குஷி திரைப்படம் நெட்பிளிக்ஸ் ஓடிடி தளத்தில் வருகிற அக்டோபர் 1ஆம் தேதி வெளியாகவுள்ளதாக அதிகாரபூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது.
தமிழ், தெலுங்கு திரையுலகில் முன்னணி நடிகையாக பல்வேறு படங்களில் நடித்து வருபவர் சமந்தா. இவருடன் நடிகர் விஜய் தேவரகொண்டா நடிப்பில் உருவாகியுள்ள படம் குஷி. இப்படத்தில் ஜெயராம், சச்சின் கெடகர், முரளி ஷர்மா, லக்ஷ்மி, அலி, ரோகிணி, வெண்ணிலா கிஷோர், ராகுல் ராமகிருஷ்ணா, ஸ்ரீகாந்த் ஐயங்கார், சரண்யா உள்ளிட்டோர் நடித்துள்ளனர்.
இந்த திரைப்படத்தை, ஷிவா நிர்வாணா இயக்கியுள்ளார். மைத்ரி மூவி மேக்கர்ஸ் நிறுவனம் தயாரித்துள்ள இப்படத்துக்கு ஹிஷாம் அப்துல் வஹாப் இசையமைத்துள்ளார். தெலுங்கில் உருவாகும் இப்படம் தமிழ், மலையாளம், கன்னடம், இந்தி ஆகிய மொழிகளிலும் பான் இந்தியா படமாக 5 மொழிகளில் செப்.1-ம் தேதி திரையரங்குகளில் வெளியானது.
குஷி திரைப்படம் 200க்கும் மேற்பட்ட திரையரங்குகளில் தமிழ் பதிப்பும், சில திரையரங்களில் தெலுங்கு பதிப்பும் வெளியானது. தெலுங்கில் நல்ல வரவேற்பும், தமிழில் கலவையான விமர்சனமும் பெற்ற குஷி திரைப்படம் 3 நாள்களில் ரூ.70.23 கோடி வசூலித்துள்ளதாக படக்குழு தனது அதிகாரபூர்வமாக அறிவித்தது. தற்போது தியேட்டர்களின் எண்ணிகையும் உயர்ந்துள்ளது குறிப்பிடத்தக்கது.
இதனைதொடர்ந்து நடந்த வெற்றி விழாவில் நடிகர் விஜய் தேவரகொண்டா நெகிழ்ச்சியுடன் பேசினார். குஷி பட வெற்றிக்கு ரூ.1 கோடியை மக்களுடன் பகிர்ந்துக்கொண்டால்தான் தூக்கம் வரும். அதற்காக 100 குடும்பங்களை தேர்ந்தெடுத்து தலா ரூ.1 இலட்சம் பரிசளிக்க இருப்பதாக கூறியிருந்தார்.
இந்த நிலையில், குஷி திரைப்படம் நெட்பிளிக்ஸ் ஓடிடி தளத்தில் வருகிற அக்டோபர் 1ஆம் தேதி வெளியாகவுள்ளதாக அதிகாரபூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது. தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், ஹிந்தி ஆகிய மொழிகளில் பார்க்கலாம்.







