எதிரணியில் இரண்டு டஜன் பிரதமர் வேட்பாளர்கள் உள்ளதாக பாஜக மூத்த தலைவரும் முன்னாள் மத்திய அமைச்சருமான முக்தர் அப்பாஸ் நக்வி நகைச்சுவையாக விமர்சித்துள்ளார்.
கடந்த சில தினங்களுக்கு முன்பு பீகாரில் பாஜக கூட்டணியை முறித்துக்கொண்ட ஐக்கிய ஜனதா தள தலைவரும் பீகார் முதலமைச்சருமான நிதிஷ்குமார், ராஷ்ட்ரிய ஜனதா தளம், காங்கிரஸ், இடசாரிகள் அடங்கிய மகாகத் பந்தன் கூட்டணியில் இணைந்தார். அந்தக் கட்சிகளின் ஆதரவுடன் புதிய அரசு அமைத்து கடந்த புதன் கிழமை பீகாரின் முதலமைச்சராக 8வது முறையாக பதவியேற்றார்.
குடியரசு துணை தலைவர் ஆக விரும்பிய நிதிஷ்குமார், அந்த விருப்பம் நிறைவேறாததாலேயே பாஜகவுடனான கூட்டணியை முறித்துக்கொண்டதாக பாஜக மூத்த தலைவர் சுசில் மோடி விமர்சித்தார். தற்போது பிரதமர் ஆகும் கனவில் நிதிஷ்குமார் உள்ளதாகவும் சுசில் மோடி கூறினார்.
இந்நிலையிவ் உத்தரபிரதேச மாநிலம் ராம்பூரில் நடைபெற்ற பொதுக் கூட்டம் ஒன்றில் பேசிய, பாஜக மூத்த தலைவரும் முன்னாள் மத்திய அமைச்சருமான முக்தர் அப்பாஸ் நக்வி, எதிர்க்கட்சிகளின் அணியில் நிதிஷ்குமார், மம்தாபானர்ஜி, அகிலேஷ் யாதவ் என பிரதமர் ஆகும் கனவுடன் இரண்டு டஜன் பேர் காத்திருப்பதாக நகைச்சுவையாக விமர்சித்தார். தீய சிந்தனை கொண்டவர்களால் பிரதமர் மோடியின் கடின உழைப்பையும், நேர்மையையும் வீழ்த்த முடியாது என்றும் முக்தர் அப்பாஸ் நக்வி கூறினார்.







