பாதுகாப்பான ஷாப்பிங் என்ற பெயரில் நியூஸ் 7 தமிழ் கள ஆய்வு; முதற்கட்ட முடிவுகள் வெளியீடு

நியூஸ் 7 தமிழ் மேற்கொண்ட “பாதுகாப்பான ஷாப்பிங்” என்ற கள ஆய்வின் முதற்கட்ட முடிவுகள் வெளியாகியுள்ளது. விஜயதசமி, ஆயுத பூஜை, தீபாவளி என தொடர்ச்சியாக பண்டிகைகள் உதிப்பதால் ஷாப்பிங் செல்ல மக்கள் தி.நகர் உள்ளிட்ட…

நியூஸ் 7 தமிழ் மேற்கொண்ட “பாதுகாப்பான ஷாப்பிங்” என்ற கள ஆய்வின் முதற்கட்ட முடிவுகள் வெளியாகியுள்ளது.

விஜயதசமி, ஆயுத பூஜை, தீபாவளி என தொடர்ச்சியாக பண்டிகைகள் உதிப்பதால் ஷாப்பிங் செல்ல மக்கள் தி.நகர் உள்ளிட்ட முக்கியப் பகுதிகளில் படையெடுப்பர். இந்நிலையில், இன்று ஒருநாள் முழுவதும் ’பாதுகாப்பான ஷாப்பிங்’ என்ற பெயரில் சென்னையின் பல்வேறு முக்கியப் பகுதிகளில், நியூஸ்7 தமிழ் செய்தியாளர்கள் கள ஆய்வு மேற்கொண்டனர். இந்த ஆய்வின்போது பொதுமக்கள் பலவாறான கோரிக்கைகளை முன்வைத்தனர்.

இந்நிலையில், நியூஸ் 7 தமிழ் மேற்கொண்ட இந்த கள ஆய்வின் முதற்கட்ட முடிவுகள் வெளியாகியுள்ளது. அதில், சிறிய கடைகள் தொடங்கி பெரிய வணிக வளாகங்கள் வரை விதிமீறல்களில் ஈடுபடுவதாகவும், பெரும்பான்மையான வணிக வளாகங்களில் போதிய பாதுகாப்பு வசதிகள் இல்லை எனவும் தெரிய வந்துள்ளது.

மேலும், பல வணிக வளாகங்களில் பார்க்கிங் வசதி இல்லை; இருக்கும் பட்சத்தில் அவை விற்பனைப் பகுதியாக பயன்படுத்தப்படுகின்றன எனவும்,  அவசர காலத்தில் வெளியேற தனி வழி இல்லை; அமைக்கப்பட்டிருந்தாலும், கழிவுகள் மற்றும் பொருட்களை வைத்துள்ளதால் அவை பயன்படுத்த முடியாத நிலையில் உள்ளது எனவும் முடிவுகள் தெரிவிக்கின்றன.

தீத்தடுப்பு உபகரணங்கள் பெயரளவிலேயே அமைந்துள்ளதாகவும், சில இடங்களில் பழுதான உபகரணங்கள் வைக்கப்பட்டுள்ளதாகவும், பல இடங்களில் அடிப்படை வசதியான கழிவறை, குடிநீர் வசதி இல்லாத நிலை காணப்படுவதாகவும் ஆய்வு முடிவுகளில் தெரியவந்துள்ளது.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.