#Nagapattinam – #Srilanka | கப்பல் போக்குவரத்து சேவை தொடக்கம்!

நாகை துறைமுகத்தில் இருந்து இலங்கை காங்கேசன்துறைக்கு கப்பல் போக்குவரத்து சேவை தொடங்கியது.  நாகப்பட்டினம் துறைமுகத்தில் இருந்து இலங்கையின் காங்கேசன்துறை துறைமுகத்துக்கு இன்று முதல் கப்பல் போக்குவரத்து சேவை தொடங்கப்பட உள்ளதாக கடந்த சில நாட்களாக தகவல்…

நாகை துறைமுகத்தில் இருந்து இலங்கை காங்கேசன்துறைக்கு கப்பல் போக்குவரத்து சேவை தொடங்கியது. 

நாகப்பட்டினம் துறைமுகத்தில் இருந்து இலங்கையின் காங்கேசன்துறை துறைமுகத்துக்கு இன்று முதல் கப்பல் போக்குவரத்து சேவை தொடங்கப்பட உள்ளதாக கடந்த சில நாட்களாக தகவல் வெளியாகி வந்தது. இதற்காக அந்தமானில் இருந்து சிவகங்கை என்ற கப்பல் கடந்த வாரம் சென்னைக்கு கொண்டு வரப்பட்டது.

பின்னர் சென்னையில் இருந்து நாகப்பட்டினம் துறைமுகத்துக்கு கொண்டு செல்லப்பட்ட சிவகங்கை கப்பலுக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. அதன்பின்னர் நாகப்பட்டினம் துறைமுகத்தில் இருந்து இலங்கை காங்கேசன்துறை துறைமுகத்துக்கு சோதனை ஓட்டம் நடத்தப்பட்டது. காங்கேசன்துறை சென்ற கப்பலுக்கு தண்ணீரை பீய்ச்சியடித்து வரவேற்பு அளிக்கப்பட்டது.

இந்நிலையில் இன்று முதல் நாகை துறைமுகத்தில் இருந்து இலங்கை காங்கேசன்துறை துறைமுகத்துக்கு பயணிகள் கப்பல் சேவை அதிகாரப்பூர்வமாக தொடங்கப்படவுள்ளது. நாகப்பட்டினத்தில் இருந்து இன்று காலை 10 மணிக்கு புறப்பட்ட பயணிகள் கப்பல் பிற்பகல் 2 மணிக்கு காங்கேசன்துறை துறைமுகத்தை சென்றடையும்.

பின்னர் காங்கேசன்துறை துறைமுகத்தில் இருந்து நாளை காலை 10 மணிக்கு புறப்பட்டு பிற்பகல் 2 மணிக்கு பயணிகள் கப்பல் நாகப்பட்டினம் துறைமுகத்தை வந்தடையும். அதன்பிறகு ஆகஸ்ட் 18ஆம் தேதி முதல் நாள்தோறும் நாகப்பட்டினத்தில் இருந்து காலை 8 மணிக்கு புறப்படும் சிவகங்கை கப்பல் பகல் 12 மணிக்கு இலங்கையை சென்றடையும்.

பின்னர் இலங்கையில் இருந்து பிற்பகல் 2 மணிக்கு புறப்பட்டு மாலை 6 மணிக்கு நாகப்பட்டினத்தை வந்தடையும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. நாகப்பட்டினத்தில் இருந்து காங்கேசன்துறை துறைமுகம் செல்வதற்கு ஒருவழிப் பயண எக்கானமி கட்டணம் 4,997 ரூபாய் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. பிரீமியம் எக்கானமி கட்டணம் 7,500 ரூபாய் நிர்ணயிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

நாகை – இலங்கை இடையே கப்பல் பயணம் மேற்கோள்வதற்காக www.sailindsri.com என்ற இணையதளத்தில் டிக்கெட் முன்பதிவு முன்பதிவு செய்யப்படுகிறது. நாகை – இலங்கை இடையே கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் பயணிகள் கப்பல் சேவை தொடங்கப்பட்ட நிலையில் தொடங்கிய சில நாட்களிலேயே அந்த சேவை நிறுத்தப்பட்டது குறிப்பிடத்தக்கது.
சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.