5ஜி அலைக்கற்றை ஏலத்தில் சுமார் மூன்றரை லட்சம் கோடி ரூபாய் அளவிற்கு மோசடி நடந்திருப்பதாக தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டித் தலைவர் கே.எஸ்.அழகிரி குற்றம்சாட்டியுள்ளார்.
இது தொடர்பாக கே.எஸ்.அழகிரி வெளியிட்டுள்ள அறிக்கையில், 5ஜி அலைக்கற்றை ஏலம் நடைபெறுவதற்கு முன்பு, இந்த ஏலம் மூலம் 5 லட்சம் கோடி ரூபாய் அளவிற்கு மத்திய அரசுக்கு வருமானம் கிடைக்கும் என மத்திய அமைச்சர்கள் சிலர் ஆரூடம் கூறியதாக சுட்டிக்காட்டியுள்ளார்.
நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்
ஆனால் தற்போது இந்த ஏலம் மூலம், 1,50,173 கோடி ரூபாய் மட்டுமே வருமானம் கிடைத்திருப்பதாக மத்திய பாஜக அரசு அறிவித்திருப்பது நாட்டுமக்களுக்கு பேரதிர்ச்சி அளித்திருப்பதாக கே.எஸ். அழகிரி தமது அறிக்கையில் கூறியுள்ளார். மத்திய அரசின் சொந்த நிறுவனமான பிஎஸ்என்எல் இந்த நிறுவனத்தில் பங்கேற்காமல், முழுக்க முழுக்க தனியார் நிறுவனங்கள் மட்டுமே 5ஜி ஏலத்தில் பங்கேற்றது, மோடி அரசின் பாரபட்சமான அணுகுமுறையையே காட்டுவதாக தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டித் தலைவர் கே.எஸ்.அழகிரி தனது அறிக்கையில் சுட்டிக்காட்டியுள்ளார்.
முன்னர் 4ஜி அலைக்கற்றை ஏலம் நடந்தபோது அரசுக்கு கிடைத்த வருவாயை ஒப்பிடுகையில், 5ஜி ஏலத்தில் 134 மடங்கு அதிக வருவாய் கிடைத்திருக்க வேண்டும், ஆனால் 5ஜி ஏலத்தில் மத்திய அரசுக்கு கிடைத்ததோ சுமார் 1.5 லட்சம் கோடி ரூபாய் மட்டுமே என்றும் கே.எஸ்.அழகிரி கூறியுள்ளார். அதாவது 5ஜி ஏலத்தில் சுமார் மூன்றரை லட்சம் கோடி ரூபாய் அளவிற்கு மோசடி நடந்துள்ளதாகவும் அவர் குற்றம்சாட்டியுள்ளார்.
அரசுக்கு கிடைத்திருக்க வேண்டிய லட்சக்கணக்கான கோடி ரூபாயை, இந்த மோசடி மூலம் சில தனியார் நிறுவனங்களுக்கு மத்திய பாஜக அரசு மடைமாற்றிவிட்டுள்ளதாகவும் கே.எஸ்.அழகிரி தமது அறிக்கையில் தெரிவித்துள்ளார்.
மத்திய அரசின் பொதுத்துறை நிறுவனமான பிஎஸ்என்எல் 2ஜி மற்றும் 3ஜி அலைக்கற்றை மூலமே செல்போன் சேவையை வழங்க நிர்பந்திக்கும் மத்திய பாஜக அரசு, தனியார் நிறுவனங்களைப் போல் அதி நவீன 4ஜி சேவையை பிஎஸ்என்எல். வழங்க அனுமதிக்காதது கண்டிக்கத்தக்கது என்றும் கே.எஸ்.அழகிரி குறிப்பிட்டுள்ளார். 5ஜி அலைக்கற்றை ஏலத்தை நிச்சயம் நீதிமன்ற ஆய்வுக்கு உட்படுத்த வேண்டும் என்று வலியுறுத்தியுள்ள தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் கே.எஸ்.அழகிரி, இந்த விவகாரத்தில் விசாரணையிலிருந்து மத்திய பாஜக அரசு தப்ப முடியாது என்றும் தமது அறிக்கையில் கூறியுள்ளார்.