சிபிஐக்கு புதிய இயக்குநராக கர்நாடக மாநில டிஜிபி பிரவீன் சூட் நியமிக்கப்பட்டுள்ளார்.
மத்திய புலனாய்வு அமைப்பின் (சிபிஐ) இயக்குநராக உள்ள சுபோத் குமார் ஜெய்ஸ்வால் வரும் 25-ம் தேதி ஓய்வுபெற உள்ளார். இதையடுத்து புதிய இயக்குநரை நியமிப்பதற்கான நடைமுறைகளை மத்திய அரசு தொடங்கியது.
இதையடுத்து ஐபிஎஸ் அதிகாரி பிரவீன் சூட், மத்திய புலனாய்வுப் பிரிவின் (சி.பி.ஐ) இயக்குநராக 2 ஆண்டுகளுக்கு பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான உயர் அதிகாரம் கொண்ட தேர்வுக் குழுவால் ஞாயிற்றுக்கிழமை நியமிக்கப்பட்டார்.
சூட் 1986-பேட்ச் இந்திய போலீஸ் சர்வீஸ் (ஐபிஎஸ்) கர்நாடக கேடர் அதிகாரி மற்றும் ஜெய்ஸ்வாலுக்குப் பிறகு நாட்டின் மூத்த ஐபிஎஸ் அதிகாரி ஆவார். 1986-பேட்ச் கர்நாடக கேடர் ஐபிஎஸ் அதிகாரி இந்த பிரவீன் சூட், ஐஐடி-டெல்லி, ஐஐஎம்-பெங்களூரு மற்றும் நியூயார்க்கில் உள்ள சைராகுஸ் பல்கலைக்கழகத்தின் முன்னாள் மாணவரும் கூட.
தற்போது கர்நாடகாவில் காவல்துறை தலைமை இயக்குநராக உள்ள சூட், இதற்கு முன்பு பெல்லாரி மற்றும் ராய்ச்சூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளராகவும், துணை காவல் ஆணையராகவும் (சட்டம் ஒழுங்கு) பெங்களூர் நகர கூடுதல் காவல் ஆணையராகவும் (போக்குவரத்து), மைசூர் நகர காவல்துறை ஆணையராகவும் இருந்துள்ளார். ஐபிஎஸ் அதிகாரி மொரீஷியஸ் அரசாங்கத்தின் போலீஸ் ஆலோசகராகவும் பணியாற்றியுள்ளார்.
2011 வரை பெங்களூரு போக்குவரத்து காவல்துறையில் கூடுதல் போலீஸ் கமிஷனராகவும் பணியாற்றிய அனுபவம் கொண்ட பிரவீன் 1996ல் சிறந்த சேவைக்கான கர்நாடக முதலமைச்சரின் தங்கப் பதக்கத்தையும், 2002ல் சிறந்த சேவைக்கான போலீஸ் பதக்கத்தையும், 2011ல் சிறந்த சேவைக்கான ஜனாதிபதி பதக்கத்தையும் பெற்றிருக்கிறார்.
கூடுதல் காவல்துறை இயக்குநராக (கணினி பிரிவு) பணியாற்றிய காலத்தில், சூட், மத்திய நெட்வொர்க்குடன் காவல் நிலையங்களை இணைப்பதன் மூலம் நிகழ்நேர கண்காணிப்பு மற்றும் தகவல்களைப் பகிர்வதற்காக கர்நாடகாவில் குற்றவியல் கண்காணிப்பு நெட்வொர்க் அமைப்பைச் செயல்படுத்துவதற்கான பணியை மேற்பார்வையிட்டார்.
இந்நிலையில் கடந்த மார்ச் மாதம், கர்நாடக காங்கிரஸ் தலைவர் டி.கே. சிவக்குமார், டிஜிபி பிரவீன் சூட்டை “நாலயக்” (மதிப்பற்ற) என்று அழைத்தார். மேலும் காங்கிரஸ் கட்சி ஆட்சிக்கு வந்தால் அவர் மீது நடவடிக்கை உறுதி என தெரிவித்திருந்தார். பாரதிய ஜனதா கட்சிக்கு சாதகமாக டிஜிபி இருப்பதாக டிகே சிவக்குமார் கூறினார். சூட் கர்நாடக காவல்துறையின் பொறுப்பில் இருந்தபோது, காங்கிரஸ் தலைவர்களுக்கு எதிராக சுமார் 25 வழக்குகள் பதிவு செய்யப்பட்டன, ஆனால் பாஜக தலைவர்களுக்கு எதிராக எதுவும் செய்யவில்லை என்று அவர் கூறினார். இந்த நிலையில், பிரவீன் சூட், சிபிஐ இயக்குநராக நியமிக்கப்பட்டுள்ளார்.








