சிவில் சர்வீஸ் தேர்வுக்கு கைகொடுத்த தமிழ்நாடு அரசின் ‘நான் முதல்வன்’ திட்டம்!

சிவில் சர்வீஸ் தேர்வில் தமிழ்நாட்டில் தேர்வான 45 பேரில் 37 பேர் நான் முதல்வன் திட்டத்தில் பயனடைந்தவர்கள் என தகவல் வெளியாகியுள்ளது.  மத்திய அரசு பணிகளான ஐஏஎஸ்,  ஐஎஃப்எஸ்,  ஐபிஎஸ் உள்ளிட்ட பணிகள் மற்றும்…

சிவில் சர்வீஸ் தேர்வில் தமிழ்நாட்டில் தேர்வான 45 பேரில் 37 பேர் நான் முதல்வன் திட்டத்தில் பயனடைந்தவர்கள் என தகவல் வெளியாகியுள்ளது. 

மத்திய அரசு பணிகளான ஐஏஎஸ்,  ஐஎஃப்எஸ்,  ஐபிஎஸ் உள்ளிட்ட பணிகள் மற்றும் குரூப் ’ஏ’ மற்றும் குரூப் ’பி’ பணிகளுக்கான யுபிஎஸ்சி தேர்வுகள் கடந்த ஆண்டு நடைபெற்றன.  இதில் மூன்று கட்டங்களிலும் தேர்ச்சி பெற்று,  தேர்வு செய்யப்படுவோருக்கு அவர்கள் பெற்றுள்ள மதிப்பெண்களின் அடிப்படையில், பணிகள் ஒதுக்கப்படும்.

மூன்று நிலைகளில் நடத்தப்படும் 2023 யுபிஎஸ்சி முதல்நிலை தேர்வுகள் மே 28ஆம் தேதி அன்று நடத்தப்பட்டு,  அதில் தேர்வு செய்யப்பட்டவர்களுக்கு மெயின் தேர்வு செப்டம்பர் 15, 2023 அன்று முதல் ஐந்து நாட்களுக்கு நடத்தப்பட்டது.  மெயின் தேர்வில் தேர்ச்சி பெற்றவர்களுக்கு 2024 ஜனவரி 4 முதல் ஏப்ரல் 9ம் தேதி வரை நேர்காணல் நடத்தப்பட்டது.

இதனையடுத்து இறுதி தேர்வு முடிவை யுபிஎஸ்சி தனது இணையதள பக்கத்தில் நேற்று வெளியிட்டது.  இத்தேர்வில் 1016 பேர் தேர்ச்சியடைந்துள்ளனர்.  அதில் 42 பேர் தமிழ்நாட்டை சேர்ந்தவர்கள்.  அகில இந்திய அளவில் 41வது இடத்தை பிடித்த புவனேஸ்வர் ராம் தமிழ்நாட்டில் முதல் இடத்தை பிடித்தார்.  வினோதினி 2வது இடத்தையும்,
பிரஷாந்த் 3 வது இடத்தையும்,  வெங்கடேஷ்வரன் 4 வது இடத்தையும் பிடித்திருக்கிறார்.

இதில் 2வது இடம் பிடித்த வினோதினி, செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில், “நான் முதல்வன் திட்டம் எனக்கு பொருளாதார அழுத்தம் இல்லாமல் பார்த்துக் கொண்டதால் என்னுடைய இலக்கை அடைய கவனம் செலுத்துவது எளிதாக இருந்தது” என்று தெரிவித்தார்.

3 வது இடத்தை பிடித்த பிரஷாந்த், “தன் வெற்றிக்கு துணை நின்றது,  ‘நான் முதல்வன்’ திட்டம்,  என் குடும்பம் மற்றும் என் ஆசிரியர்கள்” என்று கூறினார்.

கடந்த 2023 ஆம் ஆண்டு யுபிஎஸ்சி பிரிலிம்ஸ் தேர்வில், தேர்ச்சியடைந்த 450 பேருக்கு, தமிழ்நாடு அரசு நான் முதல்வன் திட்டத்தின் மூலம் ரூ 25,000  வழங்கியது.  இது மெயின்ஸ் தேர்வு மற்றும் நேர்முக தேர்வு பயிற்சிக்கு ஊக்கத்தொகையாக வழங்கப்பட்டது.  இந்த நிலையில்,  2024 யுபிஎஸ்சி பிரிலிம்ஸ்ஸில் தமிழ்நாட்டில் தேர்வாகியுள்ள 1000 பேருக்கு, நான் முதல்வன் திட்டத்தின் மூலம் 10 மாதத்திற்கு,  மாதந்தோறும் 7500 ரூபாய் ஊக்கத்தொகையாக வழங்க உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.