அமெரிக்க நிறுவனத்துடன் இணைந்து தமிழக அரசுக்கே தெரியாமல் டெல்டா பகுதியில்
ஷேல்கேஸ் கண்டறியும் பணியில் ஓஎன்ஜிசி ஈடுபட்டுள்ளதாக மயிலாடுதுறையில்
மீத்தேன் திட்ட எதிர்ப்புக் கூட்டமைப்பின் தலைமை ஒருங்கிணைப்பாளர் பேராசிரியர்
த.ஜெயராமன் குற்றம்சாட்டியுள்ளார்.
மயிலாடுதுறையில் மீத்தேன் திட்ட எதிர்ப்புக் கூட்டமைப்பு மற்றும் அதன் தோழமை
அமைப்பு நிர்வாகிகளின் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. கூட்டத்தின் முடிவில்,
மீத்தேன் திட்ட எதிர்ப்புக் கூட்டமைப்பின் தலைமை ஒருங்கிணைப்பாளர் பேராசிரியர்
த.ஜெயராமன் செய்தியாளர்களிடம் கூறியதாவது:-
புதிய கிணறுகள் அமைக்க அனுமதி தரவில்லை என்றவுடன், ஓஎன்ஜிசி பழைய
கிணறுகளிலேயே, மராமத்துப் பணி என்ற பெயரில் புதிய வேலைகளையும், கிணறுகளை
ஆழப்படுத்துதல் ஆகிய பணிகளை செய்ததாலேயே மாவட்ட நிர்வாகம் அதனை தடுத்து
நிறுத்தியுள்ளது. சமூக அக்கரை இருந்திருந்தால் ஏஐடியுசி, சிஐடியு அமைப்புகள்
ஓஎன்ஜிசியை வேலை செய்ய அனுமதிக்க கேட்டிருக்க மாட்டார்கள்.
எங்கெல்லாம் ஓஎன்ஜிசி வேலை செய்ததோ அங்கெல்லாம் நிலத்தடி நீரில் கச்சா எண்ணெய் கலந்து, நிலத்தடி நீர் மாசுபட்டுள்ளது. கதிராமங்கலத்தில் நிலத்தடி நீரில் ஒரு
லிட்டர் தண்ணீருக்கு 1.7 மில்லி கிராம் கலந்துள்ளது. 0.5 மில்லி கிராம் மட்டுமே
சகித்துக் கொள்ள முடியும். கச்சா எண்ணெய் கலந்துள்ள தண்ணீரை ஆடு, மாடுகளுக்குக்
கூட கொடுக்க முடியாது.
ஓஎன்ஜிசியின் வளர்ப்புப் பிள்ளைகளாக செயல்படுகின்ற ஏஐடியுசி, சிஐடியு
உள்ளிட்ட அமைப்புகள் ஓஎன்ஜிசிக்கு எதிராக போராடுபவர்கள் மீது ஆதாரமற்ற அவதூறு
செய்கிறார்கள்.
காவிரிப்படுகையில் கோனகோபிலிப்ஸ் என்கிற அமெரிக்க நிறுவனத்துடன் இணைந்து
தமிழ்நாடு அரசுக்கே தெரியாமல் எவ்வளவு ஷேல்கேஸ், எண்ணெய் உள்ளது என ஓஎன்ஜிசி
ஆய்வு மேற்கொண்டு வருகிறது.
காவிரிப்படுகைப் பகுதியில் வசிக்கும் நாடாளுமன்ற உறுப்பினர் செல்வராஜ்,
கீழ்வேளூர் சட்டமன்ற உறுப்பினர் நாகைமாலி உள்ளிட்ட ஏஐடியுசி, சிஐடியு மற்றும்
விவசாய அமைப்பினர் ஓஎன்ஜிசியை அனுமதிக்கக் கோரி திருவாரூர் மாவட்ட ஆட்சியர்
அலுவலகத்தில் மனு அளிக்க உள்ளனர். இத்திட்டங்கள் முலம் நிலம், நீர்
மாசுபட்டுள்ளது அவர்களுக்கு தெரியாதா? என்றார் ஜெயராமன்.








