“உங்களை சிரிக்க வைப்பது தான் என்னுடைய எண்ணம்… யார் மனதையும் புண்படுத்தும் நோக்கம் எனக்கு இல்லை” – நடிகர் சந்தானம்

“உங்களை சிரிக்க வைப்பது தான் என்னுடைய எண்ணம், யார் மனதையும் புண்படுத்தும் நோக்கம் எனக்கு இல்லை” என ‘வடக்குப்பட்டி ராமசாமி’ திரைப்பட இசை வெளியீட்டு விழாவில் நடிகர் சந்தானம் தெரிவித்துள்ளார்.   நடிகர் சந்தானம் ‘டிக்கிலோனா’…

“உங்களை சிரிக்க வைப்பது தான் என்னுடைய எண்ணம், யார் மனதையும் புண்படுத்தும் நோக்கம் எனக்கு இல்லை” என ‘வடக்குப்பட்டி ராமசாமி’ திரைப்பட இசை வெளியீட்டு விழாவில் நடிகர் சந்தானம் தெரிவித்துள்ளார்.  

நடிகர் சந்தானம் ‘டிக்கிலோனா’ படத்தின் இயக்குநர் கார்த்திக் யோகியுடன் மீண்டும் இணைந்துள்ளார்.  இந்தப் படத்தை பீபிள் ஃபிலிம் பேக்டரி சார்பில் விஷ்வ பிரசாத் தயாரித்துள்ளார்.  இப்படத்திற்கு ‘வடக்குப்பட்டி ராமசாமி’ எனப் பெயரிடப்பட்டுள்ளது. ஷான் ரோல்டன் இப்படத்திற்கு இசையமைத்துள்ளார். ‘விட்னஸ்’ பட இயக்குநர் தீபக் ஒளிப்பதிவு செய்துள்ளார். இப்படத்தில் சந்தானத்துக்கு ஜோடியாக மேகா ஆகாஷ் நடித்துள்ளார். மேலும் படத்தில் எம்.எஸ்.பாஸ்கர், ஆர்.சுந்தர்ராஜன் ஆகியோர் நடித்துள்ளனர்.

இத்திரைப்படம் பிப்ரவரி 2-ம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ளது.  இத்திரைப்படத்தின் டிரெய்லர் சமீபத்தில் வெளியானது. அதில் இடம்பெற்ற கடவுள் இல்லைன்னு சொல்வானே ராமசாமி அவனா என்ற வசனம் சர்ச்சையானது.  இந்த வசனம் மூலம் பெரியாரை விமர்சித்துள்ளனர் என எதிர்ப்புகள் கிளம்பின. இந்த நிலையில் இப்படத்தின் இசை வெளியீட்டு விழா இன்று (ஜன.27) சென்னையில்  நடைபெற்றது.  இவ்விழாவில் நடிகர் அஸ்வின், நடிகர் ஆர்யா, நடிகை மேகா ஆகாஷ், நடிகர் அல்லு சிரிஷ் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

இதையும் படியுங்கள்:  கேரள ஆளுநருக்கு எதிராக இந்திய மாணவர் சங்கத்தினர் கருப்பு கொடி ஏந்தி போராட்டம்!

இதில் பேசிய சந்தானம் கூறியதாவது:  “இந்த திரைப்படத்தை பற்றி நிறைய சர்ச்சைகள் வருகிறது.  அது போன்று இப்படத்தில் எதுவுமில்லை.  இது ஒரு ஜாலியான படம்.  நானும், கார்த்திக்கும் கவுண்டமணியின் ரசிகர்கள்.  அவருடைய வசனத்தை தான் படத்தின் பெயராக வைத்துள்ளோம்.  டிக்கிலோனா-வும் அவருடைய வசனம் தான்.

அடுத்ததாக நானும், ஆர்யாவும் சேர்ந்து இயக்குநர் கார்த்தியின் இயக்கத்தில் நடிக்கவுள்ளோம்.  அதிலும் கவுண்டமணியின் வசனத்தையே படத்தின் பெயராக வைக்கவுள்ளோம்.  நான் சினிமாவிற்கு வந்தது உங்களை சிரிக்க வைக்க மட்டுமே தவிர, யார் மனதையும் புண்படுத்தும் நோக்கம் எனக்கில்லை.  இது அந்த கடவுளுக்கு தெரியும்.”

இவ்வாறு அவர் கூறினார்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.