குஜராத்தின் மோர்பி நகரில் தொங்கு பாலம் இடிந்து விழுந்து 135 பேர் உயிரிழந்த வழக்கில் கைது செய்யப்பட்ட ஓரேவா குழுமத்தின் நிர்வாக இயக்குநர் ஜெய்சுக் படேலை நீதிமன்றத்தில் இன்று ஆஜர்படுத்தப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார்.
குஜராத் மாநிலம் மோர்பி நகரில் மச்சு ஆற்றின் குறுக்கே உள்ள பழமையான தொங்கு பாலம் அறுந்து விழுந்து விபத்துக்குள்ளானது. இதில் 135 பேர் உயிரிழந்தனர். 100 ஆண்டுகள் பழமையான இந்த பாலத்தில், புனரமைப்பு பணிகள் மேற்கொள்ளப்பட்டு கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் 26-ம் தேதி மீண்டும் திறக்கப்பட்டு பொது பயன்பாட்டுக்கு வந்தது. குஜராத் மக்களுக்கான புது வருட தொடக்கத்துடன் இணைந்து பாலம் திறப்பு நிகழ்ச்சியும் நடந்தது.
இதையடுத்து விடுமுறை தினமான அக்டோபர் 30-ம் தேதி ஏராளமானோர் அந்த பாலத்தில் திரண்டு, புகைப்படம் எடுத்து மகிழ்ந்தனர் . அப்போது எதிர்பாராதவிதமாக, அந்த பாலம் பாரம் தாங்காமல் அறுந்து விழுந்தது. இதில், 135 பேர் தண்ணீரில் மூழ்கி உயிரிழந்தனர். 100-க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர். சத் பூஜைக்காக மக்கள் கூட்டம் கூட்டமாக பாலத்தில் குவிந்திருந்தபோது தான் இந்த அசம்பாவித சம்பவம் நடந்தது. இதுகுறித்து விசாரணை மேற்கொள்ள காவல்துறை உயர் அதிகாரி தலைமையில் ஒரு குழு அமைத்து குஜராத் அரசு உத்தரவிட்டது. இந்த வழக்கில் ஓரேவா குழுமத்தின் நிர்வாக இயக்குநர் ஜெயசுக் படேல் முதன்மை குற்றவாளியாக சேர்க்கப்பட்டார்.
ஜெயசுக் படேலுடன் சேர்ந்து, பாலத்தை புதுப்பிக்கும் பணிகளில் ஈடுபட்டிருந்த, கட்டுமான நிறுவனத்தை சேர்ந்த 2 மேலாளர்கள், இரண்டு டிக்கெட் புக்கிங் கிளார்க்குகள், மூன்று பாதுகாவலர்கள் மற்றும் ஓரேவா குழுமத்தின் பழுதுபார்க்கும் பணிகளில் ஈடுபட்டிருந்த இரண்டு துணை ஒப்பந்ததாரர்கள் என மொத்தம் 9 பேர் கைது செய்யப்பட்டனர். இந்த நிலையில் ஓரேவா குழுமத்தின் நிர்வாக இயக்குநர் ஜெய்சுக் படேல், கைது செய்யப்படுவதற்கு முன்பு பிப்ரவரி 1- ஆம் தேதி நீதிமன்றத்தில் சரணடைந்தார்.
இந்த நிலையில், மாநில அரசு அமைத்த சிறப்பு புலனாய்வுக் குழு (எஸ்ஐடி) போலீசார் முக்கிய குற்றவாளியாக சேர்க்கப்பட்ட ஓரேவா குழும நிர்வாக இயக்குநர் ஜெய்சுக் படேலை, 7 நாள் விசாரணைக்கு பிறகு இன்று மீண்டும் மோர்பி நகரில் உள்ள நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர். பின்னர் ஜெய்சுக் படேலை காவலில் எடுத்து விசாரிக்க போலீசார் அனுமதி கோராத நிலையில் , வழக்கை விசாரித்த மாஜிஸ்திரேட், அவரை சிறையில் அடைக்க உத்தரவிட்டார்.
மேலும் இந்த வழக்கில் கைது செய்யபப்ட்ட 9 பேரில் துணை ஒப்பந்ததாரர்கள் 2 பேரை தவிர்த்து மீதமுள்ள 7 பேர் மோர்பி மாவட்ட முத்தன்மை அமர்வு நீதிமன்றத்தில் ஜாமீன் கேட்டு மனு தாக்கல் செய்திருந்த நிலையில் இங்குள்ள அமர்வு நீதிமன்றம் சில நாட்களுக்குப் முன்பு ஜாமின் தர மறுப்பு தெரிவித்து, அவர்களின் மனுவை நிராகரித்தது குறிப்பிடத்தக்கது .
- பி. ஜேம்ஸ் லிசா









