காவிரி ஆற்றில் அதிக அளவு நீர் திறக்கப்படுவதை முன்னிட்டு மீட்பு பணிகளில் ஈடுபடுவதற்கான முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக திருச்சிக்கு தேசிய பேரிடர் மீட்பு படையினர் வந்தடைந்துள்ளனர்.
கர்நாடகாவில் காவிரி நீர் பிடிப்பு பகுதிகளில் பெய்து வரும் கனமழை காரணமாக தமிழ்நாட்டிற்கு கர்நாடக அணைகளிலிருந்து அதிக அளவு நீர் திறக்கப்படுகிறது. இதனால் தமிழ்நாட்டில் காவிரி கரையோரம் உள்ள பகுதிகளில் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன. திருச்சி முக்கொம்பு மேலணையில் இன்று தண்ணீர் திறப்பு குறித்து ஆய்வு செய்த அமைச்சர் கே.என்.நேரு, பாதுகாப்பு நடவடிக்கைகள் குறித்தும், முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினார்.
நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்
திருச்சி முக்கொம்பு மேலணையில் காவிரியில் நீர்வரத்து மற்றும் காவிரி, கொள்ளிடங்களில் நீர் வெளியேற்றம் குறித்தும், மேற்கொள்ளப்பட்டுள்ள பாதுகாப்பு நடவடிக்கைகள் குறித்தும் நீர்வளத் துறையின் செயலாளர் சந்தீப் சக்சேனாவும் இன்று நேரில் ஆய்வு செய்தார்.
பின்னர் செய்தியாளரிடம் பேசிய சந்தீப் சக்சேனா, தற்பொழுது முக்கொம்பு மேலனையில் 70,000 கன அடி நீர் கொள்ளிடத்தில் வெளியேற்றப்படுவதாகக் கூறினார். 56,000 கன அடி நீர் காவிரியில் வெளியேற்றப்படுவதாகவும் அவர் தெரிவித்தார்.
மேட்டூரில் இருந்து 2.15 லட்சம் கன அடி நீர் வந்துகொண்டு இருப்பதாகக் கூறிய அவர், இந்த நீரானது முக்கொம்பு மேலணை வந்தடைய 8 முதல் 9 மணி நேரம் ஆகும், அதிகாலை
4 அல்லது 5 மணிக்கு வந்துவிடும் என்றார். அப்பொழுது காவிரியில் 70 ஆயிரம் கன அடியும், கொள்ளிடத்தில் 1.40 லட்சம் கன அடியும் தண்ணீர் திறக்க வாய்ப்புள்ளதாகவும் அவர் கூறினார். தொடர்ந்து 24 மணிநேரமும் கரையோர பகுதிகளில்
கண்காணிப்பு பணிகள் நடைபெற்று வருவதாகக் கூறிய நீர்வளத்துறை செயலாளர், முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை தீவிரமாக மாவட்ட ஆட்சியர் கண்காணித்து வருவதாகக் கூறினார். திருச்சியில் வெள்ள நீர் தேங்க வாய்ப்புள்ள சில இடங்களில் பொதுமக்களை வேறு இடங்களுக்கு மாற்றி உள்ளோம் என்றும் நீர்வளத்துறை செயலாளர் சந்தீப் சக்சேனா தெரிவித்தார்.
இதற்கிடையே திருச்சி காவிரி ஆற்றில் நீர்வரத்து அதிகரித்து வருவதை முன்னிட்டு, முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக 43 பேர் கொண்ட தேசிய பேரிடர் மீட்புப் படையினர் தயார் நிலையில் உள்ளனர். திருச்சி கலையரங்கம் வளாகத்தில் உள்ள கலைஞர் திருமண அரங்கில் தயார் நிலையில் அவர்கள் உள்ளனர். முன்னெச்சரிக்கை மற்றும் மீட்பு நடவடிக்கைகள் குறித்து திருச்சி மாவட்ட ஆட்சியர் பிரதீப் குமார் தேசிய பேரிடர் மீட்பு படையினருடன் ஆலோசனை நடத்தினார்.