“இந்தியாவில் ஒரே நாடு, ஒரே தேர்தல் சாத்தியமற்றது”- ப.சிதம்பரம் பேச்சு!

மதுரையில் காங்கிரஸ் கமிட்டி சார்பில் பொதுக்கூட்டம் நடைபெற்றது, அதில் முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரம் இந்தியாவில் ஒரே நாடு, ஒரே தேர்தல் சாத்தியமற்றது என கூறினார்.

குடியரசு தின விழாவையொட்டி நேற்று (ஜன. 26) மாலை மதுரை கோ.புதூர் பேருந்து நிலையம் அருகில் மதுரை மாநகர் காங்கிரஸ் கமிட்டி சார்பில் பொதுக் கூட்டம் நடைபெற்றது. இதில் தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் செல்வப்பெருந்தகை மற்றும் முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரம், மாநில கிராமக் கமிட்டி ஒருங்கிணைப்பாளர் பீட்டர் அல்போன்ஸ் ஆகியோர் கலந்து கொண்டு சிறப்புரையாற்றினர்.

இந்நிலையில், ப.சிதம்பரம் பேசுகையில், ”மக்களவைத் தேர்தலில் பெரும்பான்மை பெற்று மத்தியில் பாஜக அரசு ஆட்சியில் உள்ளது. நமது நாட்டில் 144 கோடி மக்கள் உள்ளனர். அவர்களில் 20 கோடி பேர் ஏழைகளாக உள்ளனர். ஏழைகள் விடுக்கும் விவசாயக் கடன், கல்விக் கடன் உள்ளிட்ட பல்வேறு கடன்களை தள்ளுபடி செய்ய வேண்டும். ஆனால் பெரு முதலாளிகள் வங்கியில் வாங்கிய கடன்களை மத்திய அரசு தள்ளுபடி செய்துள்ளது. குறிப்பாக, 2022- 23 ஆம் ஆண்டில் மட்டும் ரூ.10.88 லட்சம் கோடி கடன் தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.

இதேபோன்று, 2023- 24 ஆம் ஆண்டில் ரூ.14.11 லட்சம் கோடி தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது. பன்முகத் தன்மை கொண்ட இந்தியாவில் ஒரே நாடு, ஒரே தேர்தல் முறை சாத்தியமற்றது. மாநிலத்துக்கான அந்தஸ்து நீக்கம், துணைவேந்தர்களை நியமனம் செய்வது, சிறுபான்மையினருக்கு வெளிநாடுகளிலிருந்து வரும் நிதியை நிறுத்துவது, உள்ளிட்ட பல்வேறு திட்டங்கள் மூலம் மாநிலக் கட்சிகளை அழிக்க பாஜக முயற்சி செய்து வருகிறது. அதுமட்டுமின்றி அண்ணல் அம்பேத்கர் வகுத்த அரசியலமைப்புக்கும் பேராபத்து வந்துள்ளது. அவற்றை பாதுகாக்க வேண்டும் என்றால் பாஜக ஆட்சியிலிருந்து அகற்றப்பட வேண்டும்” கூறினார்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.