சமூக வலைத்தளத்தில் வைரலாகும் கிரெட்டாவின் மார்ஃபிங் செய்யப்பட்ட புகைப்படம்!

சமூக வலைத்தளங்களில் வைரலாகி வரும் இளம் சூழலியல் ஆர்வலர் கிரெட்டா தென்பர்கின் மார்ஃபிங் செய்யப்பட்ட புகைப்படம். தேசிய தலைநகர் டெல்லியில் நடைபெற்று வந்த விவசாயிகளின் போராட்டத்தின் ஒரு பகுதியாக கடந்த ஜனவரி 26ம் தேதி…

சமூக வலைத்தளங்களில் வைரலாகி வரும் இளம் சூழலியல் ஆர்வலர் கிரெட்டா தென்பர்கின் மார்ஃபிங் செய்யப்பட்ட புகைப்படம்.

தேசிய தலைநகர் டெல்லியில் நடைபெற்று வந்த விவசாயிகளின் போராட்டத்தின் ஒரு பகுதியாக கடந்த ஜனவரி 26ம் தேதி விவசாயிகளின் டிராக்டர் பேரணி நடைபெற்றது. இதில் வன்முறை வெடித்தது. இந்த நிலையில் விவசாயிகளின் இந்த போராட்டம் குறித்து சர்வதேச பிரபலங்கள் ட்விட்டரில் கருத்து தெரிவித்தனர். ஸ்வீடன் நாட்டை சேர்ந்த இளம் சூழலியல் ஆர்வலர் கிரெட்டா தென்பர்க்கும் போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்திருந்தார்.

இதனால் சர்வதேச அளவில் மத்திய அரசு விளக்கம் அளிக்க வேண்டிய தேவை ஏற்பட்டது. மேலும், கிரெட்டா தென்பர்க் மீது டெல்லி காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்திருந்தனர்.

இதனைத் தொடர்ந்து கிரெட்டாவின் ட்விட் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. இந்நிலையில், கிரெட்டா ரயில் பெட்டி ஒன்றில் அமர்ந்து உணவு உண்பது போலவும், வெளியே ஏழைக் குழந்தைகள் உணவுக்கு ஏங்குவது போன்ற புகைப்படம் ஒன்று சமூக வலைத்தளத்தில் வைரலாக பரவியது.

உமேஷ் சிங் தோமர் எனும் ட்விட்டர் பயனாளர் ஒருவர், இந்த சர்ச்சை புகைப்படத்தை பகிர்ந்து, தனியார் தொலைக்காட்சி ஆசிரியருக்கு நன்றி தெரிவித்திருந்தார்.

மேலும், #AskGreataWhy எனும் ஹாஷ்டேக் பிரபலமானது.

இது குறித்த உண்மைத் தன்மையை ஆராய்ந்த சர்வதேச மின்னணு ஆங்கில செய்தி ஊடகம், 2019 செப்டம்பரில் உண்மை புகைப்படங்களை வெளியிட்டுள்ளது. அதில், ஏற்கெனவே இந்த சர்ச்சை புகைப்படத்தின் உண்மைத் தன்மையை வெளியிட்டுள்ளது என்பதையும் குறிப்பிட்டுள்ளது. அதில், கிரெட்டா அடர் மரங்கள் நிறைந்த பின்னணியில் உணவு உண்பது தெளிவுபடுத்தப்பட்டுள்ளது.

இந்த புகைப்படத்தினை கிரெட்டா ஜனவரி 2019ல் தனது டிவிட்டர் பக்கத்தில் டென்மார்க்கில் மத்திய உணவு என பகிர்ந்துள்ளார்.

இந்த உண்மை புகைப்படத்தினை எடிட் செய்ய பயன்படுத்தப்பட்ட ஏழை குழந்தைகளின் புகைப்படமானது, 2007ல் ஆகஸ்ட்டில், ஆப்ரிக்காவில் புஷ் போரின்போது புலம் பெயர்ந்த குழந்தைகளின் புகைப்படம் என்று மற்றொரு தனியார் செய்தி ஊடகம் வெளியிட்டுள்ளது.

ஆக, இளம் சூழலியல் ஆர்வலர் கிரெட்டா தென்பர்க்கின் இந்த வைரலான புகைப்படம் எடிட் செய்யப்பட்டது என நிரூபணமாகியுள்ளது.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.