மைக்ரோசாஃப்ட் நிறுவனம் அதன் ஊழியர்களுக்கு கொரோனா பெருந்தொற்று நிவாரணமாக போனஸ் வழங்க இருப்பதாக அறிவித்துள்ளது.
பில்கேட்ஸின் மைக்ரோசாஃப்ட் நிறுவனம் மார்ச் 31, 2021ம் ஆண்டிற்கு முன் வேலைக்கு சேர்ந்த அனைத்து ஊழியர்களுக்கும் கொரோனா பெருந்தொற்றைக் கருத்தில் கொண்டு நிவாரணமாக போனஸ் தொகை வழங்கயிருப்பதாக அறிவித்துள்ளது. அமெரிக்கா மற்றும் உலகின் பல நாடுகளில் உள்ள மைக்ரோசாஃப்ட் நிறுவன ஊழியர்களுக்கும், பகுதி நேர ஊழியர்களுக்கும் இது பொருந்தும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது. மைக்ரோசாஃப்ட் நிறுவனத்தில் மொத்தம் 175,508 ஊழியர்கள் பணிபுரிகின்றனர்.

இதுகுறித்து மைக்ரோசாஃப்ட் தலைமை மக்கள் அலுவலர் கதீலன் கோகன், ஊழியர்கள் அனைவருக்கும் பரிசு வழங்கப்பட இருப்பதாக தெரிவித்தார். இந்த பரிசுத் தொகையை பெற அமெரிக்கா மற்றும் பிற நாடுகளில் பணிபுரியும் ஊழியர்களும் தகுதி உள்ளவர்கள் எனவும் தெரிவித்தார். மேலும் இது கார்ப்பரேட் துணை தலைவர் பதவிக்கு கீழ் உள்ளவர்களுக்கு மட்டுமே பொருந்தும் எனவும் அவர் தெரிவித்தார். ஆனால் மைக்ரோசாஃப்டின் கிளை நிறுவனங்களான லிங்க்ட் இன் (LinkedIn), கிட்ஹப் (GitHub) மற்றும் ஸெனிமேக்ஸ் (ZeniMax) ஆகிய நிறுவனங்களுக்கு இந்த போனஸை பெற தகுதியற்றவர்கள் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.
ஒருவருக்கு தலா 1500 டாலர்கள் அதவாது இந்திய மதிப்பில் ரூ.1,11,863 போனஸாக வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் மைக்ரோசாஃப்ட் நிறுவனத்திற்கு 200 மில்லியன் டாலர் அதாவது இந்திய மதிப்பில் ரூ.14,91,51,40,000 செலவாகும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த 200 மில்லியன் டாலர் என்பது மைக்ரோசாஃப்ட் நிறுவனத்தின் இரண்டு நாள் லாபம் மட்டுமே எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஏற்கெனவே ஃபேஸ்புக் நிறுவனம் அதன் ஊழியர்களுக்கு கொரோனா பெருந்தொற்று போனஸாக ரூ.74,500 வழங்கியது, அமேசான் நிறுவனம் அவர்களின் ஊழியர்களுக்கு ரூ.37,200 போனஸாக வழங்கியது. உலகளவில் பல்வேறு நிறுவனங்கள் கொரோனா பெருந்தொற்றால் ஊழியர்களுக்கு சம்பள குறைப்பும், வேலையை விட்டு நீக்கியும் வரும் நிலையில் இந்த நிறுவனங்கள் மட்டும் அவர்களின் ஊழியர்களுக்கு போனஸ் வழங்கியிருப்பது அந்நிறுவனங்களின் ஊழியர்கள் மத்தியில் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
மைக்ரோசாஃப்ட் நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரியாக இந்தியாவைச் சேர்ந்த சத்யா நட்டேலா பதவி வகிக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.







