நடுச்சாலைப்புதூர் ஆதிநாராயணசுவாமி கோயில் ஆனித்திருவிழா – கொடியேற்றத்துடன் கோலாகலமாக தொடக்கம்!

களக்காடு அருகே நடுச்சாலைப்புதூர் ஆதிநாராயணசுவாமி கோயிலில் ஆனி திருவிழா கொடி ஏற்றத்துடன் துவங்கியது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர். நெல்லை மாவட்டம் களக்காடு அருகே உள்ள நடுச்சாலைப்புதூரில் பழமை வாய்ந்த ஸ்ரீமந் ஆதிநாராயண…

களக்காடு அருகே நடுச்சாலைப்புதூர் ஆதிநாராயணசுவாமி கோயிலில் ஆனி திருவிழா கொடி ஏற்றத்துடன் துவங்கியது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர்.

நெல்லை மாவட்டம் களக்காடு அருகே உள்ள நடுச்சாலைப்புதூரில் பழமை வாய்ந்த
ஸ்ரீமந் ஆதிநாராயண சுவாமி கோயில் உள்ளது. பிரசித்திப் பெற்ற இந்த கோயிலில்
ஆண்டு தோறும் ஆனி மாதம் தேரோட்டத் திருவிழா 11 நாட்கள் வெகு விமரிசையாக
நடத்தப்படுவது வழக்கம். அதன்படி நடப்பாண்டு திருவிழா 1ம் திருநாளான இன்று 5ம்
தேதி (வெள்ளிக்கிழமை) தொடங்கியது. இதையொட்டி அதிகாலையில் கோயில் நடை
திறக்கப்பட்டு, அய்யா நாராயணசுவாமிக்கு சிறப்பு பள்ளியறை அலங்காரமும், விசேஷ
பணி விடைகளும் நடத்தப்பட்டது. அதனைதொடர்ந்து கொடி ஏற்ற நிகழ்ச்சிகள் தொடங்கின.

கோயில் மூலஸ்தானத்தில் இருந்து பக்தர்கள் கொடி பட்டத்தை எடுத்து வந்து, கோயிலை
சுற்றி வந்தனர். அதன் பின் மேளதாளங்கள் முழங்க, சங்கு நாதம் இசைக்க கோயில்
கொடி மரத்தில் திருக்கொடி ஏற்றப்பட்டது. பின்னர் அய்யா நாராயணசுவாமி துளசி
வாகனத்தில் பவனி வந்தார். விழாவில் களக்காடு சுற்று வட்டார பகுதிகளை சேர்ந்த
திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர். அவர்கள் அய்யா சிவ,சிவ, ஹர, ஹர என்ற
பக்தி முழக்கத்துடன் சாமி தரிசனம் செய்தனர்.

விழா நாட்களில் அய்யா நாராயண சுவாமி பல்வேறு வாகனங்களில் எழுந்தருளி திருவீதி உலா வருகிறார். திருவிழாவின் 8ம் நாளான வருகிற 12ம் தேதி (வெள்ளிக்கிழமை) இரவு 9 மணிக்கு அய்யா நாராயணசுவாமி குதிரை வாகனத்தில் எழுந்தருளி பால் கிணற்றின் அருகே பரிவேட்டையாடும் நிகழ்ச்சி நடக்கிறது. 11ம் நாளான வருகிற 15ம் தேதி
(திங்கட்கிழமை) தேரோட்டம் நடைபெறுகிறது. அன்று பகல் 12 மணிக்கு திருத்தேர் வடம்
பிடித்து இழுக்கப்படுகிறது.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.