ஒரே ஒரு இளைஞர் கூட போதைப் பொருளுக்கு அடிமையாகக் கூடாது என்று தமிழ்நாடு முதலமைச்சர் ஸ்டாலின் தெரிவித்தார்.
75வது சுதந்திர தினத்தையொட்டி சென்னை ஜார்ஜ் கோட்டையில் தேசியக் கொடியை முதலமைச்சர் ஸ்டாலின் ஏற்றி வைத்தார். பின்னர் அவர் நிகழ்த்திய உரை:
நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்
ஆளும் கட்சி வென்ற தொகுதி, எதிர்க்கட்சி வென்ற தொகுதி என்ற பாகுபாடு எங்களுக்கு இல்லை. முதலமைச்சர் என்ற வகையில் அனைத்து தொகுதியும் எனது தொகுதிதான்.
ஒரே ஒரு இளைஞர் கூட போதைப் பொருளுக்கு அடிமையாகக் கூடாது. அனைத்து காரியங்களையும் கண்ணும் கருத்துமாக கவனித்துச் செயல்படுத்தி வருகிறோம்..
இதற்கு காரணம் நான் மக்களோடு மக்களாக வளர்ந்தவன், மக்களால் வளர்க்கப்பட்டவன். பொதுப் பணிகளுக்காக என்னை ஒப்படைத்துக்கொண்டவன் நான். சிறு பிரச்னையாக இருந்தாலும் சம்பந்தப்பட்ட அமைச்சருக்கோ, அதிகாரிகளுக்கோ முதலில் தொடர்பு கொண்டு கேட்கும் அளவுக்கு செயல்பட்டு வருகிறேன்.
இந்தப் பொறுப்பை எனக்கு வழங்கிய தாய்த்தமிழ் நாட்டு மக்களுக்கு என்றும் நான் உண்மையாக இருப்பேன் என வானத்தை நோக்கி பட்டொளி வீசிப்பறக்கும் தேசிய கொடியின் நிழலில் நின்று உறுதி எடுத்துக்கொள்கிறேன்
வெளிப்புற சக்திகளின் தாக்குதலை வெல்ல வேண்டுமானால் உள்புற ஒற்றுமை என்பது மிகமிக அவசியம். அனைத்து துறைகளிலும் தன்னிறைவு பெற்ற மாநிலங்களின் மூலமாக இந்தியாவை வளப்படுத்துவோம்.
ரூ 2,500 கோடி மதிப்பிலான கோயில் சொத்துகளை ஓர் ஆண்டில் மீட்டுள்ளோம். தமிழ்நாட்டில் வாழும் ஒவ்வொரு தனிமனிதனின் கோரிக்கையையும் செயல்படுத்தித் தரும் மனிதனாக நான் இருக்க வேண்டும் ஆசைப்படுகிறேன். அதற்கான முயற்சியில் என்னை நான் நித்தமும் ஈடுபடுத்தி வருகிறேன்.
கட்டணமில்லாப் பேருந்து வசதி மூலமாக பெண்களின் சமூகப் பங்களிப்பும், பொருளாதார விடுதலையும் அதிகமாகி இருக்கிறது. ஒராண்டு காலத்தில் 153 ஒப்பந்தங்கள் கையெழுத்தாகி இருக்கிறது. தமிழகத்தின் தொழில் வளர்ச்சி பெருகி இருக்கிறது. பல்லாயிரக்கணக்கான இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு கிடைத்துள்ளது.
பாசனப்பரப்பு அதிகமாகியுள்ளது. இதனால் விளைச்சல் அதிகமாகி உள்ளது. பல்வேறு மாவட்டங்களில் பெருகி வரும் மழையும் நல்லாட்சிக்கு நற்றுணையாக இருக்கிறது.
இந்திய விடுதலைப் போராட்டத்தில் தமிழ்நாட்டின் 260 ஆண்டுகால தொடர் பங்களிப்பு குறித்து எதிர்கால இளம் சமுதாயம் அறிந்துகொள்ளும் வகையில் விடுதலை நாள் அருங்காட்சியகம் சென்னையில் அமைக்கப்படும்.
எளிமை, இனிமை, நேர்மை, ஒழுக்கம், மனித நேயம், மதச்சார்பின்மை, சமத்துவம், சகோதரத்துவம் ஆகியவற்றின் அடையாளமாக இருக்கிறார் அண்ணல் காந்தியடிகள். இன்றைக்கு நாட்டுக்கு அவசிய, அவசரமான கொள்கைகள் இவைதான்.
இத்தகைய அனைத்து மனித நேயக்கொள்கைகளும் கொண்ட திராவிட மாடல் ஆட்சியைத்தான் நாம் நடத்தி வருகிறோம் என்றார் ஸ்டாலின்.