பிரதமர் கையில் இருக்கும் செங்கோலை பிடுங்க வேண்டிய நாள் விரைவில் வரும் என கனிமொழி எம்.பி பேசியுள்ளார்.
சென்னை வள்ளுவர் கோட்டத்தில் மேற்கு மாவட்ட திமுக மகளிர் அணி சார்பில் மணிப்பூர் வன்முறை மற்றும் பெண்கள் மீது வன்கொடுமை சம்பவத்தை தடுக்க தவறிய மத்திய பாஜக அரசைக் கண்டித்து திமுக துணைப் பொதுச் செயலாளர் கனிமொழி எம்.பி தலைமையில் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
அப்போது மேடையில் பேசிய எம்.பி கனிமொழி, “மணிப்பூர் மாநிலம் பற்றி எரிந்துகொண்டிருக்கிறது. 140க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர். ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் வீடுகளை விட்டு, கிராமங்களை விட்டு வெளியேறியுள்ளனர். எத்தனையே பேர் காயமடைந்து மருத்துவ வசதி கூட கிடைக்காமல் திண்டாடிக்கொண்டிருக்கும் சூழலி, இதுபற்றி ஒரு வார்த்தை கூட பிரதமர் மோடி பேசவில்லை.

மணிப்பூரில் பெண்கள் நிர்வாணமாக்கிப்படுத்தியது மே 04 தேதி நடைபெற்றது. கலவரம் நடைபெறும் பொழுது காவல் துறையும் அங்கு இருக்கிறார்கள். கலவரம் குறித்து எஃப் ஐ ஆர் பதிவு செய்யப்பட்டுள்ளது. எஃப் ஐ ஆர் பதிவு செய்யப்பட்டு அவர்கள் மீது நடவடிக்கை எடுக்காமல் காவல்துறையினர் மௌனம் சாதித்து வருகின்றனர். இந்த சம்பவத்திற்கு மௌனம் காத்து வந்த பிரதமர் மோடி பதவி விலக வேண்டும். பிரதமர் கையில் இருக்கும் செங்கோலை பிடுங்க வேண்டிய நாள் விரைவில் வரும்.
மணிப்பூர் விவகாரம் குறித்து நாடாளுமன்றத்தில் பிரதமர் மோடி பேச வேண்டும் என்று தொடர்ந்து வலியுறுத்தி வருகிறோம். மணிப்பூர் கலவரம் குறித்து பாராளுமன்றத்தில் பிரதமர் மோடி விவாதிக்க தயாராக இல்லை என்பதுதான் ஜனநாயகத்தில் நடந்த மிகப்பெரிய கொடுமை’’ என எம்.பி கனிமொழி பேசினார்.







