நேரடி நியமனம் குறித்து வெளியான அறிவிக்கை போலியானது-கூட்டுறவு சங்கங்களின் பதிவாளர் விளக்கம்

கூட்டுறவு சங்கங்களில் நேரடி ஆள் சேர்ப்பு தொடர்பாக கடந்த சில தினங்களுக்கு முன் நாளிதழில் வெளியான விளம்பரம் போலியானது என கூட்டுறவு சங்கங்களின் பதிவாளர் விளக்கம் அளித்துள்ளார்.  இது தொடர்பாக கூட்டுறவு சங்கங்களின் பதிவாளர்-…

கூட்டுறவு சங்கங்களில் நேரடி ஆள் சேர்ப்பு தொடர்பாக கடந்த சில தினங்களுக்கு முன் நாளிதழில் வெளியான விளம்பரம் போலியானது என கூட்டுறவு சங்கங்களின் பதிவாளர் விளக்கம் அளித்துள்ளார். 

இது தொடர்பாக கூட்டுறவு சங்கங்களின் பதிவாளர்- மாநில ஆள்சேர்ப்பு மையத்தின் தலைவர் சார்பில் வெளியிடப்பட்டுள்ள மறுப்பு அறிக்கையில் கீழ்க்கண்டவாறு தெரிவிக்கப்பட்டுள்ளது:-

​மாநில ஆள்சேர்ப்பு நிலையத்தின் பெயரை பயன்படுத்தி, வெளியிடப்பட்ட  விளம்பர எண் 1/2022, நாள் 18.08.2022 தேதி அறிவிக்கை போலியானது.

இந்த விளம்பரத்தில் தலைமை கூட்டுறவு சங்கங்கள் மற்றும் வங்கிகளில் காலியாக உள்ள உதவியாளர் மற்றும் இளநிலை உதவியாளர் பணியிடங்கள் நேரடி நியமனம் மூலம் நிரப்பப்படும் என்றும் இதற்காக விண்ணப்பங்கள் இணையதளம் மூலம் அனுப்பப்படலாம் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இத்தகைய விளம்பரம் ஏதும் மாநில ஆள்சேர்ப்பு நிலையத்தால் அதிகாரபூர்வமாக வெளியிடப்படவில்லை. எனவே மேற்கண்ட போலி விளம்பரத்தை பார்த்து பொதுமக்கள் ஏமாற வேண்டாம் என்றும் மிகவும் விழிப்புடன் இருக்க வேண்டும் என்றும் கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.

இது தொடர்பாக செய்தி வாட்ஸ்அப் உள்ளிட்ட சமூக வலைதளங்கள் மூலம் பரவி வருகிறது.​

​எனவே வாட்ஸ்அப் உள்ளிட்ட சமூக வலைதளங்கள் மூலம் பரப்பப்பட்டு வரும் பொய்யான தகவல்களை நம்பி பொதுமக்கள் ஏமாற வேண்டாம் எனவும் இது போன்ற பொய்யான தகவல்களை பரப்புவோர் மீது காவல் துறை மூலம் தக்க நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என கூட்டுறவுச் சங்கங்களின் பதிவாளர் தெரிவித்துள்ளார்

இவ்வாறு கூட்டுறவு சங்கங்களின் பதிவாளர்- மாநில ஆள்சேர்ப்பு மையத்தின் தலைவர் சார்பில் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.