கமல் நடிப்பில் வெளியாக இருக்கும் விக்ரம் படத்தில் பத்தல பத்தல என்ற பாடல் சமீபத்தில் வெளியானது. அந்த பாடலின் வரிகள் சில மத்திய அரசை குறை சொல்வதுபோன்று இருப்பதால், பாடல் விவகாரம் தொடர்பாக ராஜ்கமல் நிறுவனத்திற்கு வக்கீல் நோட்டீசு அனுப்பப்பட்டுள்ளது.
லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் நடிகர் கமல்ஹாசன் நடிப்பில் உருவாகியுள்ள ‘விக்ரம்’ திரைப்படத்தை கமல்ஹாசன் ராஜ்கமல் பிலிம்ஸ் நிறுவனம் மூலம் தயாரிக்கிறார். இந்த படத்தில், விஜய் சேதுபதி, பகத் பாசில், நரேன், அர்ஜுன் தாஸ், காளிதாஸ் ஜெயராம் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். இப்படத்திற்கு கிரிஷ் கங்காதரன் ஒளிப்பதிவு செய்துள்ளார்.விக்ரம் திரைப்படம் வருகிற ஜூன் 3-ம் தேதி வெளியாக உள்ளது. இந்நிலையில், இந்த படத்தில் நடிகர் கமல்ஹாசன் எழுதி, கமல்ஹாசன் மற்றும் அனிருத் இணைந்து பாடியுள்ள ‘பத்தல பத்தல’ என்று தொடங்கும் பாடலின் பர்ஸ்ட் சிங்கிள் கடந்த 2 நாட்களுக்கு முன்பு வெளியானது.
கமலின் குத்தாட்டம் நிறைந்த இந்த பாடல் ரசிகர்களை வெகுவாக கவர்ந்தது. அதே நேரத்தில் பத்தல பத்தல’ பாடலில் இடம்பெற்றுள்ள சில வரிகள் சர்ச்சையையும் கிளப்பியது. “ஒன்றியத்தின் தப்பாலே ஒன்னியும் இல்லே இப்பாலே” என்று மத்திய அரசை குறைசொல்லும் நேரடி வரிகள் இந்த பாடலில் இடம் பெற்றிருந்தன. இது விவாத பொருளாக மாறியதன் காரணமாக கமலின் ராஜ்கமல் நிறுவத்திற்கு வக்கீல் நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது. சென்னை கொருக்குப்பேட்டையை சேர்ந்த சமூக ஆர்வலர் ஆர்.டி.ஐ. செல்வம் என்பவர் வழக்கறிஞர் சரிதா மூலம் நோட்டீஸ் அனுப்பியுள்ளார்.
மத்திய அரசை திருடன் என விமர்சிக்கும் வகையிலும், கொரோனா தடுப்பூசி திட்டத்தை கேலி செய்யும் வகையிலும், சாதிய ரீதியில் மோதலை ஏற்படுத்தும் வகையிலும் பத்தல பத்தல பாடல் வரிகள் இடம் பெற்றுள்ளதாக குற்றச்சாட்டினார். சர்ச்சைக்குரிய வரிகளை இரண்டு நாட்களில் நீக்கி, நடிகர் கமல்ஹாசன் நிபந்தனையற்ற மன்னிப்பு கேட்காவிட்டால், சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் எச்சரிக்கைவிடுத்துள்ளார்.








