தமிழ்நாடு போலவே கர்நாடகாவிலும் பெண்கள் அரசு பேருந்தில் பயணிக்கும் திட்டத்தைக் கொண்டுவருவோம் என தேர்தல் பரப்புரையில் ராகுல் காந்தி தெரிவித்துள்ளார்.
224 தொகுதிகள் கொண்ட கர்நாடக சட்டப்பேரவைக்கு வரும் மே மாதம் 10-ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெறவுள்ளது. தற்போதைய கர்நாடக முதலமைச்சர் பசவராஜ் பொம்மையின் பதவிக் காலம் மே 24-ம் தேதியுடன் நிறைவடைய உள்ள நிலையில், பாஜக, காங்கிரஸ், மதச்சார்பற்ற ஜனதா தளம் ஆகிய கட்சிகள் கர்நாடகாவில் தீவிரமாகத் தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டு வருகின்றன.
ஆளும் பாஜகவுக்கும் எதிர்க்கட்சியான காங்கிரஸ் கட்சிக்கும் கடும் மோதல் ஏற்பட்டுள்ளது. ஏற்கனவே வந்த கருத்துக்கணிப்புகளில் காங்கிரஸ் வெற்றி பெறும் என்று கூறப்பட்டுள்ளது. இந்த நிலையில், கர்நாடகாவில் காங்கிரஸ் ஆட்சிக்கு வந்தால், அரசு பேருந்துகளில் பெண்கள் இலவசமாகப் பயணம் செய்யலாம் என காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி தெரிவித்துள்ளார்.
காங்கிரஸ் வேட்பாளர்களை ஆதரித்து மங்களூருவில் நடைபெற்ற பிரசார கூட்டத்தில் பேசிய ராகுல் காந்தி, கர்நாடகாவில் காங்கிரஸ் கட்சி ஆட்சி அமைந்தால் முதல் நாளிலிருந்து பெண்கள் அரசு பேருந்தில் இலவச பயணம் செய்யும் திட்டம் அமல்படுத்தப்படும் என தெரிவித்தார்.
காங்கிரஸ் கட்சி ஏற்கனவே அனைத்து வீடுகளுக்கும் 200 யூனிட் இலவச மின்சாரம், குடும்ப தலைவிகளுக்கு ரூ.2,000 மாதாந்திர உதவி, வறுமைக் கோட்டுக்குக் கீழ் உள்ள குடும்பத்தில் உள்ள ஒவ்வொரு உறுப்பினருக்கும் 10 கிலோ அரிசி இலவசமாக வழங்கப்படும் என தெரிவித்திருந்தது.
அத்துடன், 18 முதல் 25 வயது வரை உள்ள பட்டதாரி இளைஞர்களுக்கு இரண்டு ஆண்டுகளுக்கு மாதந்தோறும் ரூ.3,000 மற்றும் டிப்ளமோ படித்தவர்களுக்கு ரூ.1,500 வழங்கப்படும் என காங்கிரஸ் ஏற்கனவே அறிவித்தது. ஏற்கனவே டெல்லி, தமிழ்நாடு ஆகிய மாநிலங்களில் பெண்களுக்கு அரசு பேருந்துகளில் இலவசமாகப் பயணிக்கலாம் என்ற முறை அமலில் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.







