“இப்ராகிம் ரைசியின் ஹெலிகாப்டர் தாக்குதலுக்குள்ளான ஆதாரம் இல்லை” –  ஈரான் அரசு அறிவிப்பு

ஈரான் அதிபரின் ஹெலிகாப்டர் மீது தாக்குதல் நடத்தப்பட்டதற்கான ஆதாரங்கள் எதுவும் இல்லை என ஈரான் அரசு தெரிவித்துள்ளது. அசர்பைஜான் – ஈரான் இடையே பாயும் அரஸ் ஆற்றின் குறுக்கே,  இரு நாடுகளும் இணைந்து கட்டிய…

ஈரான் அதிபரின் ஹெலிகாப்டர் மீது தாக்குதல் நடத்தப்பட்டதற்கான ஆதாரங்கள் எதுவும் இல்லை என ஈரான் அரசு தெரிவித்துள்ளது.

அசர்பைஜான் – ஈரான் இடையே பாயும் அரஸ் ஆற்றின் குறுக்கே,  இரு நாடுகளும் இணைந்து கட்டிய 3-ஆவது அணையின் திறப்பு விழா கடந்த 19 ஆம் தேதி நடைபெற்றது.  அந்த அணை திறப்பு விழாவிற்காக ஈரான் அதிபர் இப்ராகிம் ரைசி அசர்பைஜான் சென்றிருந்தார்.  அந்நாட்டு பயணத்தை முடித்துவிட்டு இப்ராகிம் ரைசி ஹெலிகாப்டர் மூலம் ஈரான் திரும்பிக்கொண்டிருந்தார்.

அவருடன் ஈரான் வெளியுறவு அமைச்சா் ஹொசைன் அமிரப்டோலாஹியன்,  மாகாண ஆளுநா் மற்றும் அதிகாரிகளும் உடன் பயணித்ததாக கூறப்படுகிறது.  அப்போது,  அசர்பைஜானை ஒட்டியுள்ள ஈரானின் ஜல்பா நகரில் அவர் பயணித்த ஹெலிகாப்டர் விபத்துக்குள்ளானதாக தகவல் வெளியாகியது.

தொடர்ந்து, இப்ராகிம் ரைசி பயணித்த ஹெலிகாப்டரின் உதிரி பாகங்கள் கண்டெடுக்கப்பட்டன.  இந்த விபத்தில் ஈரான் அதிபர் இப்ராகிம் ரைசி மற்றும் அவருடன் பயணம் செய்த வெளியுறவு அமைச்சர் உட்பட மற்ற அதிகாரிகளும் உயிரிழந்தனர். இந்த நிலையில், ஈரான் அதிபரின் ஹெலிகாப்டர் மீது தாக்குதல் நடத்தப்பட்டதற்கான ஆதாரங்கள் எதுவும் இல்லை என ஈரான் அரசு தெரிவித்துள்ளது.

இது தொடர்பான விசாரணை அறிக்கையில், “ஹெலிகாப்டா் விழுவதற்கு முன்னா் கட்டுப்பாட்டு அறைக்கும் விமானிகளுக்கும் இடையே சந்தேகத்துக்கு இடமான எந்தத் தகவலும் பரிமாறிக்கொள்ளபடவில்லை.  ஹெலிகாப்டா் விழுந்ததற்குப் பிறகே அதில் தீப்பிடித்தது ஆய்வில் தெரியவந்தது” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.