மகாராஷ்ட்ராவில் 4 ஆண்டுகளில் 4 முறை அரசியல் திருப்பங்களும் பதவி ஏற்பு விழாக்களும் நடைபெற்றுள்ளன. மூன்றாவது முறையாக துணை முதலமைச்சராகியுள்ளார் அஜித் பவார். இரண்டு கட்சிகள் உடைந்துள்ளன. என்ன நடந்தது. அடுத்து என்ன ? விரிவாக பார்க்கலாம்…
இந்தியாவில் முக்கிய மாநிலங்களில் ஒன்றாக உள்ள மகாராஷ்டிராவில் கடந்த 2019 அக்டோபரில் சட்டப்பேரவைக்கான தேர்தல் நடைபெற்றது, மொத்தமுள்ள 288 சட்டப்பேரவைத் தொகுதிகளில் பாஜக கூட்டணியில் பாஜக 105 இடங்களிலும், சிவசேனா 57 இடங்களிலும், ஆர்எச்எஸ்பி 1 இடத்திலும் வென்றன. காங்கிரஸ் கூட்டணியில் காங்கிரஸ் 45 இடங்கள், தேசியவாத காங்கிரஸ் 53 இடங்கள், சமாஜ்வாதி 2 இடங்களில் வென்றன. தேர்தலில் கூட்டணி அமைத்து போட்டியிட்ட பாஜக -சிவசேன இடையில் முதலமைச்சர் யார்? என்கிற போட்டியில் ஆட்சியமைப்பதில் இழுபறி ஏற்பட்டது.
களமிறங்கிய சரத் பவார்
பாஜக, சிவ சேனா இரண்டு கட்சிகளும் தலா இரண்டரை ஆட்சியில் இருக்கும். முதலில் உத்தவ் தாக்ரே, தேவேந்திர பட்னவிஸ் இருவரில் ஒருவர் முதலமைச்சர் ஆவார் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில், முதல் திருப்பமாக சிவசேனாவைத் தவிர்த்து விட்டு, பாஜகவின் தேவேந்திர பட்னவிஸ் முதலமைச்சராகவும் தேசியவாத காங்கிரஸ் மூத்த தலைவர் அஜித் பவார் துணை முதலமைச்சராகவும் பதவி ஏற்றனர். ஆனால், 3 நாட்களில் இந்த அரசு கவிழ்ந்தது. தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத் பவாரிடம் மீண்டும் தஞ்சமடைந்தார் அஜித் பவார்.
தேசியவாத காங்கிரஸ் தலைவரும் முன்னாள் முதலமைச்சருமான சரத் பவார் அதிரடியாக களமிறங்கி சிவசேனா, காங்கிரஸ், தேசியவாத கட்சிகளைக் கொண்ட மகா விகாஸ் அகாடி என்கிற மெகா கூட்டணியை உருவாக்கினார். அடுத்த ஒரு வாரத்தில் முதலமைச்சராக உத்தவ் தாக்ரே, துணை முதலமைச்சராக அஜித் பவார் பொறுப்பேற்றனர். மகா விகாஸ் அகாடி மக்களவை தேர்தலுக்கும் தொடரும். பாஜகவிற்கு எதிராக தேசிய அளவிலும் கூட்டணி அமைக்க சரத்பவார் முக்கிய பங்காற்றினார். உத்தவ் தாக்ரேவும் துணையாக நின்றார்.
சிவ சேனாவில் உடைப்பு
ஆனால், கடந்த ஆண்டு ஜூன் மாதம் சிவசேனாவில் பிளவு ஏற்பட்டது. ஏக்நாத் ஷிண்டே தலைமையில் 40 எம்.எல்.ஏக்கள் அணி மாறினர். பெரும்பான்மையை நிருபிக்க முடியாமல் உத்தவ் தாக்ரே முதலமைச்சர் பதவியில் இருந்து விலகினார். சிவ சேனாவின் முக்கிய தலைவர் ஏக்நாத் ஷிண்டே முதலைமைச்சரனார். தேவேந்திர பட்னவிஸ் துணை முதலமைச்சரானார். அஜித் பவார் எதிர்க்கட்சித் தலைவரானார். இந்நிலையில், அடுத்த ஓராண்டில் மீண்டும் ஒரு திருப்பமாக அஜித் பவார் மீண்டும் துணை முதலமைச்சராகியுள்ளார். தன்னோடு மேலும் 8 பேரை அமைச்சராக்கியுள்ளார். அண்மையில் அக்கட்சியின் செயல் தலைவராக நியமனம் செய்யப்பட்ட பிரபுல் படேல் உள்ளிட்ட பலர் அஜித் பவார் பக்கம் சென்றுள்ளனர். தங்களிடம் 40 எம்.எல்,ஏக்கள் உள்ளனர். கட்சி எங்களுடையது என்று ஏக்நாத் ஷிண்டேவைப் போல அஜித் பவார் தரப்பும் சொல்கிறது. மகாராஷ்ட்ராவின் அரசியல் திருப்பம் தேசிய அளவில் பேசுபொருளாகியுள்ளது.
