நீலகிரி மாவட்ட எல்லையில் அமைந்துள்ள கேரளா மாநிலம் புல்பள்ளி அமரகுனி கிராமத்தில் கடந்த 15 நாட்களாக வயது முதிர்ந்த புலி ஒன்று கால்நடைகளை தாக்கி வேட்டையாடி வந்தது. அப்பகுதியில் புலி நடமாட்டம் காரணமாக 144 தடை விதிக்கப்பட்டிருந்தது.
இதனை தொடர்ந்து, கேரளா மற்றும் கர்நாடகா வனத்துறையினர் கால்நடை மருத்துவ குழுவுடன் தனிக்குழு அமைத்து புலியைப் பிடிக்க கூண்டு அமைத்து கண்காணித்து வந்த நிலையில், இன்று காலை புலி கூண்டில் சிக்கியது.
பிடிபட்ட புலி 13 வயதுடையது என வனத்துறையினர் தெரிவித்தனர். புலிக்கு முதலுதவி சிகிச்சைக்குப் பிறகு கர்நாடக மாநிலம் மைசூரில் உள்ள உயிரியல் பூங்காவில் பராமரிக்கப்படும். தொடர்ந்து, புலி பிடிபட்டதால் 144 தடை திரும்பப் பெறப்பட்டது. தற்போது, கிராம மக்கள் நிம்மதி அடைந்தனர்.







