தமிழ் மக்கள்போல தமிழில் பேச வேண்டும் என்பது எனது விருப்பமாகும் என்று தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி பேசியுள்ளார்.
வேலூரில் ஆங்கிலேயர் ஆட்சிக்கு எதிராக 1806ஆம் ஆண்டு போராடி உயிர்நீத்த சிப்பாய்களுக்கு வீரவணக்கம் செலுத்தி மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்தும் நிகழ்ச்சி இன்று நடைபெற்றது.
இந்நிகழ்ச்சியில் பங்கேற்ற தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி பேசியதாவது: மதம், பொருளாதாரம், இடத்தின் காரணமாக ஆங்கிலேயர்கள் நம்மைப் பிரித்து ஆண்டனர். ஆங்கிலேயர்கள் ஆளும் முன்னர் பல மன்னர்கள் நம்மை ஆண்டார்கள். ஆனால், அந்த சமயம், மக்கள் காஷ்மீர் முதல் கன்னியாகுமரி வரை சென்று வந்தார்கள். ஆங்கிலேயர்கள் வருவதற்கு முன்னரே நாம் கல்வியில் சிறந்து விளங்கியிருந்தோம். வட இந்தியாவிலிருந்து மட்டும் மக்கள் இங்கு வரவில்லை. இங்கே இருந்தும் அறிவை வளர்க்க காசி போன்ற இடங்களுக்குச் சென்றிருக்கிறார்கள். நாம் அனைவரும் ஒரே குடும்பமாகத்தான் இருந்தோம்.
ஆங்கிலேயர்கள்தான் பிரித்தாளும் சூழ்ச்சியைக் கையாண்டார்கள். வரலாற்றை உற்றுநோக்கினால், விந்திய மலையை அடிப்படையாக வைத்துதான், நார்த்தில் இருப்பவர்களை வட இந்தியர்கள் என்றும், தென்பக்கம் இருப்பர்களை திராவிடர்கள் என்றும் அடையாளப்படுத்தியிருக்கிறார்கள். ஆங்கிலேயர்கள்தான் திராவிடன் என்ற வார்த்தையை முதன் முதலில் குறிப்பிட்டவர்கள். தமிழ் மக்கள் போல தமிழில் பேச வேண்டும் என்பது எனது விருப்பமாகும் என்றார்.
-ம.பவித்ரா








