முக்கிய ஐ.ஏ.எஸ். அதிகாரிகள் 12 பேர் பணியிட மாற்றம்! தமிழ்நாடு அரசு அதிரடி உத்தரவு!

தமிழ்நாடு அரசில் பல்வேறு துறைகளின் செயலாளர்கள் உட்பட முக்கிய ஐ.ஏ.எஸ். அதிகாரிகள் 12 பேரை பணியிட மாற்றம் செய்து தமிழ்நாடு அரசு உத்தரவிட்டுள்ளது. தமிழ்நாட்டின் பல்வேறு துறைகளின் செயலாளர்கள், மாவட்ட ஆட்சியர்களாக உள்ள ஐ.ஏ.எஸ்.…

தமிழ்நாடு அரசில் பல்வேறு துறைகளின் செயலாளர்கள் உட்பட முக்கிய ஐ.ஏ.எஸ். அதிகாரிகள் 12 பேரை பணியிட மாற்றம் செய்து தமிழ்நாடு அரசு உத்தரவிட்டுள்ளது.

தமிழ்நாட்டின் பல்வேறு துறைகளின் செயலாளர்கள், மாவட்ட ஆட்சியர்களாக உள்ள ஐ.ஏ.எஸ். அதிகாரிகள் அவ்வப்போது நிர்வாக காரணங்களுக்காக பணியிட மாற்றம் செய்யப்படுவது வழக்கம். அந்த வகையில் தற்போது முக்கிய துறைகளின் செயலாளர்கள் உட்பட மூத்த ஐ.ஏ.எஸ். அதிகாரிகளை தமிழ்நாடு அரசு பணியிட மாற்றம் செய்துள்ளது.

அந்த வகையில், ஐஏஎஸ் அதிகாரி ராஜாராமன் வருவாய், பேரிடர் மேலாண்மைத்துறை செயலாளராக மாற்றம் செய்யப்பட்டு உள்ளார். ஐஏஎஸ் அதிகாரி குமார் ஜெயந்த் தொழிலாளர் நலத்துறை கூடுதல் தலைமைச் செயலாளராக நியமிக்கப்பட்டு இருக்கிறார்.

அதேபோல், தொழில்துறை ஆணையராக ஐஏஎஸ் அதிகாரி அர்ச்சனா பட்நாயக் நியமனம் செய்யப்பட்டு உள்ளார். மாற்றுத்திறனாளிகள் நலத்துறை செயலாளராக ஐஏஎஸ் அதிகாரி சிகி தாமஸ் வைத்தியனை தமிழ்நாடு அரசு நியமனம் செய்துள்ளது. அதேபோல், அண்ணா நிர்வாக பணியாளர் கல்லூரி இயக்குனராக ஐஏஎஸ் அதிகாரி ஆனந்தகுமார் மாற்றப்பட்டு உள்ளார்.

அதேபோல் குடிமைபொருள் வழங்கல் மற்றும் நுகர்வோர் பாதுகாப்பு ஆணையராக ஐஏஎஸ் அதிகாரி பூஜா குல்கர்னி நியமிக்கப்பட்டு இருக்கிறார். வருவாய் நிர்வாகத் துறை கூடுதல் ஆணையராக ஐஏஎஸ் அதிகாரி பிரகாஷ் மாற்றம் செய்யப்பட்டு உள்ளார், டி.ஆர்.பி தலைவராக ஐஏஎஸ் அதிகாரி ஸ்ரீ வேங்கட பிரியா நியமிக்கப்பட்டிருக்கிறார்.

ஐஏஎஸ் அதிகாரி கலையரசி சுகாதாரத் துறை மற்றும் குடும்ப நலத்துறை சிறப்பு செயலாளராக நியமிக்கப்பட்டு உள்ளார். அவரே மருத்துவ பணியாளர்கள் தேர்வு வாரிய தலைவர் பொறுப்பை கூடுதலாக பார்த்துக்கொள்வார் என தமிழ்நாடு அரசு அறிவித்து உள்ளது.

மேலும் தமிழ்நாடு சிறு தொழில் மேம்பாட்டுக் கழகத்தின் தலைவராக விக்ரம் கபூர் ஐஏஎஸ் நியமிக்கப்பட்டு உள்ளார். ஐஏஎஸ் அதிகாரி மோனிகா ரானா மதுரை ஊரக மேம்பாட்டு முகமை திட்ட அதிகாரி மற்றும் மதுரை மாவட்ட கூடுதல் ஆட்சியர் / திட்ட அலுவலராக மாற்றப்பட்டு உள்ளார். அதேபோல், சென்னை குடிநீர் வழங்கல் மற்றும் கழிவுநீர் அகற்ற வாரிய செயல் இயக்குநராக சரவணனை அரசு நியமித்து உள்ளது.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.