ஏக்நாத் சிண்டேவை முதல்வராக்கும் முடிவை பாஜகவினர் கனத்த இதயத்துடன் ஏற்றுக் கொண்டதாக அந்தக் கட்சியின் மகாராஷ்டிரா மாநில தலைவர் சந்திரகாந்த் பாட்டீல் கூறியிருக்கிறார்.
மகாராஷ்டிரா மாநில அரசியலில் கடந்த சில மாதங்களாக பல்வேறு அதிரடி திருப்பங்கள் நிகழ்ந்து வருகின்றன. சிவசேனாவில் இருந்து 39 அதிருப்தி எம்.எல்.ஏக்கள் ஏக்நாத் சிண்டே தலைமையில் பாஜக பக்கம் சென்றனர். சிவசேனா, காங்கிரஸ், தேசியவாத காங்கிரஸ் கூட்டணி ஆட்சி கவிழ்ந்தது. ஏக்நாத் சிண்டே பாஜகவுடன் இணைந்து ஆட்சியமைக்க உரிமை கோரினார். உத்தவ் தாக்கரே முன்னாள் முதல்வராக தள்ளப்பட, ஏக்நாத் சிண்டே முதல்வராக பதவியேற்றார். பாஜகவின் தேவேந்திர பட்னாவிஸ் துணை முதல்வராக பதவியேற்றிருக்கிறார்.
தொடக்கத்தில் தேவேந்திர பட்னாவிஸ் தான் முதல்வர், ஏக்நாத் சிண்டே துணை முதல்வர் என்றுதான் தகவல் வெளியானது. ஏக்நாத் சிண்டேவை முதல்வராக்கும் முடிவு பாஜகவிலே பலருக்கு சர்ப்ரைஸ் ஆகதான் வந்தது. இந்நிலையில் மகாராஷ்டிரா மாநில பாஜக தலைவர் சந்திரகாந்த் பாட்டீல், “ஏக்நாத் சிண்டேவை முதல்வராக்கியதில் தங்களுக்கு மகிழ்ச்சி இல்லை.” என்று வெளிப்படையாக பேசியிருக்கிறார்.
சனிக்கிழமை நடந்த பாஜக செயற்குழு கூட்டத்தில் பேசிய சந்திரகாந்த் பாட்டீல், “நெக்கடியான இந்த சூழலில் நல்ல வலுவான தலைவரை தேர்ந்தெடுக்க வேண்டிய பொறுப்பு இருந்தது. நாங்கள் பட்னாவிஸ் தான் முதல்வர் என்று எதிர்பார்த்துக் கொண்டிருந்தோம். ஆனால் பட்னாவிஸ் மற்றும பாஜக தலைமை இருவரும் கனத்த இதயத்துடன் ஏக்நாத் சிண்டேவை முதல்வராக்க முடிவு செய்தனர். இந்த முடிவு எங்களுக்கு மகிழ்ச்சியைத் தரவில்லை. எங்களது கவலையை மறைத்துக் கொண்டுதான் அரசாங்கம் அமைக்கும் முடிவை ஏற்றோம்.” என்று கூறினார்.
சந்திரகாந்த் பேசிய வீடியோ சமூகவலைதளங்களில் வேகமாக பரவியது. “ஏக்நாத் சிண்டேவை பாஜகவினர் ஏற்றுக் கொள்ளவில்லை. கூட்டணிக்குள் புதிய குழப்பம்.” என்று கருத்துகள் முன்வைக்கப்பட்டன. இந்த சர்ச்சை குறித்து தேவேந்திர பட்னாவிஸ், “சந்திரகாந்த் பாட்டீலின் கருத்துகள் தவறாக புரிந்து கொள்ளப்பட்டுள்ளன. அவர்கள் எதிர்பார்த்த ஒன்று நடக்கவில்லை என்ற ஆதங்கத்தைத்தான் அவர் கூறினார். அது திடீரென்று எடுக்கப்பட்ட முடிவு இல்லை. அனைவரும் முன்பே கலந்தாலோசித்து ஒருமித்த கருத்துடன் தான் முடிவு எடுக்கப்பட்டது.” என்று கூறியுள்ளார்.
-ம.பவித்ரா








