நம் மரம் நம் கடமை – கோல் போட்டா மரம் நடுவோம்; அசத்தும் தமிழ்நாடு அரசின் பசுமை விழிப்புணர்வு திட்டம்…

ஆசிய சாம்பியன்ஸ் கோப்பை ஹாக்கி தொடர் சென்னை எழும்பூரில் உள்ள மேயர் ராதாகிருஷ்ணன் ஹாக்கி விளையாட்டு அரங்கில் ஆகஸ்ட் 03 ஆம் தேதி முதல், ஆகஸ்ட் 12 ஆம் தேதி வரை நடைபெற்று வருகிறது.…

ஆசிய சாம்பியன்ஸ் கோப்பை ஹாக்கி தொடர் சென்னை எழும்பூரில் உள்ள மேயர் ராதாகிருஷ்ணன் ஹாக்கி விளையாட்டு அரங்கில் ஆகஸ்ட் 03 ஆம் தேதி முதல், ஆகஸ்ட் 12 ஆம் தேதி வரை நடைபெற்று வருகிறது. சென்னையில் 16 ஆண்டுகளுக்கு பின்னர் ஆசிய சாம்பியன்ஸ் கோப்பை ஹாக்கி தொடர் நடைபெறுவதால், தமிழ்நாடு அரசு பல்வேறு சிறப்பு ஏற்பாடுகளை செய்து ஹாக்கி யூனிட் ஆப் இந்தியாவுடன் இணைந்து போட்டிகளை நடத்தி வருகிறது.

போட்டியின் தொடக்க நாளான இன்று, நடப்பு சாம்பியனான கொரியா, ஜப்பானை எதிர்கொண்டது. இதில் அதிரடியாக விளையாடிய கொரியா, ஜப்பானை 2-1 என்ற கோல் கணக்கில் வீழ்த்தி அசத்தியது. அதே போல இரண்டாவது போட்டியில் பாகிஸ்தான், மலேசிய அணிகள் மோதின. துவக்கம் முதலே ஆதிக்கம் செலுத்திய மலேசியா, பாகிஸ்தானை 3-1 என்ற கோல் கணக்கில் வீழ்த்தி அதிர்ச்சி அளித்தது.

 

இதன் இடையே பசுமை சூழல் அறக்கட்டளை, தமிழ்நாடு சுற்று சூழல் மற்றும் கால நிலை மாற்றம் மற்றும் பசுமை தமிழ்நாடு இயக்கம் ஆகியோர் இணைந்து, சுற்றுச்சூழல் மேம்பாடு குறித்த விழிப்புணர்வை மையமாக கொண்டு தமிழ்நாடு முழுவதுமாக 2023 முதல், 2024 வரை 1 கோடி மரக்கன்றுகளை நட திட்டமிட்டுள்ளது. அதன் ஒரு சிறந்த முன்னெடுப்பாக, ஆசிய சாம்பியன்ஸ் கோப்பை ஹாக்கி தொடரில் அடிக்கப்படும் ஒவ்வொரு கோலையும் பயனுள்ளதாக மாற்ற திட்டமிட்டுள்ளனர்.

அதாவது இந்த தொடரின் ஒவ்வொரு போட்டியிலும் அடிக்கப்படும், ஒவ்வொரு கோலுக்கும் தலா 11 மரங்கள் நட திட்டமிடப்பட்டுள்ளது. அணியில் உள்ள 11 வீரர்களை அடிப்படையாக கொண்டு ஒவ்வொரு கோலுக்கும் தலா 11 மரங்களை நட திட்டமிட்டுள்ள நிலையில், போட்டிகள் இல்லாத ஓய்வு தினங்களில் சென்னை நேரு விளையாட்டு அரங்க வளாகத்தில் மொத்தமாக கணக்கிடப்பட்ட மரங்கள் அனைத்தும், முக்கிய பிரமுகர்களை கொண்டு நடுவதற்காக திட்டம் வகுக்கப்பட்டுள்ளது.

இந்த முன்னெடுப்பு விழிப்புணர்வூட்ட வேண்டி, இந்த இயக்கமானது #நம்மரம்நம்கடமை எனும் ஹாஸ்டாக் மூலம் பிரதிநிதித்துவப் படுத்தப்பட்டு, சமூக வலைத்தளங்களில் பிரபலப்படுத்தப்பட்டு வருகிறது. பசுமை இந்தியாவை உருவாக்குவது குறித்த பல திட்டங்களை இந்திய அரசும், மாநில அரசுகளும் செயல்படுத்தி வந்தாலும், இதுபோல விளையாட்டு போட்டிகளை மையமாக வைத்து மரக்கன்றுகள் நடப்படுவது தற்போது மக்களிடையே பெரும் வரவேற்பை பெற்று வருகிறது.

அண்மையில் நடந்து முடிந்த இந்தியன் பிரீமியர் லீக் கிரிக்கெட் தொடரில், பிளே ஆப் சுற்று போட்டிகளின் போது ஒவ்வொரு டாட் பாலுக்கும் 100 மரக்கன்றுகள் நடப்படும் என அறிவிக்கப்பட்டு அதனை டாடா பசுமை அறக்கட்டளையுடன் இணைந்து பிசிசிஐ செயல்படுத்தும் குறிப்பிடத்தக்கது.

-நாகராஜன்

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.