தைவான் வான்வெளியில் ஏவுகணை ஒத்திகை – அச்சுறுத்துகிறதா சீனா?

தைவான் நிலப்பரப்பை கடக்கும் விதமாக சீனா மிகப்பெரிய அளவிலான ஏவுகணை ஒத்திகை பார்த்துள்ளது, வைதான் மக்களை அச்சத்தில் உறையவைத்துள்ளது.   சீனா தைவான் இடையே பல காலமாக மோதல்கள் தொடர்ந்து வந்த நிலையில் அமெரிக்காவின்…

தைவான் நிலப்பரப்பை கடக்கும் விதமாக சீனா மிகப்பெரிய அளவிலான ஏவுகணை ஒத்திகை பார்த்துள்ளது, வைதான் மக்களை அச்சத்தில் உறையவைத்துள்ளது.

 

சீனா தைவான் இடையே பல காலமாக மோதல்கள் தொடர்ந்து வந்த நிலையில் அமெரிக்காவின் நாடாளுமன்ற சபாநாயகர் நான்சி பெலோசியின் தைவான் பயணம் அதை மேலும் தீவிரப்படுத்தியுள்ளது. சீனாவின் கடுமையான எச்சரிக்கையையும் மீறி நான்சி பெலோசி தைவானுக்கு சென்று திரும்பினார்.

 

தைவானை தனது நிலப்பரப்பின் ஒரு பகுதி என கூறும் சீனா, பெலோசியின் இந்த பயணத்தை கடுமையாக எதிர்த்தது. தைவானை தொட்டால் ஆயுதப்படைகள் சும்மா இருக்காது என்று மிரட்டல் விடுத்த சீனா, பெலோசியின் பயணத்திற்கு பிறகு பல்வேறு விதமான ராணுவ நடவடிக்கைகளை கையில் எடுத்துள்ளது. இது தைவானில் பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது.

 

தைவான் விவகாரத்தில் அமெரிக்கா தலையிடுவதை விரும்பாத சீனா, அந்நாட்டை ஒட்டியுள்ள கடற்பரப்பில் போர் பயிற்சி மேற்கொண்டது. மேலும், தைவான் ஜலசந்தியில் தீவுகளை கைப்பற்றும் முயற்சியில் சீனா இறங்கியுள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. மேலும், கடந்த 10 ஆண்டுகளில் இல்லாத அளவிற்கு மிக பெரிய அளவிலான ஏவுகணை ஒத்திகையை சீனா நடத்தியுள்ளது. 4 ஏவுகணைகள் தைவானின் நிலப்பரப்பை கடக்கும் விதமாக ஒத்திகை பார்த்திருப்பது தைவானில் மிகப்பெரும் பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது.இந்த அளவிற்கு மிக உக்கிரமாக சீனா இதுவரை செயல்பட்டதில்லை என்பதே தைவான் மக்களின் அச்சமாக உள்ளது.

சீனாவின் ராணுவப் பயிற்சிகள் மற்றும் போர் நடவடிக்கைகளை உன்னிப்பாகக் கண்காணித்து வருவதாக தெரிவித்துள்ள தைவான் அரசு, தேவையான பதிலடிக்கு தயாராக உள்ளதாக குறிப்பிட்டுள்ளது. தைவானை தனிமைப்படுத்த அமெரிக்கா அனுமதிக்காது என நான்சி பெல்லோசி தெரிவித்துள்ள நிலையில், மேற்கு பசிபிக் பகுதியில் கண்காணிப்பை பலப்படுத்த விமானம் தாங்கி போர்க்கப்பலை அனுப்பியுள்ளது அமெரிக்கா.

 

நேட்டோ நாடுகள் பட்டியலில் உக்ரைனை இணைக்கும் விவகாரத்தில் ரஷ்யாவுடன் மோதல் போக்கை தொடங்கிய அமெரிக்கா, தற்போது தைவான் பயணத்தின் மூலம் மற்றும் ஒரு மோதலுக்கு வித்திட்டுள்ளதா என்ற கேள்வி எழுந்துள்ளது.

 

-இரா.நம்பிராஜன்

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.