புதிய தலைமைச் செயலாளராக பொறுப்பேற்க உள்ள சிவ்தாஸ் மீனா முன்பு உள்ள சவால்கள் என்னென்ன என்பது குறித்து விரிவாக பார்க்கலாம்.
தமிழ்நாட்டின் 49வது தலைமைச் செயலாளராக ஜூலை 1 முதல் பணியை தொடங்குபவர் சிவ்தாஸ் மீனா. பொதுவாக எந்த பொறுப்பிற்கு புதியவர் ஒருவர் வந்தாலும், அந்த பொறுப்பை முன்பு வகித்தவருடன் அவரை ஒப்பிடுவது இயல்பானது. தமிழ்நாடு அரசின் தலைமைச் செயலாளர் பொறுப்பும் அதற்கு விதிவிலக்கல்ல.
அறைக்குள்ளிருந்து ஆணைகளை இடாமல், களப்பணி ஆற்றுபவராக இறையன்பு இருந்ததால் அந்த எதிர்பார்ப்பு சிவ்தாஸ் மீனா மீதும் எழும். மாநில உரிமையில் தமிழ்நாடு அரசு கவனம் செலுத்தி வருவதனால், அதுதொடர்புடைய பணிகள், சட்டச் சிக்கல்களை சிவ்தாஸ் மீனா எதிர்கொள்ள வேண்டும்.
மத்திய – மாநில அரசுகளுக்கு இடையேயான உறவுச் சிக்கல்களை அவர் எதிர்கொள்ள வேண்டும். மாறி வரும் பருவநிலை மாற்றங்களுக்கு தமிழ்நாட்டை தயார் நிலையில் வைத்திருக்க வேண்டும். விவசாயிகள், தொழிற்துறையினர் என இருதரப்பினரின் தேவைகளையும் பிரச்னையின்றி நிறைவேற்றுவது முக்கியம்.
எங்கும் தமிழ், எதிலும் தமிழ் என்ற நிலையில் அரசாணைகள், கோப்புகள், மற்றும் திட்டங்களில் தமிழுக்கு முக்கியத்துவம் குறித்த எதிர்பார்ப்புகள் எழும். உலக முதலீட்டாளர் மாநாடு, திட்டமிட்டு வரும் உலகத் தமிழ் மாநாடுகள், சர்வதேச விளையாட்டுப் போட்டிகள் என அடுக்கடுக்கான நிகழ்வுகளை சிறப்பாக நடத்த வேண்டும் என்ற எதிர்பார்ப்பும் சிவ்தாஸ் மீனா மீது எழும்.
இதையும் படியுங்கள் : அரசியல் பேசி மக்களை கவர் பண்ண ”மாமன்னன்” – முழு விமர்சனம் இதோ!!
இதற்கு முன்னர் இல்லாத அளவில் அரசின் திட்டங்களுக்காக பல்வேறு குழுக்கள் அமைக்கப்பட்ட நிலையில், அதுதொடர்பான ஆய்வுக் கூட்டங்களை தொடர்ந்து நடத்துதல், பல்வேறு துறைகள் சார்ந்த கொள்கைகளை வகுப்பது, சரியான ஆலோசனைகளை முதலமைச்சர், அமைச்சர்களுக்கு வழங்குதல், மாவட்ட ஆட்சியர்களுடன் தொடர்ந்து தொடர்பிலிருந்து மக்களுக்கான திட்டங்களை கடைக்கோடி வரை கொண்டு செல்லுதல், அமைச்சர்கள் – அரசு அதிகாரிகளுக்கிடையேயான பாலமாக இருந்து சீரிய திட்டங்களை செயல்படுத்துதல் என புதிய தலைமைச் செயலாளர் சிவ்தாஸ் மீனா எதிரே பல சவால்கள் நிறைந்துள்ளன….







