கிருஷ்ண ஜென்மபூமி வழக்கு – ஆகஸ்ட் 25 ஆம் தேதிக்கு ஒத்திவைப்பு…!

மதுரா கிருஷ்ண ஜென்மபூமி தொடர்பான வழக்கு ஆகஸ்ட் 25 ஆம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

மதுராவில் அமைந்துள்ள ஷாஹி ஈத்கா மசூதியை அகற்றி, கிருஷ்ண ஜென்ம பூமியை மீட்க வேண்டும் என்று இந்து அமைப்பினர் கோரிக்கை வைத்து வருகின்றனர். இது தொடர்பாக அலாகாபாத் உயர்நீதிமன்றத்தில் வழக்குககள் தொடரப்பட்டு விசாரணை நடைபெற்று வருகிறது.

இந்த நிலையில் கிருஷ்ண ஜென்மபூமி – ஷாஹி ஈத்கா மசூதி தொடர்பான வழக்கு விசாரணையை, ஆகஸ்ட் 25-ஆம் தேதிக்கு அலகாபாத் உயர்நீதிமன்றம் ஒத்திவைத்துள்ளது.

மதுரா மாவட்ட நீதிமன்றத்தில் இவ்வழக்கு தொடர்பான சமரசப் பேச்சுவார்த்தை நடவடிக்கைகள் தொடங்கியுள்ள நிலையில், சம்பந்தப்பட்ட தரப்பினர் விடுத்த கூட்டுக் கோரிக்கையை ஏற்று இந்த ஒத்திவைப்பு மேற்கொள்ளப்பட்டது.

கிருஷ்ண ஜென்மபூமி – ஷாஹி ஈத்கா மசூதி விவகாரம்

உத்தரப் பிரதேச மாநிலத்தைச் சேர்ந்த மதுராவில் கிருஷ்ண ஜென்ம பூமி அமைந்துள்ளது. இங்கு தான் கிருஷ்ணர் பிறந்ததாக நம்பப்படுகிறது. இதற்கு அருகில் ஷாஹி ஈத்கா மசூதி எனும் மசூதியும் உள்ளது. முகலாய ஆட்சியாளர் அவுரங்கசீப்பால் கட்டப்பட்ட இந்த ஷாஹி ஈத்கா மசூதியானது கிருஷ்ண ஜென்ம பூமியில் அமைந்திருந்த கோயிலை இடித்து விட்டு கட்டப்பட்டதாக சர்ச்சை எழுந்தது.

கடந்த 1968-ம் ஆண்டில், கோயிலும், மசூதியும் அருகருகில் இருக்கும் வகையில் இரு அமைப்புகளும் ஒப்பந்தம் செய்து கொண்டன. இந்த ஒப்பந்தம் தற்போதும் செயல்பாட்டில் உள்ளது. இச்சூழலில் அயோத்தி வழக்கின் தீர்ப்பிற்கு பின் இந்த விவகாரம் மீண்டும் எழுந்துள்ளது.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.