ஸ்டார்ட்அப் ஆக துவங்கப்பட்ட கால்நடை வர்த்தக தளம் – கோடிக்கணக்கில் வருமானம் ஈட்டும் ஐஐடி மாணவிகள்!

ஐஐடி மாணவிகளால் துவங்கப்பட்ட கால்நடை வர்த்தகம் மற்றும் பராமரிப்பு தொடர்பான ஸ்டார்ட்அப் நிறுவனம், இன்று கோடிக்கணக்கில் வருமானம் ஈட்டி சாதனை படைத்துள்ள நிகழ்வு பலரது கவனத்தையும் பெற்றுள்ளது. நம் நாட்டில் இடம் வாங்குவதிலிருந்து நாவிற்கு…

ஐஐடி மாணவிகளால் துவங்கப்பட்ட கால்நடை வர்த்தகம் மற்றும் பராமரிப்பு தொடர்பான ஸ்டார்ட்அப் நிறுவனம், இன்று கோடிக்கணக்கில் வருமானம் ஈட்டி சாதனை படைத்துள்ள நிகழ்வு பலரது கவனத்தையும் பெற்றுள்ளது.

நம் நாட்டில் இடம் வாங்குவதிலிருந்து நாவிற்கு சுவை தரும் ஊறுகாய் வாங்குவது வரை அனைத்திற்குமே, எந்த சிரமமும் இன்றி இருக்கும் இடத்திலிருந்தே பர்ச்சேஸ் செய்வதற்கு வசதியாக பல இணையதளங்கள் இயங்கி வருகின்றன. ஆனால் இவற்றில் பெரும்பாலானவை நகரத்தில் வசிப்பவர்களுக்கு வசதிகளை ஏற்படுத்தி தரவே முனைப்புடனும், புதிய புதிய திட்டங்களுடனும் செயலாற்றி வருகின்றன.

இப்படிப்பட்ட சூழலில் ஐஐடி டெல்லியைச் சேர்ந்த இரண்டு மாணவிகள் வித்தியாசமாக யோசித்து , கால்நடைகளை வாங்குவதற்கும் விற்பதற்கும் ஆன்லைன் தளமான ‘Animall’ என்ற இணையதளத்தை துவங்கி அதில் தற்போது மிகப்பெரிய வெற்றியையும் கண்டுள்ளனர்.

சொல்ல போனால் இது ஒரு ஸ்டார்ட்அப் நிறுவனமாக கடந்த 2019 இல் டெல்லி ஐஐடியில் படிக்கும் போது ரூம்மேட்களாக நீது யாதவ் மற்றும் கிர்த்தி ஜாங்ரா என்ற இரு தோழிகளால் துவங்கப்பட்டது ஆகும். இவர்களுடன் லிபின் வி பாபு மற்றும் நீது ஒய் ஆகிய வேறு சில நண்பர்களும் இணைந்துக் கொள்ள, இவர்கள் பால் பண்ணையாளர்களின் வாழ்க்கையை மேம்படுத்தும் நோக்கத்துடன் ‘Animall’ என்கிற இந்த டிஜிட்டல்தளத்தை துவங்கினர்.

துவக்கத்தில் மற்ற ஸ்டார்ட்அப்களை போலவே பல சிரமங்களை இவர்கள் சந்தித்த நேரத்தில் தான், எருமைகளை வாங்க ஆர்வமுள்ள நபர்களின் ஆர்டர்களை கொஞ்சம் கொஞ்சமாகப் பெறத் தொடங்கி அடுத்த கட்டத்திற்கு நகர்ந்தனர். அதன் படி கடந்த 2021 நிதியாண்டில் 5 லட்சமாக இருந்த இவர்களது வருவாய், 2022ல் ரூ.7.4 கோடியை எட்டும் அளவுக்கு உயர்ந்தது.

இந்நிலையில், தற்போது இந்த டிஜிட்டல்தளத்தின் மதிப்பு ரூ.565 கோடியாக உயர்ந்து, ஒரு சில ஆண்டுகளில் குறிப்பிடத்தக்க முன்னேற்றத்தை அடைந்துள்ள தகவல் பலரையும் ஆச்சரியம் அடைய வைத்துள்ளது. இந்த டிஜிட்டல் தளத்தில் கால்நடைகளை வாங்குதல் மற்றும் விற்பது மட்டுமின்றி கால்நடை சுகாதார சேவையும் சமீபத்தில் இணைக்கப்பட்டுள்ளது . இதனால் இந்நிறுவனத்தின் வருவாயில் 90% கால்நடை வியாபாரத்தில் இருந்து வருகிறதென்றால், மீதமுள்ள 10% மருத்துவ செலவுகள், உதவி இனப்பெருக்கம் மற்றும் விற்பனை கமிஷன்கள் ஆகியவற்றிலிருந்து கிடைப்பது பலரின் கவனத்தையும் பெற்றுள்ளது.

ஒரு சின்ன ஸ்டார்ட்அப் நிறுவனமாக துவங்கி இன்று கோடிக்கணக்கில் பணம் ஈட்டும் நிறுவனமாக இந்த ‘Animall’ டிஜிட்டல் தளம் பெற்றுள்ள வளர்ச்சி இன்றைய இளைஞர்களுக்கு உத்வேகத்தை கொடுத்துள்ளதோடு, கிராம வளர்ச்சியில் கவனம் செலுத்தினாலும் நம்மால் வெற்றி காணமுடியும் என்ற நம்பிக்கையையும் கொடுத்துள்ளது.

  • பி.ஜேம்ஸ் லிசா
சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.