தொடரும் திருப்பங்கள் – உடையும் கட்சிகள்
மகாராஷ்ட்ராவில் 4 ஆண்டுகளில் 4 முறை பதவி ஏற்பு விழாக்களும் அரசியல் அதிரடி திருப்பங்களும் அரங்கேறியுள்ளன. அங்கு வெவ்வேறு முதலமைச்சர்களின் ஆட்சியில் 3வது முறையாக அஜித் பவார் துணை முதலமைச்சராகியுள்ளார். கடந்த 2019 தேர்தலில் பாஜக கூட்டணியில் இருந்த சிவசேனா, காங்கிரஸ் கூட்டணியில் தொடரும் தேசியவாத காங்கிரஸ் என 2 கட்சிகள் உடைந்துள்ளன. இந்த கட்சிகள் உடையவில்லை. உடைக்கப்பட்டுள்ளன என்கிறார்கள் அரசியல் விமர்சகர்கள்.
தலைவர்கள் கருத்து
இது குறித்து பல்வேறு கட்சிகளின் தலைவர்கள் விமர்சனம் செய்துள்ளனர். குறிப்பாக, “ஏக்நாத் ஷிண்டே உள்ளிட்டோர் விரைவில் தகுதி நீக்கம் செய்யப்படவுள்ளனர். இதையடுத்து இன்னொரு முதலமைச்சர் வருவார். அஜித் பவார் முதலமைச்சராவார் என்கிறார் சிவ சேனா உத்தவ் தாக்ரே பிரிவு மூத்த தலைவர் சஞ்சய் ராவத்.
தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத்பவார், ‘அமலாக்கத்துறையின் விசாரணைக்கு பயந்து சிலர் இந்த முடிவை எடுத்துள்ளனர். அவர்கள் சென்றது குறித்து கவலையில்லை. அவர்களின் இந்த நிலைக்கு வருந்துகிறேன்’’ என்று தெரிவித்துள்ளார்.
‘’பாஜக வாஷிங் மெஷின் வேலையைத் தொடங்கி விட்டது. தற்போது அமைச்சராகியுள்ள 9 பேரிடமும் அமலாக்கத்துறை, வருமான வரித்துறை விசாரணை நடத்தியுள்ளது. அணி மாறியதும் அவர்களின் ஊழல் மறைந்து புனிதமடைந்து விட்டன’’ என்கிறார் காங்கிரஸ் பொதுச் செயலாளர் ஜெய்ராம் ரமேஷ்.
அணி மாற்றம் குறித்த கேள்விக்கு, ‘’மக்களுக்கு சேவையாற்றவே இந்த அரசில் இணைந்துள்ளோம். மக்கள் நலனுக்காக சிவ சேனாவுடன் சேரலாம். பாஜகவுடன் சேரக்கூடாதா? ‘’ என்கிறார் துணை முதலமைச்சராகியுள்ள அஜித் பவார்.
தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சரத்பவாரை தொலைபேசியில் தொடர்பு கொண்டு பேசியுள்ளார். அப்போது தனது முழு ஆதரவை அளிப்பதாக தெரிவித்துள்ளார்.
கர்நாடகா முதலமைச்சர் குமாரசாமி’’ மகராஷ்ட்ரா அரசியல் திருப்பம் அதிர்சியளிக்கிறது. கர்நாடகாவின் அஜித் பவார் யார்? என்று கேட்டுள்ளார் .
எதிர்க்கட்சிகளுக்கு எச்சரிக்கையா?
பாஜகவிற்கு எதிரான கூட்டணியைக் கட்டமைப்பதில் முக்கிய பங்காற்றி வரும் சரத்பவாரின் தேசியவாத காங்கிரஸ், உத்தவ் தாக்ரேவின் சிவசேனா ஆகிய கட்சிகளில் ஏற்பட்டுள்ள பிளவுகளையடுத்து, மக்களவைத் தேர்தலுடன் மகாராஷ்ட்ரா சட்டப்பேரவைத் தேர்தலும் நடத்தப்படும் வாய்ப்புள்ளதாக சொல்லப்படுகிறது.
மகாராஷ்ட்ராவின் முக்கிய தலைவராக மட்டுமின்றி தேசிய அளவிலும் முக்கியத்துவம் பெற்ற சரத்பவாரிடம் மிக நெருக்கமாக இருந்த மூத்த தலைவர்கள் அணி மாறியதை உட்கட்சி பூசல், அதிருப்தி என்று மட்டும் எளிதில் கடந்து விட முடியாது. எதிர்கட்சிகளுக்கு, எதிர்க்கட்சித் தலைவர்களுக்கு விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கையாகவும் பார்க்க வேண்டும் என்கிறார்கள் அரசியல் நோக்கர்கள். குறிப்பாக இரண்டாவது முறையாக எதிர்க்கட்சிகளின் இரண்டாவது கூட்டம் ஒத்தி வைக்கப்பட்டுள்ளது. காங்கிரஸ், திமுக உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் இதை எப்படி எதிர்கொள்ள உள்ளன? என்கிற கேள்வியும் எழுந்துள்ளது.
மகாராஷ்ட்ரா பாணி அரசியல் அதிரடிகள் பிற மாநிலங்களிலும் எதிரொலிக்குமா? திட்டமிட்டபடி ஒருங்கிணையுமா எதிர்க்கட்சிகள்…? கட்சியைத் தக்க வைப்பார்களா தலைவர்கள்? பொருத்திருந்து பார்க்கலாம்…
இது தொடர்பான சொல் தெரிந்து சொல் பகுதியின் காணொலி…..









