ஹிருத்திக் ரோஷன் மற்றும் ஜூனியர் என்.டி.ஆர் நடிக்கும் வார்-2 படத்தில் கியாரா அத்வானி இணைந்தார் என்ற தகவல் வெளியாகி ரசிகர்களை மகிழ்வித்துள்ளது.
பாலிவுட்டில் ஹிருத்திக் ரோஷன் மற்றும் டைகர் ஷெராஃப் நடித்து 2019-ம் ஆண்டு வெளியான படம், ‘வார்’. யாஷ் ராஜ் பிலிம்ஸ் நிறுவனத்தின் தயாரிப்பில் உருவான இத்திரைப்படத்தில் வாணி கபூர் நாயகியாக நடித்திருந்தார். ரூ.170 கோடி பட்ஜெட்டில் உருவான இந்தப் படம் ரூ.475 கோடிக்கு மேல் வசூலித்ததாக தெரிகிறது. சித்தார்த் ஆனந்த் இயக்கிய இந்தப் படத்தின் 2-ம் பாகம் இப்போது உருவாக இருக்கிறது.
ஹிருத்திக் ரோஷனுடன் ஜூனியர் என்.டி.ஆர் நடிக்கும் இத்திரைப்படம் பான் இந்தியா முறையில் உருவாகிறது. இத்திரைப்படத்தை அயன் முகர்ஜி இயக்குகிறார். இவர், ‘பிரம்மாஸ்த்ரா’ படத்தை இயக்கி பிரபலமானவர்.
வார்-2 படத்திற்காக சில கதாநாயகிகளிடம் பேசி வந்த நிலையில் கியாரா அத்வானி நாயகியாக நடிப்பது உறுதியாகியிருப்பதாக தெரிகிறது. இதுகுறித்த அறிவிப்பு விரைவில் வெளியாக இருக்கிறது. இவர் ஷங்கர் இயக்கத்தில் ராம்சரண் நடிக்கும் ‘கேம் சேஞ்சர்’ படத்தில் இப்போது நடித்து வருகிறார். இந்நிலையில் வார்-2 திரைப்படத்தில் 2 கதாநாயகிகள் நடிக்க உள்ள நிலையில் மற்றொரு கதாநாயகியை தேர்வு செய்யும் பணியில் படக்குழு தீவிரமாக ஈடுபட்டுள்ளது.







