருந்து நாளை பயணம் மேற்கொள்ள 19,268 பயணிகளும், 16-ம் தேதி 11,471 பயணிகளும் மற்றும் 17-ம் தேதி 7,773 பயணிகளும் முன்பதிவு செய்துள்ளனர்.
தற்போது, பயணிகள் எந்தவித சிரமமின்றி பயணம் மேற்கொள்ள ஏதுவாக சென்னையிலிருந்து தமிழ்நாட்டின் முக்கிய இடங்களுக்கு நாளை தினசரி இயக்க கூடிய பேருந்துகளுடன் கூடுதலாக 650 பேருந்துகளும், நாளை மறுநாள் 200 பேருந்துகளும் பல்வேறு இடங்களிலிருந்து அதாவது கோவை, மதுரை, திருநெல்வேலி, திருச்சி, சேலம் போன்ற இடங்களிலிருந்து முக்கிய இடங்களுக்கும் மற்றும் பெங்களூரிலிருந்து பிற இடங்களுக்கும் 400 சிறப்பு பேருந்துகள் என ஆக மொத்தம் 1,250 பேருந்துகள் இயக்க திட்டமிடப்பட்டுள்ளது.”
இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.







